அது அவனாக இருக்கவே முடியாது என்பதையும் மீறி, வேகமாய் என்னைக் கடந்து போன நகரப் பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு போனவன் அவனோ என்று தோன்றியது எனக்கு. அந்தச் சுருட்டை முடி, ஒல்லியான உடல் வாகு, ஆடை அணிந்திருந்த விதம் எல்லாம் அவனைப் போலவே இருந்தது. முகம் சரியாய்த் தெரியவில்லை. பேருந்து தூரமாய்ச் செல்லும் வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அது அவன் இல்லை என்று எனக்கு உறுதியாய் தெரியும். ஏனென்றால் அவன் இறந்து போய் ஐந்து வருடங்களாகி விட்டது. அச்சு அசலாய் அவனையே போன்ற சாயல் கொண்ட ஒருவன் நினைவில் ஆழத்தில் புதைந்திருந்த ரெங்கநாதனை மேலெழுப்பி விட்டான்.
குடித்துக் கொண்டிருந்த தேநீருக்கான காசைக் கொடுத்து விட்டுக் கிளம்பினேன். ரெங்கநாதனின் நினைவாகவே இருந்தது.
சென்னைக்கு வந்த புதிதில் அறிமுகமான நண்பர்களில் ஒருவன் ரெங்கநாதன். அவனும் என்னைப் போன்றே திரைப் படத்துறையில் இயக்குநராக வேண்டும் என்ற லட்சிய வெறியோடு வந்து, உதவி இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருந்தான்.
உதவி இயக்குநர்களுக்கு வீடு கிடைக்காது, சம்பளம் கிடைக்காது, உணவு கிடைக்காது, வாய்ப்பு கிடைக்காது. ஆனால் தனது மனதை வெளிப்படுத்தி நிகழ் காலத் துன்பங்களை, வருங்காலக் கனவுகளை, தான் படித்த புத்தகங்களை, பார்த்த படங்களை, பாதித்த சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ள நண்பர்கள் கிடைக்கா விட்டால் அவனால் ஒரு கணமும் ஜீவித்திருக்க முடியாது.
அப்படி, பறவைகளுக்கு வேடந்தாங்கல் போல எங்களைப் போன்றவர்களுக்கு அமைந்த புகலிடம் தான் மகாத்மாவின் அறை. மகாத்மா ஓரிரு திரைப்படங்களில் உதவிஇயக்குநராக வேலை பார்த்து முடித்து விட்டு இயக்குநராவதற்காகக் கதை தயாரித்துக் கொண்டிருந்தார். அவரோடு எங்கள் உதவி இயக்குநர் இனமான குமாரும் அறையை பகிர்ந்து கொண்டிருந்தார். மொத்தம் ஐந்து வீடுகள் கொண்ட ஒரு லைன் வீட்டில் நாலாவது வீடு அது. மற்ற நான்கு வீடுகளிலும் குடும்பஸ்தர்கள் இருந்தார்கள். முதலில் அறை எடுத்த போது பக்கத்து வீடுகளில் பிரம்மச்சாரிகள் குடும்பங்களுக்கு மத்தியில் ஊடுருவியது குறித்து அதிருப்தியோடு முகம் சுழித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சிரிக்கச் சிரிக்கப் பேசும் நகைச்சுவை உணர்வு, பெரும் பக்தி, இன்ன பிற நல்ல குணங்களால் மகாத்மா எல்லோரின் மனங்களையும் மாற்றிக் காட்டினார். குமாரும் மகாத்மாவுக்கு நல்ல குணத்தில் சளைத்தவரல்ல.
இப்போது பக்கத்து வீடுகளில் ரேசன் கார்டில் பெயர் போடா விட்டாலும் அவர்களும் ஓர் அங்கம் தான். அவர்கள் அறையில் பிரம்மச்சாரிகளின் சமையலான சோறும், தக்காளித் தொக்கும் வைத்து சாப்பிட உட்காரும் போது சரியாய் பக்கத்து வீடுகளிலிருந்து சாம்பார், ரசம் , பொறியல் என்று வரிசை கட்டி வந்து சேரும். அப்படி ஒரு புரிந்துணர்வு அபூர்வம்.
அந்த அறை எப்போதும் நண்பர்களால் நிறைந்திருக்கும். ஒருவர் போக ஒருவர் வந்து எப்போதும் ஹவுஸ் புல்லாகவே இருக்கும். பக்கத்து சேட்டன் கடையில் மகாத்மா கணக்கு வைத்திருக்கும் தைரியத்தில் எல்லோரும் டீ குடிப்போம்.
அங்கு அறிமுகமானவன் தான் ரெங்கநாதன். அப்போது அறையில் கூட்டம் இல்லை. நானும் மாகாத்மாவும், குமாரும் மட்டும் தான் இருந்தோம். எதையோ தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் போது கதவு டமாலெனத் திறந்தது. ஏனோ தானோ என்று சட்டையும் அதற்குப் பொருந்தாத நிறத்தில் அழுக்கு ஜீன்சுமாக, அடர்ந்த தாடியும், மெலிந்த உருவமுமாக ரெங்கநாதன் உள் நுழைந்தான்.
‘ தட்டாமல் டமால்னு கதவு தெறக்கும் போதே நீங்க தான்னு நினைச்சேன்’ என்றார் குமார்.
அதைப் பாராட்டு போல சிரித்த படி கேட்டுக் கொண்டே அமர்ந்த ரெங்க்நாதன் அருகில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து முழுக்கக் காலியான பிறகே கீழே வைத்தான்.
நண்பர்கள் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவன் கையில் இவான் துர்கனேவின் மூன்று காதல் கதைகள் நாவல் இருந்தது.
சில முறை சந்திப்பிலும் நண்பர்களின் அனுபவங்களைக் கேட்டதிலும் ரெங்கநாதனைப் பற்றிய முழு பிம்பம் கிடைத்தது.
ரெங்கநாதன் நல்லவன். ஆனால் சற்று உன்மத்தமானவன். விதண்டா வாதங்கள் புரிபவன். கொஞ்சம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவனுடன் பேசுவது சண்டையில் முடிந்து விடும். அவன் எதையும், எவரையும் துச்சமாக மதிப்பவன்.
புத்தகம் இல்லாத கையோடு அவனைப் பார்க்கவே முடியாது. அவைகளையெல்லாம் அவன் படிப்பதே இல்லை என்று சொல்வார்கள். அவன் கைகளில் வைத்திருக்கும் புத்தகத்தைப் ஏற்கனவே படித்தவர்கள் அவனிடம் அதைப் பற்றி எப்போது பேசினாலும் இன்னும் படித்து முடிக்கல என்றே பதில் வரும்.
திரைப்படங்களைப் பற்றியோ, கதைகள் பற்றியோ ஒன்றும் பேச மாட்டான். அவனை யாராவது கேலி செய்தாலோ, அறிவுரை கூறத் தொடங்கினாலோ அவர்களை ஒருமையில் அழைத்துச் சண்டையில் தான் முடிப்பான். சண்டை என்றால் கை கலப்பல்ல. தெளிவற்ற வார்த்தைகளைக் குவியலாய்க் கொட்டுவான். உலகம் பெரியது, நீ சிறியவன் என்று முடிப்பான்.
ரெங்கநாதன் அடிக்கடி ‘ ஜெயிச்சிருவோம்ல’ என்று கூறுவான். அதற்கான எந்த முன்னேற்பாடும் முயற்சியும் அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் ‘ ஜெயிச்சிருவோம்ல’ என்று சொல்லும் போதே அவன் நம்பிக்கையோடு தான் சொல்கிறானா என்று சந்தேகம் கட்டாயம் தோன்றும்.
அதே போல அவனுக்குத் தேவையென்றால் யாரிடம் வேண்டுமானாலும் கடன் கேட்பான். அதைக் கடன் என்றும் சொல்ல முடியாது காசு கேட்பான். திருப்பிக் கொடுப்பதை பற்றிச் சிந்தித்தால் அல்லவா கடன். ரெங்கநாதன் வரையறைக்கு உட்படாதவன். ஆனால் ரெண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்று சிறிய தொகையைத் தான் கேட்பான்.
நானும் அவனும் ஒருமுறை தனியே சந்திக்கும் போது உங்களுக்கு ஏதாவது காசு வேணுமா? என்று கேட்டான் ரெங்கநாதன். ஏன் கேக்கறீங்க என்று கேட்ட போது சொன்னான் ‘ இல்ல இப்போ ஏங்கிட்ட பத்து ரூபா இருக்கு உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா குடுக்கலாம்னு கேட்டேன் ‘ என்று. அன்றைக்கு அவனின் இன்னொரு முகம் தரிசனமாகியது.
அவன் மீது யாருக்கும் மரியாதை இல்லை. அவன் இயல்பானவன் இல்லை. சிலபேர் அவனைச் சகித்துக் கொண்டிருந்தார்கள். மகாத்மா அறைக்கு வரும் போது ரெங்ககநாதனின் சப்தம் கேட்கிறதா, அவனது செருப்பு கிடக்கிறதா என்று பார்த்து உள்ளே வருவதா இல்லை திரும்பிப் போவதா என்பதை தீர்மானிப்பார்கள் நண்பர்கள் சிலர்.
அவன் யாரிடமும் உதவி இயக்குநர் வாய்ப்புக் கேட்டுப் போனதில்லை. நேராகத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இயக்குநர் வாய்ப்புக் கேட்டுப் போவான். அவனிடம் கதை இருக்கிறதா என்பது யாருக்கும் தெரியாது.
ஒருமுறை ஒரு சம்பவம் நடந்தது. குமாரிடம் நான் கதை சொல்கிறேன் என்று ரெங்கநாதன் அடம்பிடித்து வாய்க்கு வந்தததையெல்லாம் சொல்லி இருக்கிறான். குமார் கதை எழுதுபவர். கதை விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்பவர். அவர் மனம் பொறுக்காமல் ரெங்கநாதா, கதை என்றால் இப்படி இருக்கணும் என்று அவருடைய கதை ஒன்றை அவனுக்கு உதாரணமாய்ச் சொல்லி இருக்கிறார். கிளம்பும் போது ரெங்கநாதன் முகத்தில் கூடுதல் ஒளி. ரெங்கநாதன் புரிந்து கொண்டான். இனி விதவிதமாய்ச் சிந்திப்பான் என்று நிம்மதியாய் அன்று தூங்கினார் குமார்.
அதன் பிறகு குமார் சொன்ன கதையைத் தன்னுடைய கதை என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்ல ஆரம்பித்தான் ரெங்கநாதன். அதை ஒருநாள் மகாத்மாவிடமே சொல்லி இருக்கிறான். மகாத்மா குமாரிடம் அவனை அழைத்து வந்து நடந்ததைச் சொன்னார். குமார் ரெங்கநாதனிடம் இது நியாயமா, அது என் கதை. இதை இனி மேல் மறந்து விடு என்று கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானமாய்ச் சொன்னார். என்ன இருந்தாலும் ரெங்கநாதன் நியாயவான். எனவே உடனே குமாரின் கதையை மறந்து போனான். அதன் பிறகு யாரிடமும் அந்தக் கதையை அவன் சொல்லவே இல்லை.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மகாத்மா அறையில் நண்பர்களெல்லாம் கூடி சமீபத்தில் வெளியான ஒரு படத்தை ஆளுக்காள் வெளுத்துக் கிழித்துக் கொண்டிருந்த போது வந்தான் ரெங்கநாதன். கடைசி வரை அமைதியாய் இருந்து விட்டு எல்லோரும் சேட்டன் கடையில் டீ குடிக்கும் போது சொன்னான் – தனக்குத் திருமணமாகப் போகிறது என்று. உடனே அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கை கொடுத்து வாழ்த்துச் சொல்லி அவனை அனுப்பி விட்டு, அடப்பாவி ஒழுங்கா பேசக் கூட தெரியாதே இவனைக் கட்டிக் கிட்டு அந்தப் பொண்ணு என்ன பாடுபடப் போகுதோ அப்பிடின்னு எல்லோரும் பேசினோம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமம் அவனுக்கு. அவன் யாருக்கும் பத்திரிக்கை கொடுக்கவும் இல்லை. யாரையும் அழைக்கவும் இல்லை. அவன் இயல்பாகவே இயல்பானவன் இல்லை. அப்படித் திடீரெனக் காணாமல் போனான் ரெங்கநாதன்.
அதன் பிறகு அவனைப் பற்றிய தகவல்களே இல்லை.
கிட்டத் தட்ட அவன் திருமணத்தின் ஓர் ஆண்டிற்குப் பிறகு நானும், குமாரும், மகாத்மாவும் ரவி என்ற நண்பணின் கதை விவாத்தில் இருக்கும் போது எப்படியோ ரெங்கநாதனைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது தான் ரவி உங்களுக்குத் தகவல் தெரியாதா நம்ம ரெங்கநாதன் செத்துப் போயிட்டான். ஆறு மாசம் ஆகிருச்சாம், தற்கொலை பண்ணிக்கிட்டானாம் என்று சொன்னான். அதன் பிறகு அன்று கதை விவாதம் நடைபெறவில்லை. ரெங்க நாதனைப் பற்றிய விவாதமாகவே மாறிப் போனது.
என்ன இருந்தாலும் ரெங்கநாதனுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது. அவன் யாருக்கும் நெருக்கமானவன் கிடையாது. யாரும் அவனை நெருங்கவும் முடியாது. அதனால் தான் அவனைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
கொஞ்ச காலம் பார்க்கின்ற நண்பர்கள் எல்லாம் இதைப் பற்றியே பேசினோம். விசயம் தெரியாத பொது நண்பர்களுக்கு நாங்கள் சொன்னோம். அவன் மரணம் எல்லோருக்கும் வலித்தது.
அவன் இறந்து ஐந்து வருடங்கள் முடிந்து போனது. எப்போதாவது எங்கள் பேச்சில் அவன் வருவான்.
அவனைப் போலவே ஒருத்தனைப் பார்த்ததும். அவன் நினைப்பாகவே இருந்தது நாள் முழுவதும்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு மகாத்மாவின் அறைக்குப் போயிருந்தேன். குமார் மட்டும் தான் இருந்தார். வழக்கமான விசாரிப்புகள், உரையாடல்களுக்குப் பின் அன்று பேருந்தில் ரெங்கநாதனைப் போலவே ஒருத்தனைப் பார்த்தேன் என்று சொன்னேன். அவரும் ஆர்வமாய் விலாவாரியாக எங்கே எப்போ என்று விசாரித்தார்.
சின்ன மெளனத்திற்குப் பிறகு நிதானமாய்க் குமார் சொன்னார் ‘ நீங்க பார்த்தது ரெங்கநாதனைத் தான். நேத்து இங்க வந்திருந்தான். திரும்பவும் சென்னைக்கு வந்துட்டான். எந்த நாயோ செத்துட்டான்னு புரளியை கிளப்பி விட்டுருக்கான் பாவி’.
ஒன்றும் புரியவில்லை எனக்கு. குமார் நம்பிக்கையானவர் தான் இருந்தாலும் ரெங்கநாதனை நேரில் பார்த்த பிறகு நம்பிக் கொள்ளலாம் என்று தோன்றியது.
3 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
இறந்தவன் கதையில் மட்டும் இல்லை… உங்கள் எழுத்திலும் வாழ்ந்திருக்கிறான் சுதா. அட்டகாசம்.
நன்றி மீன்ஸ்..
நல்ல பதிவு.
ஆனால் சில வித்தியாசமான நண்பர்கள் இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்.