இழந்த தோட்டங்கள்….

அகால அழைப்புமணியென
திடுமென வரும்
ஊர் மாற்றல் உத்தரவு.
பொருட்களோடு லாரியில்
ஏறும் போது
பொங்கும்
அப்பா அம்மாவின்
கண்ணீரில் இருக்கும்
அத்தனை வருசம்
பழகியவர்களைப் பிரியும் வலி.
குறிப்பாய்
அரசுக் குடியிருப்பின்
வீட்டு முற்றத்தில்
வேலி அடைத்து
வியர்வை சிந்தி
உண்டாக்கிய
ரோஜாக்களையும்,
டேலிகாப் பூக்களையும்
டிசம்பர் பூவோடு
கனகம்பர மல்லிகளையும்
புதினா, கொத்த மல்லிகளையும்
துளசி செம்பருத்தியையும்
மரமாகப் போகும்
கருவேப் பிள்ளையையும்
அவரை, பூசணிக் கொடிகளையும்
இன்னும்
இதர தாவர வர்கங்களால்
நிறைந்த தோட்டத்தை
பிரியும் வலி.
பாதிப் பயணத்தில்
அம்மா சொல்லும்
போதுமுடா சாமி
தோட்டம் போட்டதும்
செடி வளத்துனதும்
போற இடத்தில
செவனேனு இருக்கணும்
இனிமே
மண்ண கிண்டிகிட்டு
கெடக்க கூடாது.
அப்பாவின் தலையாட்டல்
அதை ஆமோதிக்கும்.
ஆனாலும்
அங்கிருந்து கிளம்பும் போதும்
இருக்கும்
பிரிய ஒரு தோட்டம்…..