போலீஸ்

1139931557v0tgzw

எந்த முகத்தை வாழ்வில் இன்னொருமுறை பார்த்து விடக் கூடாது
என்று நினைத்தேனோ அந்த முகம் வந்து நின்றது. வயதான,
கம்பீரமான, மீசை முறுக்கிய போலீஸ் முகம். வகுப்பை கட்டடித்து விட்டு படம் பார்க்கவந்த சந்தோசமெல்லாம் சட்டென்று வடிந்து போய் விட்டது. தியேட்டரின் உள் நுழைந்து சிறிது தூரத்தில் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டு நின்றிருக்கிறது காவல்முகம்.

நான் தான் பார்த்தேன். அவர் பார்க்கவில்லை. பார்த்து விடும் முன்
அப்படியே மறைந்து விட விருப்பம் இருந்தும் முடியாமல் வித்துக்
கொண்டிருந்தேன். சட்டென்று வியர்த்துப் போனது. படம் விட நேரம் இருந்தது. கேஜீ தியேட்டரின் பெரும் படிக்கட்டுகளில் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். கையில் புத்தகம் ஏதும் இருந்தால் முகத்தை மறைத்துக் கொள்ள வசதியாக இருந்திருக்கும். எனக்கெப்படித் தெரியும் இப்படி நடக்கும் என்று.

சட்டென்று எழுந்து போனாலும் பார்த்து விட வாய்ப்பிருக்கிறது.
முகத்தை தலைவலிப்பது போல இரு கைகளையும் நன்றாக
விரித்து மூடிக் கொண்டேன். எவ்வளவு நேரம் இப்படித் தாக்குப்
பிடிக்க முடியும் என்று தெரியவில்லை.

போலீசைக் கண்டதும் மறைந்து கொள்ளும் அளவுக்கு நான்
திருடனோ, பொறுக்கியோ, ரெளடியோ, கொலைகாரனோ அல்ல.
அந்தப் போலீஸ்காரர் என் அப்பாவோ, மாமாவோ, சித்தப்பாவோ
இன்ன பிற சொந்தமோ அல்ல.

எல்லாம் வாசுவால் வந்தது. செமஸ்டர் லீவுக்கு எல்லோரும்
ஊருக்கு கிளம்பி விட்டார்கள். எங்கள் ஊருக்கு கடைசி பஸ்
பொள்ளாச்சியில் இருந்து இரவு 7.30 மணிக்கே கிளம்பி விடும்.
அடித்துப் பிடித்து ஓட வேண்டும். ஹாஸ்டலிலேயே தங்கி விட்டு
காலையில் கிளம்ப முடிவெடுத்தேன்.

மெஸ் மதியத்தோடு க்ளோஸ். வெளியில் சாப்பிட்டு விட்டு
ஹாஸ்டலுக்குள் நுழையும் போது தான் வாசுவைப் பார்த்தேன்.
கொஞ்சம் கொண்டாடி விட்டு காலையில் போகலாமென்று தங்கி
விட்டதாக கண்ணடித்த படி சொன்னான்.

ஹாஸ்டலில் வாழ்வில் ரேக்கிங்கிற்கு பயந்து மறையும் அடிமைத்
தனமான முதல் ஆண்டு. சுதந்திரமான ஆனாலும் மூன்றாம் ஆண்டு
அண்ணன்களுக்கு நடிப்பு மரியாதை செலுத்த வேண்டிய இளவரச
கட்டம் இரண்டாம் ஆண்டு. முற்ற முழுக்க அதிகாரங்கள் கையில்
வந்து சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கும் மூன்றாம் ஆண்டு.

முன்றாமாண்டின் அரச வாழ்வை நான் உட்பட நண்பர்கள் பல பேர் அனுபவித்தாலும், தனது சுதந்திரத்தை கடைசி எல்லை வரை பயன்படுத்தி அதுவும் போதாமல் ரகசியமாய் எல்லைகள் கடப்பவன் வாசு. பணக்கார வீட்டுப் பையன். எல்லாரோடும் இயல்பாய் பழகுவான். கடன் கேட்கும் நண்பர்களுக்கு பணத்தை இனாமாகவே தருவான். எப்போதும் நண்பர்கள் புடை சூழவே இருப்பான். ஹாஸ்டல் கட்டிலில் அற்புதமாய் தாளம் போடுவான். நான் பாட அவன் தாளம் போட எல்லா நாட்களையும் திருவிழாவாக்கும் எங்கள் கச்சேரி.

அரசு விடுதி அதனால் கட்டுப்பாடுகள் கிடையாது. எதாவது ஒரு பேராசிரியரை வார்டனாகப் போடுவார்கள். கூடுதல் சம்பளத்திற்காக ஒப்புக் கொள்ளுவார். ஆண்டுக்கு ஒரு முறை ஹாஸ்டலுக்குள் சும்மா வந்து போவார்.

அதிகப் பட்ச வீரமாய் உடல் வியாபாரப் பெண்களை நள்ளிரவில்
ஹாஸ்டலுக்கே ரகசியமாய் கூட்டி வந்து கூத்தடித்து விடியும்
முன் அனுப்பி வைப்பார்கள். காலையில் செய்தி கசிந்து விடும்.
பெருமூச்சுடன் கற்பனை செய்து ரசிப்போம் முடியாதவர்கள்.

ஆண்டாண்டாய் நடைபெறுகிற வீர சரித்திரத்தில் வாசுவும் இடம் பிடித்தான். என்னையும் வீரனாக்க முயன்று தோற்றுப் போவான். மறுநாள், இரவுச் செய்திகளைச் சொல்லிச் சொல்லி வாலிபத்தை கிண்டல் செய்வான்.

விடுமுறை நாளின் சந்தையை போல ஹாஸ்டலே அமைதியாய் இருந்தது. வாசுக்கு இன்று கொண்டாட்டம் தான். காலையில் சந்திக்கும் போது கேட்டுக் கொள்ளலாம் என்று தூங்கப் போனேன்.

கதவு தட்டும் சப்தம் கேட்ட போது இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகி இருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்தால் வாசு நின்றிருந்தான். ‘செகண்ட் ஷோ போய் இருந்தேன், இங்க வந்து பாத்தா சாவி தொலைஞ்சு போயிருக்கு.’ என்றான். சரி உள்ள வா என்றேன். தயங்கிய படி நின்றவன் நான் தனியா இல்ல என்றான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அஜஸ்ட் பண்ணிகடா என்றான். சரி என்று யோசனையோடு
தலையசைத்தேன்.

ஒரு நிமிட இடைவெளியில் ஒரு பெண்ணோடு வந்தான். தயக்கமில்லாமல் அந்தப் பெண் உள்ளே வந்தது. நன்றாகத் தான் இருந்தாள். அவளின் அலங்காரத்தை மீறி வறுமை தட்டுப் பட்டது. வந்த வேகத்தில் என்னை அறிமுகப் படுத்தினான். ஒன்ன விட அழகா இருக்காரு, ஹீரோ மாதிரி என்றாள். வாசு செல்லமாய் அவளின் பின் புறத்தை தட்டினான். அவள் பெயர் ரீனா.

நான் படுக்கையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ரெண்டு கட்டில் இருக்கில்ல இங்கயே இரு என்றான். ஒனக்கு காசு வேண்டாம் ஃப்ரீ என்று சொல்லிக் கண்ணடித்தாள் ரீனா. மொட்ட மாடியில படுத்துக்கிறேன் என்று சொல்லி கிளம்பிவிட்டேன்.

மொட்டை மாடியில் படுத்ததும் தூக்கம் வரவில்லை. மனசு தறி கெட்டு நினைவுகளை மேய்ந்தது. என்னை அறியாமல் ஏதோ ஒரு கணத்தில் தூங்கி போனேன்.

வானம் விடியலாமா என்று யோசிக்கும் போது வாசு எழுப்பினான். பஸ் ஸ்டாப்ல போய் அனுப்பி வெக்கனும் நீயும் வரியா என்றான்.

ரோட்டில் மூவரும் நடக்கும் போது பட படப்பாய் இருந்தது. வாசு அனுபவஸ்தன் ஆகையால் நிதானமாய் இருந்தான். ரீனா தூக்கக் கலக்கத்தில் இருந்தாள். ஓரிரு லாரிகள் வேகமாய் கடந்தன. பஸ் ஸ்டாப்க்கு இன்னும் 5 நிமிட நடை பாக்கி இருக்கும் போது ‘நில்லுங்கடா’ என்ற அதட்டலோடு வழி மறித்தது சைக்கிள். போலீஸ். இரையை குறி பார்க்கிற புலியின் பார்வையோடு அவர் முறைத்தார்.

யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வகையாய் மாட்டிக் கொண்டோம்.’ஹாஸ்டலா, அங்கருந்து பின்னாலயே தான் வரேன்’ என்றார் மீசை முறுக்கியஅந்தப் போலீஸ்காரர்.

சரி நடங்க என்றார். சார் சார் என்று கெஞ்சத் துவங்கினோம் நானும் வாசுவும். எனக்கோ கண்ணீரே வந்து விட்டது. எவ்வளவு பெரிய அவமானம். லாக்கப், பத்திரிக்கைச் செய்தி வாழ்க்கையே அவ்வளவு தான். முடிந்து விட்டது.

சைக்கிளின் கேரியரில் இருந்த லத்தி பயமுறுத்தியது. மூவரையும் மீண்டும் வந்த வழியே நடத்திக் கொண்டு பயமுறுத்தும் பார்வையோடு உடன் வந்தார் போலீஸ்காரர். எங்களின் கெஞ்சல்கள் அவரை பாதிக்கவே இல்லை.

எந்த ஊருடா நீங்க என்றார். சொன்னோம். அப்பா என்ன
பண்ணுறாங்க என்றார். பதில் சொல்லும் முன் காட்டில கரையில வேலை செஞ்சு படிக்க அனுப்புனா… என்றவர் பாதியிலேயே நிறுத்தி, உள்ள வைச்சு ரெண்டு தட்டு தட்டுனா தான் கொழுப்பு அடங்கும் என்று முடித்தார். எங்களின் கெஞ்சல் அதிகமானது.

முழுதும் விடிய இன்னும் கொஞ்ச நேரமே இருந்த்தது.
ஹாஸ்டலின் அருகில் வந்து விட்டோம்.

பாறை போல் உறுதியாய் இருந்தது போலீஸ்காரரின் மனசு. வயதானாலும் கம்பீரமான முகம். அடிக்கடி முறுக்கு மீசையை அனிச்சையாய் புறங்கையால் தள்ளி விட்ட படி இருந்தார்.

லாக்கப் உறுதி. அழகியுடன் கல்லூரி மாணவர்கள் கைது என்று புகைப் படத்துடன் கூடிய செய்தி உறுதி. அதன் பிறகு உயிரை போக்கிக் கொள்வது உறுதி என்று மனசு சொல்லியது.

ஹாஸ்டலின் முன்னே வந்து விட்டோம். வாசு அழுது கண்ணீர் விடுகிறான். நானும் கெஞ்சுகிறேன். கண்களும், காதுகளும் இல்லாதவர் போல அவர் வருகிறார்.

ஹாஸ்டலின் கேட்டின் முன்னால் நடக்கும் போது. அவர் நின்றார். தீர்மானமாய் பார்த்தார். ‘இந்த தடவை பொழச்சுப் போங்க, இன்னோரு தடவை பார்த்தேன்.’ என்ற படி எங்களை உற்றுப் பார்த்தார்.’ஓடுங்கடா’ என்றார். எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

ஒட்டப் பந்தய வீரர்களைப் போல ஹாஸ்டலுக்குள் ஓடினோம்.

அவர் தான் நிற்கிறார். பார்த்தால் என்ன சொல்வார் என்பதை கற்பனை பண்ண முடியவில்லை. ‘ டே கேவலமானவனே’ என்று பார்க்கும் பார்வையை எப்படித் தாங்க முடியும்.

முக்கியமாய் ஏதோ பேசிக் கொண்டிருந்தாலும் கடந்து போகிறவர்களை தேடி துழவிக் கொண்டிருந்தது அந்த காவல்கார கண்கள். எழுந்து போக முடியவில்லை.

கொடுமையான நிமிடங்கள் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்தில் படம் விட்டு கூட்டம் வரத் துவங்கியது.

போலீஸ்காரரும் பேசிக் கொண்டிருந்தவரும் ஒதுங்கி நின்றார்கள். கூட்டம் கடந்து கொண்டிருந்தது.

பெரும் கூட்டம் வரும் போது எழுந்து அதனோடு கலந்து விட்டேன். பெரும் சாகசம் போலவே இருந்தது. ரகசியமாய் அவரை பார்த்த படியே அவர் பார்க்காமல் கடந்து விட்டேன்.

உயிர்த்தெழுதல் போலவே இருந்தது.

கொஞ்ச தூரத்திற்கப்புறம் பேக்கரிக்குள் நுழைந்தேன். சாவகசமாய் தேங்காய் ஃபன், டீ சாப்பிட்டேன். படத்திற்கு போக வேண்டாமென்று முடிவு செய்தேன். எதற்கு வீண் வம்பு. நன்றாக இளைப்பாறினேன். கிட்டத் தட்ட 45 நிமிடங்கள் கடந்து விட்டிருந்தது. ஒரு தம் அடித்தால் தான் முழு ஆசுவசம் கிடைக்கும் என்று தோன்றியது.

ஒரு கிங்ஸ் வாங்கினேன். பொது தீப்பெட்டியில் பற்ற வைத்தேன். அதற்குள் கடைக்காரரிடம் ஒருவர் தீப்பெட்டி எங்கே கேட்டார். நான் சிகரெட்டைப் பற்ற வைத்த தீக்குச்சியில் கால்வாசி தான் எரிந்திருந்தது. அதே குச்சியில் பற்ற வைத்து உதவி செய்யும்
நோக்கத்தோடு திரும்பினேன். வாயில் சிகரெட்டோடு அந்தப் போலீஸ்காரர்.

பதட்டத்தில் ஒரு கணம் ஸ்தம்பித்தேன். எந்தப் பற்றும் இல்லாமல் முன் பின் தெரியாதவனை முதன் முதலில் பார்ப்பது போல் பார்த்தன அவரது கண்கள் அவராகவே என் கைகளைப் பற்றி வாகாய் உயர்த்தி தனது சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டார்.

கனிவும், நன்றியும் நிறைந்த கண்களோடு ‘தேங்ஸ் ப்ரதர்’ என்றார் வாயில் சிகரெட்டோடு.

1 பின்னூட்டம்

  1. super antha paiyanku nala life kedaika,best of luck


Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்