இரவல் கனவுகள்

எந்த முன்னறிவிப்பில்லாமல்
பொழிந்த
ஒரு இனிய மழையென
நேற்று
என் கனவில் நீ..
இன்னொரு சந்திப்புக்கு
உத்தரவாதம் இல்லா
நெடும் பிரிவு….
திரும்பக்கேட்கும் போது
மறுக்க முடியாத
இரவல் பொருளைப் போல்
இழந்தேன் உன்னை…
என் கிளைகளில்
ஆயிரம் பறவைகளின் கூடுகள்.
உயிர்விடுவதற்கு
முந்தைய நொடியில்
அன்போடும் அக்கறையோடும்
வேரில் நீர் வார்த்தவை
உன் கரங்கள்…
மரணம் விழி மூடும் முன்
இருக்கிறதா
இன்னொரு சந்திப்பு
கனவில் கேட்டாய்…
அற்புதமானதும்
அழகானதுமான
மறக்க முடியாத
ஒரு வசந்தத்தின் போது
அருகில் இருந்திருக்கிறோம்.
அது போதும்…
உயிர் உள்ள வரை…
சொல்ல நினைக்கிறேன்
மறுமுறை
எப்போது வருவாய் கனவில்…