மரண வாசம்

அன்பானவர் என்றாலும்
அறிவானவர்,
நல்லவரே ஆனாலும்
நீட்டிய கைகளை மறுதலித்து
அஞ்சியபடி
தாயின் கழுத்தை
கட்டிக் கொள்ளும் குழந்தை..
புரியாத மரணத்திற்கு
பயந்து வாழ்வைக்
கட்டிக் கொள்ளும்
நாம்.

நடக்கும் மழை

கோடிக்கால்களில்
நடக்கும் மழைக்கு
நொடிப் பொழுதும்
நிலைக்காத சுவடுகள்

எனது நாட்கள்..

அடுத்தென்ன நடக்கும்
முடிவு எப்படி இருக்கும்
என்னென்ன திருப்பமோ?
எதிர்பார்த்த படியோ
எதிர்மறையாகவோ
படிக்கிறேன்
கை தேர்ந்த எழுத்தாளனின்
சுவாரஸ்ய தொடர்கதையாய்
என் நாட்களை தினமும்…

வாழ்வு

அம்மாவுக்கு
அப்பாவுக்கு
உடன் பிறப்பிற்கு
மனைவிக்கு
மழலைக்கு
நட்புக்கு
சுற்றத்திற்கு
பிய்த்துக் கொடுத்தது போக
எஞ்சிய கையளவு என்னை
என்ன செய்யலாம்?
எண்ணக் கண் மூடினேன்
களவாடியது மரணம்..

எல்லையின் எல்லைகள்…

‘இதுதான் எல்லை’
இருந்தவன்
குறித்து மறைய…
வந்தவன் கண்களில்
இடம் தெரிய…
கொஞ்சம் நகர்த்தி
கொஞ்சம் நகர்த்தி
எல்லைகள் நடக்கின்றன
எல்லையற்று….

முரண்

வீட்டிற்குள்
கூட்டிப் பெருக்கி
சமைத்துக் கழுவி
துவைத்துப் பிழிந்து
களைத்துப் போன
மனைவிகள் காத்திருக்கிறார்கள்
கணவனின் விடுமுறையில்
ஊர் உலகு பார்க்க…
உறங்கப் பொழுதின்றி
ஊர் உலகு சுற்றி
உழைத்துக் களைத்துச்
சலித்துப் போன
கணவர்கள் காத்திருக்கிறார்கள்
தனது விடுமுறையில்
வீட்டில் ஓய்வெடுக்க…
( ஆனந்த விகனில் முத்திரைக் கவிதையாக தேர்வாகி 2000 பரிசு பெற்ற கவிதை)

சுழற்சி

அப்பாவுக்கு
அரசாங்க வேலை.
நினைத்த போது வரும்
ஊர் மாற்றல்
உத்தரவு.
நாடோடியாய்
வாழ நேர்ந்தது
பல ஊர்களில்..
சொந்த ஊர் என்பது
எப்போதேனும்
எட்டிப் பார்க்க…
பள்ளிப் படிப்பிற்கு
பல ஊர்…
கல்லூரிப் படிப்பிற்கு
கண் காணாத் தொலைவில்
ஒரு ஊர்…
வேலையில் இருப்பதோ
வேறு ஊர்.
‘ எது உன் ஊர் ‘
யாரேனும் கேட்டால்
சொல்ல முடியவில்லை
சட்டென்று பதில்.

3

வாழ்ந்த காலத்தை
மனசுக்குள்
வாழும் காலத்தை
“இறந்த காலம்”
என்று சொல்கிறது மொழி

2

பிள்ளைகள் பள்ளி கிளம்ப
பெரியவர்கள்
அலுவலகம் கிளம்ப
பகலெல்லாம்
தனிமையில் காத்திருக்கின்றன
நகரத்து வீடுகள்.

1

கோடிக் கோடி
பிரதிகள் எடுக்கின்றன
நீர் நிலைகள்.
ஒற்றை நிலவை.