“ எனக்கு ஏம்பா அன்புமதின்னு பேரு வைச்ச ” திடிரென ஒரு இருசக்கர வாகனத்தின் பயணத்தின் பாதியில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருந்த அன்புமதி கேட்டாள்.
நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி அர்த்தம் அறிந்து பிடித்துப் போய் வைத்ததினால் உடனடியாய் பதில் சொல்ல முடிந்தது.
‘ ஒரு மனுசனுக்கு அறிவு அதிகம் இருந்து அன்பு இல்லாமல் போனால் அவன் முழுமையானவன் இல்லை.
அதே போல ஒருத்தருக்கு அன்பு அதிகம் இருந்து அறிவே இல்லாமல் போனால் அதுவும் வீண் தான்.
அன்பும் அறிவும் ரெண்டும் இருந்தால் தான் அவங்க முழுமையான சிறந்த மனுசங்களா இருக்க முடியும். அதுனால தான் உனக்கு அன்பும், அறிவும் சேர்ந்த பெயராய் வைச்சிருக்கோம் ’ என்றேன்.
ரொம்ப கவனமாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஒரு விநாடி நேர இடைவெளிக்குள் 7 வயது அன்புமதி கேட்டாள் “ நான் அப்பிடி இருக்கேனாப்பா?”
சொன்னதை முழுமையாய் புரிந்து அதற்குள்ளிருந்து ஒரு அர்த்தமுள்ள மிகப் பெரிய கேள்வியை மிகச் சாதாரணமாய் கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திருந்தாள்.
எனக்குத் தான் வாயடைத்துப் போனது. மகிழ்விலும், அதிர்விலும்..
சாமாளித்துக் கொண்டு உடனே சொன்னேன் ‘ நீ அப்பிடித் தான் இருக்கே ’
அன்புமதியின் முகத்தில் பெயரைக் காப்பாற்றி விட்ட ஒரு நிறைவு.
என் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது எனக்குத் தெரியாது எனபதும். என்ன காரணத்தினால் என் அப்பா அம்மா வைத்தார்கள். என்பதை ஏன் இத்தனை வயது வரை அறிந்து கொள்ளத் தோன்றவில்லை என்ற கேள்வி எனக்குள் வளர்ந்து வீங்கிக் கொண்டிருந்தது.
2 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
அன்பு சுதா..
நல்ல தமிழ் பெயருக்கான தேடலில், அன்பும் அறிவும் நிறைந்த மகள் கிடைத்திருக்கிறாள்.மிகவும் மகிழ்ந்தேன்.
இந்த உரையாடலில் ஒரு அழகான உணர்வு அடங்கியிருக்கிறது
”எனக்குத் தான் வாயடைத்துப் போனது. மகிழ்விலும், அதிர்விலும்..”
எனக்கு தெரிந்து நீங்கள் எழுதியது ஒரு முறை வாயடைத்துப் போனதை… இப்படி நிறைய தருணங்களை நீங்கள் எழுதவில்லை…
இருப்பினும் புரிந்துக் கொள்ள முடிகிறது. அந்த தருணங்களின் மகிழ்ச்சி இருக்கிறதே, அதை இந்தப் பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் தரும் என்று எண்ணுகிறேன். இன்னும் ஒரு தந்தையாக நீங்கள் வாயடைத்துப் போகும் ஆனந்தமான தருணங்கள் நிறையவே இருக்கிறது. அதையும் பதியுங்கள் நாங்களும் படித்துவிட்டு ஆன்ந்திக்கிறோம்.