அவன்

marker-drawing-man-male-face

ஓவியக் கல்லூரியை நோக்கி கார் முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கு நடக்கும் விழாவிற்கு எங்கள் இயக்குனர் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருக்கிறார். தலை போவதால் தவிர்க்க முடியாமல் வாலாக நானும் உடன் சென்று கொண்டிருந்தேன். இரட்டைவாலாக என் இனமாகிய உதவி இயக்குனர் ஒருவரும் உடன் வந்து கொண்டிருந்தார்.

உதவியாளர்கள் அருகில் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது சில இயக்குனர்களால். பாத்ரூம் போவது, மனைவியிடம் போவது தவிர மற்ற நேரமெல்லாம் உதவியாளர்கள் உடன் இருக்க வேண்டும். அதற்கு பாசமோ பற்றோ காரணம் இல்லை. பொது இடங்களில் அப்படி போவது ஒரு கெத்தாக இருக்கும். இயக்குநரின் செல் போனை பாது காக்க, பதில் சொல்ல. இன்ன பிற ஏவல்கள் புரிய. பொது நிகழ்ச்சியில் பேசியது பற்றி ஜால்ராத் தனமான கருத்துக்களை கேட்க. எல்லாவற்கும் மேலாக தான் கொடுக்கும் 50 ரூபாய் பேட்டாவிற்கு முடிந்த வரை பிழிந்து விட வேண்டும் என்ற நல்லெண்ணமும் காரணம்.

நடு இரவில் இனி எங்கு சாப்பிடுவார்கள் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல் தெரு முனையில் காரை நிறுத்தி இறக்கி விட்டு நாளைக்கு வழக்கம் போல எட்டரை மணிக்கு வந்திரு என்ற கட்டளையோடு பயணம் நிறைவு பெறும்.

பொதுவாய் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏதாவது சொல்லி சமாளிக்கப் பார்ப்பேன். ஆனால் இன்று உற்சாகமாகவே கிளம்பினேன். காரணம் சுரேந்திரன்.

ஒவியக் கல்லூரி என்ற வார்த்தையை எப்போது கேட்டாலும் அவன் தான் நினைவுக்கு வருவான்.

சுரேந்திரன். சென்னைக்கு வந்த புதிதில் கிடைத்த முதல் நண்பன்.

கோவையிலிருந்து வந்திருந்த நண்பருடன் அவருக்குத் தெரிந்த ஒருவரைப் பார்ப்பதற்காக தி.நகர் போகும் போது தெரியாது எனக்கு ஒரு நண்பன் கிடைக்கப் போகிறான் என்று.

அறிமுகக் கை குலுக்கலின் போது பார்க்க வந்தவரின் மகன் என்று நினைத்தேன்.

சொந்தக்காரரான அவரின் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான் சுரேந்திரன்.

அப்போது அவன் புதுக் கல்லுரியில் முதல் ஆண்டு வரலாறு படித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனின் லட்சியமெல்லாம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து மாபெரும் ஓவியனாக வேண்டும் என்பதாக இருந்தது.

இந்த ஆண்டு தேர்வு ஆகாததால் வரலாற்றுப் பாடத்தை உறவுகளின் வற்புறுத்தல் காரணமாக சிலுவை போல் சுமந்து கொண்டிருந்தான். இன்னும் கொஞ்சம் பயிற்சித்து அடுத்த ஆண்டு எண்ணியது எய்தும் உறுதியில் இருந்தான்.

நெடு நெடுவென்ற ஆறடி உயரமும். நடுவகிடு எடுக்கப் பட்டு சற்று அதிகமாய் வளர்க்கப் பட்டிருந்த முடியும், ஒடுங்கிய கன்னங்களும் கனவுகள் சுடரும் பெரியபெரிய கண்களுமாக
ஓவியனை போலத் தான் இருந்தான்.,

பார்க்கப் போயிருந்தவர் படம் வரையரது ஒரு பொழப்பா என்றார். அவன் முகம் சுருங்கியது.

சினிமாவிற்காக போராட தயாராய் வந்திருந்த எனக்கு அவனைப் புரிந்து கொள்ள முடிந்தது.

கிளம்பும் முன் தனியே கிடைத்த சந்தர்ப்பத்தில் இது உன்னோட வாழ்க்கை, உன்னோட கனவு, யார் என்ன சொன்னாலும் மனச விட்டுறாதேன்னு நம்பிகை சொல்லி விட்டு கிளம்பினேன்.

சந்தித்துப் பிரிந்த மறுநாள் மாலை எனது அலுவலகத்திற்கு வந்து விட்டான் சுரேந்திரன். எனது அலுவலகம் என்றால் எனக்குச் சொந்தமானது என்று அர்த்தமில்லை.

அப்போது சென்னை வந்த புதிது. கலைவாணர் அரங்கதிற்கு எதிரே எழுந்தருளி இருந்த சின்ன ஒரு தனியார் நிறுவனத்தில் பெயரளவு சம்பளத்திற்கு பெயரளவுக்கு வேலை செய்து கொண்டு இருந்தேன். இராத் தங்கலும் அங்கேயே.

சினிமாவிற்காக வந்திருக்கிறான். சீக்கிரம் போய் விடுவான் என்று தெரிந்தே கிடைத்த வேலை. இவன் ஏதாவது சாதிப்பான் என்ற நம்பிக்கையில் எங்கள் ஊர் துரை டாக்டர் செய்த சிபாரிசில் கிடைத்த வேலை அது.

அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு போனில் பதில் சொல்லும் வேலை.சனி ஞாயிறுகளில் பிரபல இயக்குனர்களின் வீட்டின் முன்னால் அல்லது அலுவகத்தின் முன்னால் வாய்ப்புக் கேட்டு தவமிருக்கும் வேலை.

மாலை 6 மணிக்கு வேலை முடியும் நேரத்தில் சுரேந்தரன் வந்தான். நான் எதிர் பார்க்கவே இல்லை.

தன்னைப் புரிந்து கொள்பவர்களைத் தேடி செய்த யாத்திரைகளின் ஒரு பகுதியாக என் முன்னே நம்பிக்கையுடன் அமர்ந்திருந்தான்.

நிறையப் பேசினோம். ஆறுதலும் நம்பிக்கையுமாய் அவரவர் கனவுகளைப் பகிர்ந்து கொண்டோம். பேச்சின் இடையில் தம்மடிக்க வெளியில் வந்தோம். அவனுக்கும் ஒரு சிகரெட் வாங்கி நீட்டிய போது மறுத்தான். டீ, காபி கூட குடிக்காதவனாக இருந்தான். ஆச்சரியமாகத் தான் இருந்ததது.

அடுத்தடுத்த நாட்களில் என்னை அசையாமல் உட்கார வைத்து வித விதமாய் வரைந்து பழகத் துவங்கினான். ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து இருப்பது கஷ்டம் தான். என் கவிதைகளைப் படிக்கக் கொடுப்பது, நான் படமாக்கப்போகும் எதிக்காலக் கதைகளைச் சொல்வது என்று பதிலுக்கு பழி வாங்கி விடுவேன்.

மனம் குவித்து கூர்மையாய் பார்த்து அசுரத் தனமாய் வரைந்து தள்ளுவான். ஒற்றை பென்சிலையும் வெள்ளைக் காகிதத்தையும் வைத்துக் கொண்டு எதிரில் உள்ள எதையும் அச்சு அசலாய் வரைந்துவிடுவதைப் பார்க்கும் போது மாயஜாலங்கள் செய்யும் ஒருவனை போலவே அவன் எனக்குத் தெரிவான்.

ஒருமுறை நூற்றி ஐம்பது ஹைகூ கவிதைகள் எழுதி வைத்திருந்த நோட்டை படிக்க எடுத்துப் போனான். மறுநாள் அதைத் திருப்பிக் கொடுத்த போது அவன் வைத்திருப்பது பென்சிலா அல்லது பென்சில் போல வடிவில் இருக்கும் மந்திரக் கோலா என்று வியந்து போனேன். அத்தனை கவிதைகளுக்கும் அற்புதமான ஓவியங்கள் வரைந்திருந்தான். அந்த நோட்டே
அச்சடிக்கப் பட்ட புத்தகம் போலவே இருந்தது.

வாரத்திற்கு இருமுறையாவது ஓவியக் கல்லூரிக்கு போய் வருவான். இப்போது படித்துக் கொண்டு இருக்கிறவங்க கூட ஒன்ன மாதிரி ஒழுங்கா போக மாட்டாங்க போல என்று கிண்டல் செய்தால் சிரித்துக் கொள்வான். முதன் முறையாக சுற்றுலா சென்று வந்த பள்ளிச் சிறுவன் போல கல்லூரியை வருணிப்பான்.

வாய்ப்பிருக்கும் போதெல்லாம் ஒன்றாக சுற்றுவோம். சென்னைக்கு அவன் சீனியர் என்பதால் ஓவ்வொரு இடமாக அவன் தான் அறிமுகப் படுத்தினான். நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்து கடைசிப் பேருந்தை விட்டு விட்டு அடிக்கடி
என்னோடேயே தங்கிக் கொள்வான்.

உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐஸ் கட்டிப் போல கண் முன்னாலேயே காணாமல் போகும் அந்த நட்பு என்று நினைக்கவே இல்லை.

அதற்கு அவனோ நானோ கூட காரணம் இல்லை. செமஸ்டர் விடுமுறைக்கு ஊருக்கு கிளம்பினான் சுரேந்திரன். ஒரு மாதம் விடுமுறை. கிளம்பவே மனசில்லை அவனுக்கு. முடிந்த வரையில் சீக்கிரம் வருவதாகச் சொல்லிக் கிளம்பினான்.

ஒரு மாதத்திற்குள் என்னென்னவோ நடந்து விட்டது. அவன் கிளம்பி பத்து நாட்களுக்குப் பிறகு நல்ல ஒரு நாளில் எனது அலுவலகம் என்றென்றைக்குமாக இழுத்துச் சாத்தப்படது. உரிமையாளருக்கான கடன் நெருக்கடி முன்னிட்டு எடுக்கப் பட்ட முடிவாய் இருந்தது அது.

தற்காலிக ஏற்பாடாக வடபழநியில் இருந்த ஒரு நண்பனின் அறைக்கு குடிபெயர்ந்தேன். அடுத்து என்ன செய்வது என்ற கேள்விகளுக்கு விடைகள் தேடி முகட்டை பார்த்த படி முடங்கி கிடந்த போது தான் அப்பாவின் கடிதம் வந்தது.

அப்பாவுக்குத் தெரிந்த ஒரு நண்பரின் சிபாரிசு கடிதம் அது. பிரபல நடிகர் ஒருவரைச் சந்தித்து தரச் சொல்லி அறிவுறுத்தப் பட்டிருந்தேன். சிபாரிசு கடிதம் தருபவர் நடிகரோடு ஒன்றாகப் படித்தவர்.

நம்பிக்கை இல்லாமல் தான் நடிகரின் அலுவலுகத்திற்குப் போனேன். ஆனால் அந்தக் கடிதம் ஆயிரம் பூட்டுகளைத் திறந்து, ஒரு வார இடைவெளியில் நடிகர்—- தயாரித்து நடிக்கும் படத்தில் உதவி இயக்குனராக்கியது.

தேர்ந்த ஒரு கரத்தினால் சுழற்றி விடப் பட்ட பம்பரம் போல அப்படி ஒரு சுழற்சி. ஒன்றரை வருடம் கழித்து தான் படம் முடிந்து பம்பரம் கீழே விழுந்தது.

நேரம் கிடைத்ததும் முதல் வேலையாய் சுரேந்திரனை தேடிப் போனேன். அவர்கள் வீடு மாறி இருந்தார்கள். பக்கத்து வீட்டில் யாருக்கும் மாறிப் போன முகவரியைச் சரியாய் சொல்லத் தெரியவில்லை.

அப்படியாக நானும் அவனும் ஓரே ஊரில் இருந்த படியே தொலைந்து போய்விட்டோம்.

எல்லாம் நடந்து ஆறு வருடங்கள் ஓடி விட்டது. இது எனக்கு நாலாவது படம். பிரபல இயக்குனர்—- இடம் இணை இயக்குநராய் ஓவியக் கல்லூரிக்கு அவரோடு போய் கொண்டு இருக்கிறேன்.

இந்த ஆறு வருட காலத்தில் சுரேந்திரன் என்ன ஆனான் என்று தெரியவிலை. சென்னையில் இருக்கிறானா? இல்லை வெளியூர்லோ,சொந்த ஊரிலோ இருக்கிறானோ? ஓவியக் கல்லூரியில் படித்தானா? இல்லையா? ஒன்றும் தெரியாது.
இன்றைக்கு மனசு முழுவதும் நினைவாய் என்னோடே இருக்கிறான்.

கார் ஓவியக் கல்லூரிக்குள் நுழைந்தது.

சுரேந்திரனின் கோவில் இது என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

அனைவரும் இயக்குனருக்காக காத்திருந்தார்கள். இறங்கியதும் இயக்குனரின் கழுத்தில் மாலை விழுந்தது. அதை அப்படியே கழற்றி அருகில் இருந்த என்னிடம் கொடுத்தார்.

விழா நடை பெற தயாராய் இருந்ததால் உடனடியாக மேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டார் எங்கள் இயக்குனர். மேடையில் ஏறும் முன்னால் செல் போனை என்னிடம் கொடுத்து விட்டுத் தான் போனார்.

முன் வரிசையில் அமர்ந்து கொள்ள இருக்கைகள் காட்டப் பட்ட போது நண்பரை உட்கார வைத்து விட்டு, மாலையைக் கொண்டு காரில் வைக்கும் காரணம் சொல்லி தப்பி வந்தேன்.

அங்கே நின்றிருந்த ஓட்டுநரிடம் மாலையை ஒப்படைத்து விட்டு கல்லூரியை சுற்றிப் பார்க்க கிளம்பினேன்.

வழியில் அங்கங்கே சிற்பங்களாய் இருந்தது. சுவர்கள் முழுவதும் மாணவர்களின் ஓவியங்கள். வர்ண கலாட்டாவாக இருந்தது.

கழிப்பறை ஒன்றின் சுவரில் முழுதும் வண்டுகள் எதையோ தனது கால்களில் எடுத்துக் கொண்டு போய் கொண்டு இருந்ததைப் போல் ஓவியம். சிரிப்பு வந்தது. கிராமத்து அநுபவம் இருப்பவர்களால் தான் அதை ரசிக்க முடியும். வண்டுருட்டாம் பழம் என்று சிறுவர்கள் கிண்டல் செய்வார்கள். பொருத்தமான இடத்தில் பொருத்தமான ஓவியம்.

அங்கங்கே மரங்கள். பூக்கள். சிற்பங்கள்.ஓவியங்கள். ஒவ்வொன்றைப் பார்க்கும் போதும் பின்னணியில் சுரேந்திரனின் குரல் விவரணை எனக்குள் ஓடியது.

சுற்றி முடித்து திரும்பும் போது விழா பாதி முடிந்திருந்தது. யாரோ ஒருவர் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டு இருந்தார்.

நிறைய மாணவர்கள் பெண்களுக்கு இணையாக முடி வளர்த்திருந்தார்கள். பாதிக்குப் பாதி மாணவர்கள் பிரஞ்சு தாடி வைத்திருந்தார்கள். பெண்கள் குறைவாகவே இருந்தார்கள்.

இவர்களுக்கு நடுவே சுரேந்திரன் எங்காவது இருந்து விட மாட்டானா என்றொரு ஆசை விட்டு விட்டு மின்னிக் கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதும் தெரிந்து தான் இருந்தது.

முதல் வரிசையில் இருந்து ஒவ்வொருத்தரையாய் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

மாணவர்களில் சில பேர் விழா நடக்கும் இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி குழு குழுவாக நின்று அரட்டை அடித்துக் கொண்டும், தம் அடித்துக் கொண்டும் இருந்தார்கள்.

அவர்களையும் ஒவ்வொருவராய் ஆராயத் தவறவில்லை எனது கண்கள்.

இதற்கிடையில் இயக்குனரின் செல் பேசிக்கு அழைப்பு வந்தது, அங்கே சப்தமாய் இருந்ததால் சிறிது தொலைவுதள்ளிப் போய் பேசினேன். இயக்குனரின் வீட்டில் இருந்து அழைப்பு.

பேசிக் கொண்டிருக்கும் போதே எதிரில் போன ஒருவன் சுரேந்திரன் மாதிரியே இருந்தான். நிறம் மங்கி தாடி அடர்ந்த மெலிந்திருந்த அவன் சுரேந்திரன் தானா என்று சந்தேகமாய் இருந்தது.

முழு கவனமும் அவன் மேல் குவிந்து கண்கள் இமைக்காமல்அவன் மீது நிலைத்தது. நடை கூட அவன் மாதிரியே இருந்தது.

அவன் படித்திருந்தாலும் ஆறு ஆண்டுகளுக்குள் படித்து முடித்து வெளியேறி இருக்க வேண்டும். அவனிருப்பதற்கான வாய்ப்பே இல்லை.

ஆனாலும் என்னை அறியாமல் நான் அவனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

ஒருவேளை அவனைச் சந்திக்க வேண்டும் என்ற எனது ஆசைகள் தான் அவனை அழைத்து வந்து விட்டதா? அல்லது அதே ஆசைகள் காரணமாய் எவனோ ஒருவன் என் நண்பனைப் போலவே தெரிகிறானா?

விரைவாய் நடந்து அருகில் போனேன். சுரேந்திரன் இவ்வளவு மெலிந்திருக்க மாட்டானே என்று மனசு முன்னுக்கும் பின்னுக்குமாக அலைக் கழித்தது.

ஒரு கட்டத்தில் மனசு அது அவன் தான் என்று உறுதி செய்தது.

வேக வேகமாக நடந்து அவனைத் முந்தி முன்னால் போய் அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் தான். அவனே தான்.

அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்காமல் அனிச்சை செயலாய் வாய் ‘சுரேந்திரா’ என்றது.

அவன் அதிர்ந்து நின்றான். அவன் தான். அவனே தான்.

அவன் என்னைப் பார்த்த பார்வையில் யார் நீ என்ற கேள்வி இருந்தது. ஆறு வருட காலத்தில் நானும் மாறித் தானே
இருக்கிறேன்.

நான் தான் என்று பெயரைச் சொன்னதும் சலனமற்ற குளத்தில் கல் எறிந்ததும் எழும் சலனம் போல் முகத்தில் ஒரு மாற்றம்.

‘ஆறு வருசத்துக்கு முன்னால வாலஜா ரோட்டுல என்னோட ஆபிஸ்ல என்ன உக்கார வச்சு வரஞ்சு தள்ளுவியே மறந்துட்டயா?’ என்றேன்.

என்றாவது அவனைச் சந்திப்பேன் என்பது எனக்குத் தெரியும். அதை பல முறை கற்பனையில் பார்த்திருக்கிறேன். ஆனால் இது போல் விளக்கங்கள் சொல்ல நேரும் என்று நினைத்தது இல்லை.

ஓ நீயா என்பது போல மெல்லிதாய் அவனிடம் ஒரு புன்னகை. அதை புன்னகை என்று கூட சொல்ல முடியாது. ஒரு தட்டசைவு அல்லது உதடு திறப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். அவ்வளவு தான்.

‘ நான் மூணு படத்தில வேலை பாத்துட்டேன். இப்ப நாலாவது படம். எங்க டைரக்டர் கூட தான் வந்திருக்கேன். நீ இன்னுமா படிக்கிறா?’ என்று கேட்டதும் உடனடியாய் பதிலில்லை.

அவன் கண்கள் சிவந்து கிடந்ததை அப்போது தான் பார்த்தேன்.

சிறிது நேரம் கழித்து ‘யூஜி முடிசிட்டு இப்போ பீஜீ கடைசி வருசம்’ என்று பதில் வந்தது. அதோடு சேர்ந்து மது வாசனையும்.

நன்றாகக் குடித்திருக்கிறான். அதுவும் கல்லுரிக்குள்ளேயே. அதிர்ந்து போனேன். அவனது மாற்றம் நம்ப முடியாமல்
இருந்தது.

கொஞ்ச நேரம் மெளனமாய் நகர்ந்தது. அவன் ஜீன்சுக்குள் கை விட்டு கிங்ஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்தான். ஒன்றை வாயில் பொருத்திய படியே சிகரெட் பாக்கெட்டை என்னிடம் நீட்டினான். அதில் இன்னும் இரண்டு சிகரெட்டுகள் மீதம் இருந்தது. வேண்டாமென்ற மறுப்பாய் தலையை ஆட்டினேன். அவன் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.

ஆழ்ந்து இழுத்து புகையை வெளியேற்றினான். மனிதர்கள் இப்படியா மாறி போக முடியும் நூறு சதவீதமும் என்று வியந்த படி நின்றிருந்தேன். ஒன்றிரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அப்புறம்’ என்றான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.பின் சமாளித்து ‘ஒன்னோட போன் நம்பர் குடு’ என்றேன்.

அவன் முகம் தீவிரமானது’ வீட்டுக்கு மட்டும் தான் போன்ல பேசுறது, போனே ரெம்பத் தொல்லை’ என்றான்.

எனக்கு சுளீரென வலித்தது. என்னடா ஏன் இப்படி ஆகிட்ட என்ன ஆச்சு இப்படி ஏதாவது கேட்டு விட என் நட்பு துடித்தது. ஆனாலும் அவனுக்குள் நடந்திருக்கும் தலை கீழ் மாற்றம்
அதற்கெல்லாம் அனுமதிக்குமா? என்று சந்தேகமாய் இருந்ததால் அமைதியாய் இருந்தேன். அவனும் அமைதியாய் இருந்தான்.

சரி கிளம்பி விடலாம் என்று நினைத்த கணத்தில் கிளம்புறேன் என்ற ஒற்றை வார்த்தை விடை பெறலின் பின் அவன் நடந்து போனான். அவன் நடந்து நடந்து சென்று ஏதோ வகுப்பறைகுள் நுழைந்தான். அவன் சென்று மறைவது வரைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.

ஆனாலும் சுரேந்திரனின் கதைக்கு இது முடிவாக இருக்காது எனத் தோன்றியது. சில நாட்களுக்குப் பிறகோ, இல்லை சில மாதங்கள் ஆண்டுகளுக்குப் பிறகோ ஒரு சந்திப்பு அல்லது ஒரு செய்தி நிகழ சாத்தியமானவைகளாய் எண்ணியதைத் தாண்டி ஏதேனும் திருப்பம் நிகழ்த்தும் என்ற நம்பிக்கையோடு திரும்பி நடக்கத் துவங்கினேன்.

பின்னூட்டமொன்றை இடுக

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்