திருமண அறிமுகம்

may-3-2008-my-card-020

அன்று காலையில் இருந்தே மகிழ்வும் கவலையும் கலந்த உணர்வுப் பெருக்கில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.

என் அக்காள் பெண் நர்மதாவின் திருமணம் அன்று .

என் மகள் அன்புமதிக்கு எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது.

பந்தல் போட்ட வீடு. அலங்காரங்கள், வாழை மரம் , தென்னம் பாளை, எல்லாவற்றையும் வித்தியாசமாய் பார்த்த படி இருந்தாள்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருந்த தருணமாக இருந்தது அவளுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம்.

15 வயது குறைவு நர்மதாவை விட அன்புமதிக்கு.

ஆனாலும் எப்போதும் வாடி போடி என்று தான் கூப்பிடுவாள்.

நர்மதாவிற்கு அலங்காரம் நடக்கும் போது பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அலங்காரம் முடிந்து மண்டபத்திற்கு காரில் கிளம்பும் போது நர்மதாவுடம் காரில் ஏறிக் கொண்டாள்.

மண்டபத்தில் தாய் மாமன் நான் மாலையிட்டு கல்யாண மேடைக்கு அழைத்து வந்ததை சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை சுரேஷை ஏற்கனவே பல முறை பார்த்திருப்பதால் மேடை மீது ஏறி இருவரிடமும் விளையாடிக் கொண்டிருந்தாள்.

நேரமானதும் பெரியவர் ஒருவர் தாலியை எடுத்துக் கொடுக்க தாலி கட்டுதல் முடிந்தது.

கூட்டம் நிரம்பிய மண்டபத்தில் குழந்தைகள் கூட்டத்தில் விளையாட தோழமைகள் அதிகமிருந்ததால் ஒரே ஓட்டமும் விளையாட்டாக இருந்தாள் அன்புமதி.

எல்லாம் முடிந்து மணப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் வர அனைவரும் கிளம்பிய போது அன்புமதியை தேடி கூட்டிக் கொண்டோம்.

மாப்பிள்ளை வீட்டில் சடங்குகள் முடிந்து கிளம்ப வேண்டிய நேரம்
நெருங்கியது.

என் அக்கா சாந்தி மற்றும் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இனி முதல் இத்தனை காலம் தனது கண்களில் ஒன்றாக இருந்த நர்மதா அடுத்த வீட்டுப் பெண். இனி அவள் வீடு இது தான் என்று உணர்ந்து
கண்கள் கலங்கத் துவங்கியிருந்தனர்.

மாப்பிளை வீடு நான்கைந்து தெருக்கள் தள்ளித் தான் இருக்கிறது என்றாலும் அது நீண்ட தொலைவு தான் இனிமேல்.

இனி மாப்பிள்ளை வீட்டின் விதிகள் தான் நர்மதாவைக் கட்டுப்படுத்தும்.

விட்டுப் பிரிய மனமில்லாமல் பேசிக் கொண்டிருந்தவர்களை அனுபவப் பட்ட முதிர்ந்த ஒரு குரல் ’ கிளம்புங்கப்பா அங்க வேலை கிடக்குதில்ல ’ என்று கிளப்பிவிட்டது.

பெண் வீட்டினர் அனைவரும் கிளம்பத் தயாரானோம்.

அக்கா சாந்திக்கும், மணப் பென்ணின் தங்கை நிவேதாவுக்கும் கண்கள் ஊற்றெடுத்துக் கொண்டன எனக்கும் கூட கண்கள் கலங்குவதை கட்டுப் படுத்த முடியவில்லை.

உமா பக்கத்து அறையில் விளையாடிக் கொண்டிருந்த அன்புமதியை அழைத்து வந்தாள்.

நர்மதாவின் கண்களிலும் கண்ணீர் நிரம்பி வழியக் காத்திருந்தது.

ஒவ்வொருவராய் நர்மதாவிடமும் மாப்பிள்ளையிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினோம்.

அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் கடைசியாய் கிளம்பிக் கொண்டிருந்தோம்.

அன்புமதி நர்மதாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாங்கள் வாசலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தோம். அன்புமதி திடிரென பிடித்திருந்த என் கைகளை விலக்கி விட்டு நர்மதாவை நோக்கி ஓடினாள்.

என்ன ஏதுவென்று தெரியாமல் திரும்பிப் பார்ப்பதற்குள் அன்புமதி ஓடிப் போய் நர்மதாவின் கைகளைப் பிடித்து,

‘ எல்லாரும் போறாங்கடி, வாடி நர்மதா , நீ மட்டும் ஏன் இங்க இருக்க வாடி வாடி விட்டுட்டு போயிறப் போறாங்க’

என்று மறுபடி மறு படி சொல்லிய படி நர்மதாவை இழுக்க ஆரம்பித்தாள்.

அனைவரும் ஒரு கணம் அதிர்ந்து போனோம்.

சில அழுத மனங்கள் விம்மலை வெளிப் படுத்தின, சிலருக்கு சிறுமியின் அறியாமை இதழ்களில் சிரிப்பைச் சிந்தியது.

ஓடிச் சென்று அன்புமதியைத் தூக்கிக் கொண்டேன்.

‘ நர்மதாவுக்கு இங்க வேலை இருக்கு அதை முடிச்சிட்டு அப்புறமா வரும் , என்று சொன்னேன் அன்புமதியிடம்.

நம்பாமல் ‘ அப்புறம் வருவியாடி’ என்று நர்மதாவை அன்பு கேட்க
நர்மதா அழுத விழிகளோடு ஆமென தலையாட்டினாள்.

அன்புமதியை தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

வாசல் வரை நர்மதாவை திரும்பிப் பார்த்த படி வந்தாள் மதி.

போகும் போதோ, போய் சேர்ந்த பிறகோ பொங்கிப் பெருகும் அன்புமதியின் கேள்விகளுக்கு வழக்கம் போல் உண்மையான பதில்களால் திருமணத்தை அறிமுகம் செய்து வைப்பதாய் உறுதி கொண்டேன்.

பயனுள்ள நேர்காணல்….

01.09.08 தீராநதி நேர்காணல்

உலகெங்கும் பெரும் பிரச்னையாக விவாதிக்கப்படும் பிரச்சினை சுற்றுச் சூழல் பிரச்னை. இதையொட்டி ஆக்கபூர்வமான இயக்கப் பணிகளை தமிழில் பல குழுக்கள் செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத் தகுந்த குழுவாக `பூவுலகின் நண்பர்கள்’ குழுவைச் சொல்லலாம். நெடுஞ்செழியனின் பங்களிப்பில் இயங்கிய இக்குழு அவரது மறைவிற்குப் பிறகு கொஞ்சம் தேக்கம் கண்டது. இதனுடன் இணைந்து செயலாற்றிய காளிதாஸ், இப்போது தன் நண்பர்களுடன் சேர்ந்து
`ஓசை’ என்ற சுற்றுச் சூழல் இயக்கத்தை இயக்கி வருகிறார்.

ஆரம்பக் காலங்களில் திராவிட இயக்க செயல்பாடுகளில் மும்முரம் காட்டிய இவர் ஒரு கட்டத்திற்கு மேல் கானுயிர் ஆர்வளராக மாறியவர். கனரா வங்கியில் பணிபுரிந்த காளிதாஸ் சுற்றுச் சூழல் கருத்தியலைப் பரப்புவதற்காக வங்கிப் பணியைத் துறந்தவர். தமிழக கடலோர மேலாண்மை குழுமத்தின் உறுப்பினராக செயல்பட்டும் வருகிறார். கோவை, கோத்தகிரி, குஞ்சப்பனை என்று மூன்று நாட்கள் தொடர்ந்து இந்நேர்காணல் தீராநதிக்காக பதிவு செய்யப்பட்டது. அதன் கொஞ்சம் பகுதிகள் மட்டும் இங்கே பிரசுரம் காண்கிறது.

தீராநதி : தமிழ்நாட்டில் 1,30,058 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் சுமார் 22,748 ச.கி.மீட்டர் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கிறது. சதவீதக் கணக்கில் இது 17.5 சதவீதம் என்று வரையறை செய்யப்படுகிறது. சுற்றுச் சூழல் சமன் நிலை குலையாமல் இருக்க வேண்டுமென்றால், மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகளாக இருக்க வேண்டும். செயற்கைக் கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் 17.5 சதவீதத்திற்கும் குறைவாகவே காடுகள் இருப்பதாக சொல்கிறது. மழைக்காடுகள், இலையுதிர்க்காடுகள், முட்புதர்க்காடுகள் என்று மூன்று பிரிவுகளாக காடுகள் வகைப்படுத்தப்படும் காடுகளில் மழைக்காடுகளே அரிதானவை. தமிழ்நாட்டில் இவற்றை உங்களைப் போன்றவர்கள் சோலைக்காடுகள் என்று குறிப்பிட்டு அழைக்கிறார்கள். பூமத்திய ரேகையின் இரு புறங்களில் மட்டுமே வளரக்கூடிய இக்காடுகளில் சமீபத்திய ஆய்வுகளின் படி இங்கு வளரும் தாவரங்கள் வளர்ச்சி நிலையில் உச்சநிலையை அடைந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. சோலைக்காடுகளை மையமாக வைத்து களப் பணி செய்து வருபவரான நீங்கள், இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் ஏற்கிறீர்களா? பெரும்பாலான ஆய்வுகள் எல்லாம் மேஜை வைப்பறையின் மீது நிகழ்த்தப்படுவனவாக உள்ளதால் உங்களைப் போன்ற களப்பணியாளர்களின் தகவல் சற்று ஆழத்தை நோக்குமென்பதால் இதை நான் கேட்கிறேன்?

காளிதாஸ் : நாட்டின் மூன்றில் ஒரு பங்கு காடாக இருந்ததென்றால், அந்த நாட்டிற்குத் தேவையான இயற்கை வளங்களை அந்தக் காடு தரும் என்பதால்தான் இந்த 33 சதவீதம் காடு தேவை என்று இயற்கை ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள். நம்மிடம் 17.5 சதவீதம் காடுகள்தான் இருக்கிறது என்ற தகவலும் உண்மையானதுதான். 17.5 சதவீதம்தான் காடுகள் இருக்கின்றது என்ற உண்மையிலிருந்து நமக்கு முதலில் உரைப்பது என்னவென்றால், அவற்றை மேலும் அழியவிடாமல் உடனே காப்பாற்றியாக வேண்டும் என்பது. அதை எப்படி 33 சதவீதத்திற்கு வளர்த்தெடுப்பது என்பதெல்லாம் அதற்கு பிற்பாடுதான். நீங்கள் குறிப்பிட்டுக் கேட்ட மூன்று வகையான காடுகள் என்பதை ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்றவாறு பிரிக்கிறார்கள். இலையுதிர்க் காடுகள் என்று ஒரே வகையாகவும் பிரிக்கலாம். அல்லது ஈர இலையுதிர்க்காடுகள், காய்ந்த இலையுதிர்க்காடுகள் என்றும் பிரிக்கலாம். இந்த அறிவியல் பூர்வமான பிரிவினைகளுக்குள்ளாக நாம் போக வேண்டாம். ஆனைமலையில் மட்டும் ஆறுவகையான காடுகள் இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது. தகவல் என்றால் ஒரு ஆய்வே இருக்கிறது. காட்டைப் பற்றி நாம் கொஞ்சம் இங்கே சுயநலமாகவே முதலில் பேசுவோம். மனிதர்களுக்கும் காட்டிற்குமான நேரடியான உறவு பற்றி முதலில் பேசுவோம். தமிழ்நாட்டில் இன்றைக்கு மிச்சம் இருக்கின்ற இந்தக் காடு நமக்கு ஏன் தேவை என்பது முதல் கேள்வி. தமிழ்நாடு மலைமறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பகுதி. காவிரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ்க் கண்டதோர் வைகை பொருநை நதி என்று பாரதி நம் பாப்பாக்களுக்குப் பாடிய நதிகளில் இன்றைக்கு பாதிக்கு மேல் சீரழிந்து போய்விட்டன. இந்தச் சீரழிவுக்கு மூல காரணம் எங்கே இருக்கிறது என்று தேடினோமானால் காடுகளுக்கும் நதிக்கும் இருந்த உறவு முறையை நீங்கள் அறிய முடியும். பாலாறு பெரும்பாலும் வற்றிப் போய் விட்டது. காவிரி கர்நாடகத்திலிருந்து திறந்து விடும் நாளில் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. மற்ற எல்லா நதிகளுமே பருவ காலத்தில் மட்டுமே வருகின்றன. பல இறந்தே போய்விட்டன. எந்த நதியும் சமவெளியில் உற்பத்தியாகாது. மலைகளில்தான் உற்பத்தியாகும். மலைகளில் கூட கரடுகளில் உற்பத்தியாகாது. காடுகளில் தான் உற்பத்தியாகும். அந்தக் காடுகள் எதுவென்று பார்த்தால் சோலைக்காடுகள். புல்வெளிகள் அடங்கிய சோலைக்காடுகள். இந்தச் சோலைக்காடுகளின் முக்கிய பங்களிப்பு என்னவென்றால், தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் 33_லிருந்து 50 நாட்கள்தான் மழைநாட்கள். நமக்கு மழை நாட்கள் என்பது மிகக் குறைவானவை. 900 மில்லி மீட்டர் மழை ஆண்டிற்கு இங்கே பெய்கிறது. சராசரியாக பார்க்கும் போது இந்த அளவு அதிகபட்சமான மழை அளவுதான். பெரும்பாலான மழை வடகிழக்குப் பருவ காலத்திலேயே பெய்து விடுகிறது. தென்மேற்குப் பருவகாலத்தில் கொஞ்ச மழைதான் பெய்கிறது. மழைக் காலம் குறைவாக இருக்கும்போது பெய்த மழையைத் தேக்கி வைக்கக் கூடிய இயற்கை வளம் நமக்கு வேண்டும். அந்த இயற்கை வளம்தான் சோலைக்காடு. ஒரு மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடிய ஆற்றல் புல்வெளிகளுக்கும் சோலைக்காடுகளுக்கும் உண்டு. நகரங்களில் மும்மாரி பெய்யாவிட்டால் பரவாயில்லை.

காடுகளில் மும்மாரி பொழிந்தால் மூன்று மாதத்திற்கு இந்தத் தண்ணீரை அது தேக்கி வைக்கும். சோலையும், புல்வெளியும் தேக்கிய தண்ணீர்தான் ஓடைகள். எங்கெல்லாம் சோலைகளும் புல்வெளிகளும் இருக்கிறதோ அங்கெல்லாம் வற்றாத ஓடைகள் இருக்கும். வற்றாத ஓடைகள் ஒன்று சேர்ந்தால் சிற்றாறுகள். சிற்றாறுகள் ஒன்று சேர்ந்தால் பெரும் நதிகள். இன்றைக்கு நம்முடைய நதிகள் வற்றிப் போய் இருக்கிறது, வறண்டு போய் இருக்கிறது என்பதெல்லாம் காட்டை நாம் இழந்து கொண்டிருப்பதற்கான குறியீடுகள். இன்றைக்கு தமிழிலக்கியத்தையும் சுற்றுச் சூழலையும் உற்றுநோக்குபவர்கள் நம்முடைய `திணை’க் கோட்பாட்டை புதிய பரிணாமத்தோடு பார்க்கிறார்கள்.

`எகோ சிஸ்டம்’ என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்களால் முன்மொழியப்படுகின்றவற்றைத்தான் நம்முடைய முன்னோர்கள் திணைக் கோட்பாடாக வைத்து வாழ்ந்தே காட்டி இருக்கிறார்கள் என்று, இவை இரண்டையும் ஒப்பிட்டு ஆய்ந்தவர்கள் இன்றைக்கு வாதிடுகிறார்கள் `ஃபாரஸ்ட் எகோ சிஸ்டம்’ என்று சொல்லப்படுவதுதான் முல்லை நிலம். `மௌன்டன் எகோ சிஸ்டம்’ என்று சொல்லப்படுவதுதான் குறிஞ்சி நிலம். இப்படியே `ரிவர் எகோ சிஸ்டம்’, `மெரைன் எகோ சிஸ்டம்’ என்று நிறைய பிரிக்கிறார்கள். ஆனால் நம்முடையது ஒரு பொதுவான ஐந்து சிஸ்டம். அதில் முதலாவது; குறிஞ்சி. அந்த மலை, மலைசார்ந்த பகுதியில்-நம்முடைய வரலாறு தெரிந்தளவில் பேரழிவெதுவும் நடந்ததில்லை. நாம் காட்டை அழித்து கழனியாக்கி இருக்கிறோம்.அதாவது முல்லை நிலத்தை அழித்து மருத நிலமாக்கியுள்ளோம். ஆனால் குறிஞ்சியை அழித்து நாம் எதுவுமே பண்ணவில்லை. அந்த அழிவு வெள்ளைக்காரனின் காலத்தில்தான் ஆரம்பித்தது. வியாபாரம் பண்ண வந்தான், நாடு பிடிக்க வந்தான் என்ற வரலாறெல்லாம் நமக்குத் தெரிந்ததே. நாடு பிடித்து நாட்டை சுரண்டிக் கொண்டிருந்த போது அவனுக்கு இருந்த ஒரே சிக்கல், வருடத்தில் பல மாதங்கள் மழை பெய்யும் குளிர்நாடான இங்கிலாந்திலிருந்து வந்த அவன் வருடம் முழுக்க வெயில் அடிக்கும் இந்தியா போன்ற ஒரு நிலப்பரப்பில் வசிப்பதென்பது இலகுவானதாக இல்லாமல் இருந்தது. வியாபாரமும் அரசியல் போரும் நடத்திய போது அவனுக்கு இது தெரியவில்லை. இங்கு காலூன்றிய பிறகு அவன் தன் நாட்டைப்போன்ற குளுமையான பகுதிகளைத் தேட ஆரம்பித்தான். வெறும் பழங்குடி மக்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு அந்தப் பழங்குடி மக்களைப் பின் தொடர்ந்து சென்று அவன் பார்த்தபோது அங்கிருந்த தட்பவெட்பம் அவனுக்குப் பிடித்து விட்டது. உடனே அங்கேயே தங்கிவிட்டான். அப்படிபோய் உட்கார்ந்த பிறகுதான் அங்கிருந்த தாவர வளமையை – அவன் நாட்டில் இல்லாத வளமையை உணர்ந்தான். தேக்கு, ஈட்டி, சந்தனம் போன்ற மரங்களை வெட்டிக் கொண்டு போய் அவனது நாட்டில் கட்டிடங்களைக் கட்ட பயன்படுத்தினான். அப்படி அவனால் அழிக்கப்பட்ட சோலைகளில் புதியதாக தேயிலையைக் கொண்டுவந்து பயிரிட்டான். சும்மா கிடந்த புல்வெளிகளை `வேஸ்ட் லேண்ட்’ என்று தனது நிலப் பதிவேட்டில் பதிவு செய்தான். அவனது நாட்டிலுள்ள புல்வெளி என்பது `வேஸ்ட் லேண்ட்’டாக இருந்ததை எண்ணி இதையும் அவன் அப்படிக் குறிப்பிட்டான். ஆனால் நமது புல்வெளிகள் தரிசு நிலம் அல்ல; பல காலம் தண்ணீரைத் தேக்கி வைத்து ஜீவநதிகளை உற்பத்தி செய்யக்கூடிய மூலநிலங்கள் அவை. அதை அவன் உணரவில்லை. அந்தத் தரிசு நிலங்களை முன்னேற்றுவதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து சதுப்பு நிலங்களின் தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கக் கூடிய யூக்கலிப்டஸ், வேட்டல் போன்ற மரங்களைக் கொண்டு வந்து நமது புல்வெளிகளில் நட்டு வைத்தான். இதனால் நமது இயற்கைச் சுழற்சியை மாற்றி அமைத்தான்.

வெள்ளைக்காரன் போன பிறகும் அதே வழிகளை நாம் பின்பற்றினோம். நீலகிரி, கூடலூர் பகுதிகளில்மட்டும் கடந்த 40 ஆண்டுகளில் மூவாயிரம் வற்றாத ஓடைகள் வற்றிப்போய் இருக்கின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன. காரணம், என்னவென்றால், அந்த ஓடைகளைப் பெற்றுத் தந்த சோலைப் புல்வெளிகளை இன்றைக்கு நாம் இழந்து இருக்கிறோம். நான் என்னுடைய பால்ய பருவத்தில் மழை பெய்து ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடினால் சந்தோஷப்படுவேன். இன்று மழை பெய்த பிற்பாடு ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடுவதை நான் பார்க்கும் போது எனக்கு வலிக்கிறது. ஏனென்றால் மழை பெய்தால் உடனே ஆற்றில் தண்ணீர் ஓடக் கூடாது. மழை பெய்த தண்ணீர் காட்டில் தேங்கியிருக்க வேண்டும். அந்தத் தேங்கிய தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து ஆற்றிற்கு வரும். அன்றைக்கே ஓடுகிறதென்றால் மழைநீரைத்தேக்கி வைக்கக் கூடிய காடுகள் அழிந்துவிட்டன என்று தெரிய வருகிறது. ஆக, இதை உணர்ந்திருப்பதனால்தான் எனக்கு இன்றைக்கு வலிக்கிறது. மழை பெய்த நாலாவது நாளே கடலில் போய் கலக்கிறது. இல்லையென்றால் அழுக்கடைந்து வீணாகிறது.

ஆற்றிற்கும் வடிகாலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் ஓடினால் அது வடிகால். மழை பெய்யாக்காலத்திலும் தண்ணீர் ஓட வேண்டும், அப்போதுதான் அது ஆறு. மழை பெய்யாத காலத்திலும் ஆற்றில் எப்போது தண்ணீர் ஓடுமென்றால் மழை நீரைத்தேக்கி வைக்கக்கூடிய புல்வெளிகள் இருக்கும் போதுதான். ஆக நம்முடைய சுய நலத்திற்காகத்தான் காட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறோம். இன்றைக்கு வளர்ச்சி பற்றிப் பேசுகிறோம். அந்த வளர்ச்சி தண்ணீரைச் சார்ந்திருக்கிறது. தண்ணீர் காட்டிலிருந்து உற்பத்தியாகிறது. அப்போது காடுகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.

இப்போது சோலைக்காடுகளில் உள்ள தாவரங்களின் வளர்ச்சி உச்சநிலையை அடைந்திருக்கிறதா என்ற உங்களுடைய கேள்விக்குள்ளாக வருவோம். நம்மிடம் உலகத்தில் பெரிய மலை எது என்று யாராவது கேட்டால் இமயமலை என்று உடனே பதில் சொல்லி விடுவோம்.
இமயமலை மூத்ததா? நம்முடைய மேற்குத் தொடர்ச்சி மலை மூத்ததா? என்றால், ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் இமயமலை தோன்றுவதற்கு சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவாவது மேற்குத் தொடர்ச்சி மலை தோன்றி இருக்கும் என்று. இந்தப் பழமை எங்கு தெரிகிறது என்று கேட்டால், இந்த மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் தெரிகிறது. தாவரவியல் ஆய்வுகள் இன்றைக்கு இதை நிரூபித்திருந்தாலும் அதற்கு முன்பாகவே மண்ணியல் ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளன. சோலைக்காடுகளில் படிந்திருக்கக் கூடிய மேல் மண், அங்கிருக்கின்ற இலை தழைகளால் உருவாகின்ற மண். இந்தச் சோலைக் காடுகளைத்தான் வள்ளுவர் `அணி நிழற்காடு’ என்று சொல்லி இருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. சோலைக்காடுகள் உயர்ந்து வளராவிட்டாலும் அடர்ந்து வளரும். சூரிய ஒளி உள்ளே புகாது. அந்த சூரிய ஒளி உள்ளே புகாத இருட்டுப் பகுதியில் இலை தழைகள் கீழே விழுந்து, பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து நுண்ணுயிர்களால் மாற்றம் செய்யப்பட்டு அந்த மண் உருவாகிறது. ஒரு அரை இஞ்ச் அந்த மேல்மண் படிவுகள் உருவாகுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகுமென்று மண்ணியல் ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையினுடைய சோலைக்காடுகளில் அடுக்கடுக்காக அந்த மண் படிவுகள் இருக்கின்றன. அத்தனை அடுக்குகளும் அந்தக் காட்டின் பழமையைக் குறிக்கின்றன. இது உணர்த்துகின்ற இன்னொரு உண்மை, இந்தக் காட்டை நம்மால் உருவாக்க முடியாது என்பது. காடு வளர்ப்புப் பணிகள் என்று பலவற்றை நாம் செய்யலாம்.

காடு என்பது வெறும் மரங்கள் அல்ல. மரங்கள் என்பது மதிப்புடையதுதான். ஆனால் காடு என்பது நம்மால் உருவாக்க முடியாதது. சமூகக் காடுகள் என்று நம்மால் சில தோப்புகளை உருவாக்க முடியும். ஆனால் சோலைக்காடு என்று சொல்லப்படுவது அங்குள்ள நுண்ணுயிர், பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள், மற்றும் பல வளமைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இதை உங்களால் உருவாக்க முடியாது.

தீராநதி : குறிஞ்சி நிலத்தைப் பற்றி விரிவாகப் பேசியதால் இதைக் கேட்கிறேன். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மலரும் `குறிஞ்சி மலர்ச் செடிகள்’ தமிழகத்தின் கொடைக்கானல், நீலகிரியிலுள்ள முக்குறுத்தி மலைப் பகுதிகளில் 1600 மீட்டர் உயரத்தில் காணப்படக்கூடிய ஒரு தாவரம். தோல் பதனிடும் தொழிலுக்குத் தேவையான சீகை (wattle) மரங்களையும், செயற்கை நூலிழைக்காகத் தைல மரங்களையும் குறிஞ்சி நிலத்தில் நட்டு விட்டதால் இன்று குறிஞ்சித் தாவரம் அழிந்து விட்டது என்று ஒரு தகவல் கிடைக்கிறது. சேர்வராயன் மலைத் தொடரிலுள்ள, ஏற்காடு மக்களால் சிலுவை மரம் என்றறியப்படும் (wattle) என்ற மரம் இந்தியாவிலேயே காணக்கூடிய அரிய வகை மரம். தற்போதைய கணக்கீட்டின் படி இவை இரண்டே மரங்கள்தான் மீதமிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் எல்லா வகைக் காடுகளிலும் வளரக்கூடிய, நூறு இனங்களைக் கொண்ட மூங்கில் மரங்கள் (இது புல்வகையைச் சார்ந்தது) நவீன காகிதத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட பின் வரம்பின்றி அழிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பாரம்பரியமாக கூடை முடைவோரான பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தையும் அது பாதித்திருப்பதாகத் தெரிய வருகிறது. இந்த மாதிரியான பாதிப்புகள் குறித்த உங்களுக்குத் தெரிந்த மேலும் சில விவரங்களைச் சொல்ல முடியுமா?

காளிதாஸ் : குறிஞ்சியில் பலவகையான குறிஞ்சிகள் உண்டு. நாம் சிறப்பாக குறிப்பிட்டுச் சொல்லும் குறிஞ்சி என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக் கூடிய குறிஞ்சிச் செடியைத்தான். அது இந்தச் சோலைக்காடுகளை ஒட்டிய புல்வெளிகளில் வளரக் கூடியது. அந்த சோலைப் புல்வெளியில்தான் யூக்கலிப்டஸ், வேட்டல் மரங்கள் வெள்ளைக்காரனால் நடப்பட்டன என்று நாம் முன்பே பேசினோம். சீகை மரத்தின் பட்டைகள்தான் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு அதற்குக் கூட அந்தப் பட்டைகளை யாரும் பயன்படுத்துவதில்லை. தைல மரம் என்பது நட்டது மட்டும்தான் நிற்கும். இன்னொன்று பரவாது. சீகை மெல்ல மெல்ல சோலைகளில் பரவி சோலையை அழித்து விடும். அந்த மரத்தின் கீழ் ஒரு புல் பூண்டு கூட முளைக்காது. புல்வெளிகளையே இல்லாமல் பண்ணி விடும்.

நாட்டின் வளர்ச்சிக்காக காடுகளை அழிக்கலாமா? தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக மூங்கில் மரங்களை மட்டுமல்ல வேறு எந்த மரங்களையும் அழிக்கலாமா? காகிதத் தொழிற்சாலைகளின் மூலம் என்பது மரம். அப்படி என்றால் மரத்தை வெட்டுவதில் என்ன தவறு? அப்போது காகிதம் வேண்டாமா? இதைச் செய்யத் தடுக்கும் சுற்றுச்சூழல் வாதிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறது. போன நூற்றாண்டின் தொடக்கத்தில் வேண்டுமென்றால் இந்தக் கருத்தியல் சரியானதாக இருக்கலாம். வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படுகின்ற எல்லா நாடுகளும் சுற்றுச்சூழலை நாட்டின் வளர்ச்சியில் பிரதானமாக கருதுகின்றன. வளர்ச்சி பற்றிய அவர்களின் பார்வை மாறி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளர்ச்சி என்று அவர்கள் நினைத்தது எல்லாமே தொழிற்சாலைகளை அதிகப்படுத்துவது, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் பெருக்குவதுதான். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதி அவர்களுக்கு வேறு விைளவுகளைக் கற்றுக் கொடுத்தது. தொழிற்சாலைகளால் ஏற்படக் கூடிய விளைவுகளை அவர்கள் உணர ஆரம்பித்த பிற்பாடு அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், இன்றைய தேவைக்கான வளர்ச்சி மட்டுமே வளர்ச்சியல்ல; என் வளர்ச்சி அடுத்த தலைமுறையையும் பாதிக்காததாக இருக்க வேண்டும் என்றார்கள். அதனால் `டெவலப்மெண்ட்’ என்ற வார்த்தையை `சஸ்டைனபுல் டெவலப்மெண்ட்’ என்று மாற்றி உச்சரிக்க ஆரம்பித்தார்கள். வளர்ச்சிக்கும் நிரந்தர வளர்ச்சிக்குமான வித்தியாசம். நிரந்தர வளர்ச்சி என்பது நிஜமான வளர்ச்சி. இதையே மையப்படுத்தி தமிழகத்திலுள்ள ஒரு நிஜமான உதாரணத்தைச் சொல்ல முடியும். திருப்பூர் நகரம். இன்றைக்கு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது. திருப்பூரிலிருந்து நாம் பனியன் ஏற்றுமதி செய்கிறோம். எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோமென்றால் உலகத்தின் வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படுகின்ற எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இந்த வளர்ந்த நாடுகள் நமக்கு என்ன தருகிறதென்று கேட்டால் கம்ப்யூட்டர் தருகிறது, கலர் டி.வி. தருகிறது, செல்ஃபோன் தருகிறது, கார் தருகிறது. விதவிதமாக கலர் டி.வி., செல்போன், கம்ப்யூட்டர், கார் தருகின்ற நாடுகளால் பனியனை ஏன் உற்பத்தி செய்ய முடியவில்லை? அவர்களுக்கு தொழில்நுட்பம் தெரியாது என்று சொல்ல முடியாது. திருப்பூரில் இருக்கின்ற எல்லா தொழிற்சாலைகளுக்கும் தேவையான எல்லா தொழிற் கருவிகளும் மேலை நாடுகளிலிருந்துதான் வருகின்றன. தொழிற்கருவிகளை கொடுக்கக் கூடிய அவர்கள் ஏன் பனியனை உற்பத்தி செய்யவில்லை? அவர்களுக்குத் தெரியும் இந்தத் தொழிற்சாலையை வைத்தால் தன் மண் அழுக்கடையும், தன் ஆறு அழுக்கடையும் என்று. திருப்பூர் பக்கத்திலுள்ள ஒரத்துப்பாளையம் டேம் அதற்கு வாழும் சாட்சியாக இருக்கிறது. உலகிலேயே மிக விசித்திரமான டேம் எதுவென்றால் அது ஒரத்துப்பாளையம் டேம்தான் என்று நான் சொல்வேன். ஏனென்றால் நொய்யல் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள டேம் அது. உலகத்தில் எந்த அணையில் பிரச்னை ஏற்பட்டாலும் அணைக்குக் கீழே இருப்பவர்கள் அணையைத் திறந்து விடுங்கள் என்று பிரச்னை செய்வார்கள். அணைக்கு மேல் இருப்பவர்கள் திறந்து விடாதே என்று தகராறு செய்வார்கள். ஆனால் ஓரத்துப்பாளையம் அணையில் மட்டும்தான் கீழே இருப்பவர்கள் தண்ணீரைத் திறந்துவிட வேண்டாம் என்றார்கள். மேல் இருப்பவர்கள் தேக்கி வைக்காதே என்றார்கள். அப்பகுதிகளில் வீட்டுத் தோட்டத்திலுள்ள கிணற்றில் குனிந்து எடுக்கும் அளவிற்கு நீர் நிரம்பி இருக்கிறது. ஆனால் அந்தத் தண்ணீரை அவனோ அவனது கால்நடைகளோ குடிக்க முடியாது. தொட்டால் அரிப்பு வரும். குடித்தால் கால்நடைகள் செத்துப்போகும். தென்னை மரங்களில் இளநீர் வண்ணம் மாறி காய்க்கக் கூடிய அவலம் அங்கே ஏற்பட்டிருக்கிறது. இப்படி அணை முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்தது. தண்ணீர் என்ற பெயரில் ஒரு திரவ வெடி குண்டு அங்கிருந்தது. அத்தனையும் திருப்பூர் சாயப்பட்டறையிலிருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுகள். இன்றைக்கு வரைக்கும் வந்து கொண்டிருக்கிறது. நொய்யல் காவிரியின் துணை ஆறு. அப்போது நொய்யல் ஆற்றில் கழிவுகளைத் திறந்து விடப்பட்டால் காவிரியில்போய் கலக்கும். காவிரி எனக்கு சோறு போடுகின்ற நதி. அப்படியானால் நாம் ஏற்றுமதி செய்வது பனியனையா? இல்லை, நம் வயலை, நம் தண்ணீரை, நம் ஆற்றை. இதைத்தான் நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
குடிப்பதற்கான தண்ணீர் வேறு நாட்டிலிருந்து கன்டெய்னரில் வந்து இறக்குமதி ஆகுமா என்று காத்துக்கிடக்கின்ற ஒரு தேசமாக நம் தேசம் மாற வேண்டுமா என்ற கேள்வியோடுதான் இன்றைக்கு வளர்ச்சியைப் பற்றிப்பேச வேண்டி இருக்கிறது.

மரங்களை வெட்டவே கூடாது என்று நான் வாதிடவில்லை. இன்னமும் நமது நாட்டில் தரிசு நிலங்கள் அதிகமாக இருக்கின்றன. அதில் தொழிற்சாலைகளுக்கான மூங்கில் மரங்களை நட்டு வளர்க்கலாம். நம்மிடம் ஒரு கலாச்சாரம் இருந்தது. நம்முடைய வீட்டில் வளர்ந்த பூவரசன் மரத்தை வெட்டி கட்டில் செய்த கலாச்சாரம் அது. பூவரசனை வெட்டி விற்று அந்தக் காசில் கல்யாணம் பண்ணியவர்கள் நம் முன்னோர்கள். அந்த மரம் நாம் நட்டவை. அதை நாம் வெட்டலாம். மரம் நடும் கலாச்சாரத்தையே விட்டு விட்டு வெறும் ரியல் எஸ்டேட்டுகளை விற்கக்கூடியவர்களாக நாம் இன்றைக்கு மாறி இருக்கிறோம். இந்த ஆபத்துகளை முதலில் நாம் உணர்ந்தாக வேண்டும். அமெரிக்கா, ஜப்பான்போன்ற வளர்ந்த நாடுகளில் அவர்களின் வீட்டு உபயோகத்திற்கான மரங்களை அவர்கள் காட்டிலிருந்து அவர்கள் வெட்டுவதில்லை. தெரியுமா உங்களுக்கு?

தீராநதி : இந்த இடத்தில் ஒரு சம்பவம் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜப்பான் நாட்டில் வீட்டு மாடியிலிருந்து பூனைகள் விழுந்து திடீர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டனவாம். இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தேடித் துருவிய போது, அந்தப் பூனைகள் சாப்பிடும் மீன்களில் இருந்த `மெர்க்குரி’ தான் என்று தெரிய வந்தது. மீன்களுக்குள் எப்படி `மெர்க்குரி’ வந்திருக்கும் என்று மேலும் ஆராய்ந்தபோது, அந்த மீன்கள் உற்பத்தியாகும் ஏரியில் `மெர்க்குரி’ கலந்திருப்பது தெரிய வந்தது. அந்த ஏரியின் அருகாமையில் இருந்த தொழிற்சாலையின் கழிவிலிருந்து வெளியேறிய `மெர்குரி’கள்தான் ஏரியில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த `மெர்க்குரி’ கலந்த மீனைத் தின்றதால்தான் பூனைகளின் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இந்தத் தற்கொலைகள் நடந்திருக்கின்றன எனத் தெரிய வந்தது. இது உலகம் முழுக்க விவாதத்தை எழுப்பிய சம்பவம். ஆனால் இங்கு நீலகிரியில் இருக்கும் ஃபிலிம் பேக்டரியிலிருந்து அதே மாதிரியான மெர்க்குரிகள் வெளியேறி சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்று பல ஆய்வாளர்கள் எடுத்துச் சொல்லியும், அந்தத் தொழிற்சாலை எவ்வித இடையூறும் இல்லாமல் இன்றுவரை நடந்து வருகிறதே?

காளிதாஸ் : நீங்கள் குறிப்பிட்ட இந்தச் சம்பவம் ஜப்பானில் மினமாட்டா தீவில் ஏற்பட்டது. உலகை உலுக்கிய ஒரு சம்பவம் அது. 1950களின் இறுதியில் நடந்தது. அது ஒரு பாதரசத் தொழிற்சாலை. வெளியேறியது பாதரசக் கழிவல்ல; பாதரசமே வெளியேறியது. அப்படி வெளியேறிய பாதரசம் மினமாட்டா ஆற்றில் கலந்தது. பாதரசம் என்பது ஒரு தனிமம். அந்தத் தனிமம் தண்ணீரில் கலந்துவிட்டால் `மெத்தில் மெர்க்குரி’ என்கிற ஒரு உயிரிப் பொருளாகிவிடும். அது பல்கிப் படர்ந்து பெருகும். அப்படி தாவரங்களில் படர்ந்தது. தாவரங்களை சாப்பிடக் கூடிய சின்ன மீன்கள் வயிற்றில் படர்ந்தது. சின்ன மீன்களை சாப்பிட்ட பெரிய மீன்களின் வயிற்றிற்குப் பிறகு இடம் மாறியது. இந்த மீனைச் சாப்பிட்ட பூனைகளின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பூனைகள் தற்கொலை செய்து கொண்டன. இதற்கு `கேட் டான்ஸ்’ என்று கூட தனிப் பெயரே வைத்தார்கள். பூனைகள் இறந்த சில காலத்திலேயே அந்த அறிகுறிகள் மனிதர்களிடம் தென்பட்டன. மனிதர்களின் தலை பெரிதானது. குழந்தைகள் ஊனமுற்றுப் பிறந்தன. கை கால்கள் எல்லாம் ஒருவித நோய்க்கு உள்ளாகி சூம்பிப் போயின. இதற்கெல்லாம் காரணம், அந்தத் தொழிற்சாலைதான் என்று சொன்னபோதும் அந்த கம்பெனி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நீண்ட ஆய்வுக்குப் பிறகு அந்த நிறுவனம் மூடப்பட்டது. 1960களின் தொடக்கத்தில் மூடப்பட்டது. ஆனால் இங்கே 1990-களில் கொடைக்கானல் மலை உச்சியில் ஒரு தெர்மா மீட்டர் இந்துஸ்தான் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. இதே மெர்க்குரி இங்கும் பயன்படுத்தப்பட்டது. டன் கணக்கில் மெர்க்குரி இறக்குமதி செய்யப்பட்டது. கொடைக்கானல் உச்சியில் அது பயன்படுத்தப்பட்ட தென்றால் எந்தப் பக்கத்திலிருந்து அது வழிந்தாலும் கீழே இருக்கக் கூடிய ஓடைகளுக்கும் ஆறுகளுக்கும் வந்து சேரும். ஜப்பானில் `க்ரீன் பீஸ்’ போன்ற இயக்கங்களின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு அந்த கம்பெனி அங்கு மூடப்பட்டது மட்டுமல்ல; மிச்சம் இருந்த மெர்குரியை உலக வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. நம்முடைய கேள்வி என்னவென்றால், 1960 களில் ஜப்பானில் தூக்கி எறியப்பட்ட ஒரு கம்பெனி இந்தியாவிற்கு 1990களில் ஏன் வந்தது? இது மட்டுமல்ல; இன்றைக்கு இந்தியாவின் கருப்பு இரவாகக் கருதப்படுகின்ற, டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட போபால் விஷ வாய்வுக் கசிவில் பல உயிர்களைப் பலிவாங்கிய அந்த யூனியன் கார்ப்பெட் நிறுவனமும் அமெரிக்காவில் வைக்கத் தகுதியற்ற நிறுவனமாகச் சொல்லி வெளியேற்றப்பட்ட நிறுவனம்தான். `க்ளமென்ஸ்’ என்ற கப்பல் இந்தியாவிற்கு பிரான்ஸிலிருந்து வந்த வரலாறு என்பது நமக்குத் தெரியும். `க்ளமென்ஸ்’ கப்பல் காலாவதியான ஒரு கப்பல். உலகத்தில் காலாவதியாகின்ற கப்பல்களை இந்தியாவில் வைத்து உடைத்து விற்கக்கூடிய பெரிய பணக்காரர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். வெறும் கப்பலை மட்டும் உடைத்து விற்றார்கள் என்றால் பரவாயில்லை.
`க்ளமென்ஸ்’ கப்பல் காலாவதியான உடனே பிரான்ஸ் அரசு கப்பலை மட்டுமே இங்கு அனுப்பவில்லை. கப்பலில் பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் விஷக் கழிவுகளையும் சேர்த்து ஏற்றி அனுப்பியது. சர்வதேச சட்டப்படியே இது தவறு. ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்கு விஷக் கழிவுகளை அனுப்பக்கூடாது என்று சர்வதேச ஒப்பந்தமே இருக்கிறது. ஆனால் அனுப்பியது. இந்தியாவில் யாரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் நமக்கு யாருக்கும் இது தெரியாது. நல்ல வேளை க்ரீன் பீஸ்ஸின் பிரான்ஸ் கிளை இதை எதிர்த்தது. `டாக்ஸிகிளிக்’ என்ற அமைப்பு இந்தியாவில் இந்தத் தகவலை வெளிப்படுத்தியது. நாங்கள் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். இந்த எதிர்ப்பையெல்லாம் மீறி இந்தியஅரசு என்ன சொன்னதென்றால், “இட் இஸ் யூஷ்வல்” என்றது. அப்படி என்றால் இதற்கு முன்னும் கூட இந்த மாதிரியான விஷங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் சர்வதேச எதிர்ப்புகளுக்குப் பிறகு பிரான்ஸ் அரசே அந்தக் கப்பலை திரும்பப் பெற்றது.

கூவம் நதிக்கரையில் ஐரோப்பிய நாடுகளில் காலாவதியான சாக்லெட்கள் கொட்டப்பட்டு இருக்கின்றன. இந்தத் தகவல் அதிர்ச்சியாக இல்லையா உங்களுக்கு? சமீபத்தில் கோவைப் பக்கத்திலுள்ள காரமடை பகுதியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து பேப்பர்களை வாங்கி ரீ சைக்கிள் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று அங்கு கொட்டிக் கிடக்கின்ற கழிவுகளைப் பார்த்தால் வெறும் மருத்துவக் கழிவாக கொட்டிக் கிடக்கிறது. எலக்ட்ரானிக் கழிவுகளாக கொட்டிக் கிடக்கிறது. நம்முடைய நாட்டிலேயே `பயோ மெடிக்கல் வேஸ்ட்’ என்று சொல்லப்படுகின்ற கழிவுப் பொருட்களை வெளியில் கொட்டுவதற்கு கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. இதை மீறி இவற்றைக் கொட்டும் ஆஸ்பத்திரிகளும் உண்டு. இவ்வளவு நெருக்கடியான சட்டங்கள் இருக்கும் போது எப்படி வெளிநாட்டிலிருந்து மருத்துவ விஷக் கழிவுகள் எவ்விதத் தடையும் இன்றி காரமடை பகுதிக்கு வந்து சேர்கின்றன?

தீராநதி : சர்வதேச நாடுகளிலிருந்து பல படிப்பினைகளை நாம் கற்றுக் கொண்டபோது இங்குள்ள சில அரசியல் பேர சுய லாபத்திற்காகவே இந்தியா குப்பை நாடாக மாற்றப்படுகிறது. அரசியல் தலைவர்களுக்கு இந்த அபாயத்தை எப்படி உணர்த்தலாம் என்று நினைக்கிறீர்கள்?
காளிதாஸ் : அரசியல்வாதிகள் என்பவர்கள் எங்கிருந்தோ தோன்றிய தேவதூதர்கள் அல்ல; நம்மிலிருந்து முளைத்தவர்கள்தான். இந்தக் கேள்விகளை வைத்து நான் என்ன சொல்கிறேன் என்றால், முதலில் சுற்றுச்சூழலைப் பற்றிப் பேசுவது பொழுதுபோக்கானதல்ல; சுற்றுச்சூழல் என்பதே அரசியல்தான். சுற்றுச்சூழல் என்பது பொருளாதாரம். அது வெறும் `மரம் நடுவோம் மழை பெறுவோம்’ என்று நின்று போகின்ற புள்ளியல்ல. அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கக் கூடிய அல்கோர் `இன்கன்வீனியனெட் ட்ரூத்’ என்று உலக வெம்மையாக்கலைப் பற்றி அவர் கவலைப்படுகிறார் என்று சொன்னால், அது அரசியல், சுற்றுச்சூழலைச் சார்ந்ததுதான்.
நம் மீது கொட்டப்படுகின்ற அழுக்குகள் எல்லாம் ஒரு வல்லரசினுடைய அதிகாரத்தை நம் மீது திணிப்பது. இதற்கு கைப்பாவையாக நம்முடைய அரசியல்வாதிகள், அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது உண்மை. சுற்றுச்சூழல்தான் வேளாண்மையைத் தீர்மானிக்கிறது. வேளாண்மை என் தேசத்தைத் தீர்மானிக்கிறது. அப்படியானால் என்தேசத்தைத் தீர்மானிக்கக்கூடிய சுற்றுச் சூழலையும், வேளாண்மையையும் காப்பாற்ற வேண்டுமென்றால் என் தேசத்தின் அரசியலை இதற்குத் தகுந்த மாதிரி மாற்றவேண்டும். Rhine நதியைக் காப்பாற்றுவதற்கு ஷெர்மனியில் சுற்றுச்சூழல் இயக்கங்கள்தான் முதன் முதலில் முன்மொழித்தன. தேம்ஸ் நதியைக் காப்பாற்றுவதற்கு இங்கிலாந்தில் இயக்கமாக சேர்ந்து போராடினார்கள். ஆக, நாமும் நமது ஆறுகளை, இயற்கை வளங்களைக் காப்பதற்கு இயக்கமாகப் போராட வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது. இந்த மக்கள் இயக்கம்தான் நாளை அரசியலாக மாறும். அடுத்து வரப் போகின்ற தலைமுறையை இந்த மண்ணின் மீது அக்கறை உள்ள தலைமுறையாக மாற்றுவதுதான் எங்களைப் போன்றவர்களின் வேலையாக இருக்க முடியும்.

அதே வேளையில் சில அரசியல்வாதிகளிடம் சமீபகாலமாக சிறுசிறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை எங்களால் உணர முடிகிறது. தங்களால் முடிந்த அளவுக்குப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சி. மகேந்திரன் என்பவர் தமிழில் `ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்’ என்ற தலைப்பில் நதிகளைப் பற்றி எழுதி வருகிறார். அவர் ஒரு அரசியல் தலைவர். இந்த இடத்தில் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மீதான அரசியல் பார்வையெல்லாம் எனக்கு வேறாக இருந்தாலும், அவரால் 1972-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய வன உயிரினச் சட்டம், 1980-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கானுயிர்ச் சட்டம் இவை இரண்டுதான் இன்றைக்கு வரைக்கும் இந்தியாவில் 20 சதவீதம், தமிழ்நாட்டில் 17.5 சதவீதம் என்று சொல்கிறோமே அந்தக் காட்டை காப்பாற்றியிருக்கிறது. இந்தச் சட்டம் மட்டும் இல்லையென்றால் என்றோ காட்டை விற்று இருப்பார்கள். 1972-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை கூட்டிய `உலக சுற்றுச் சூழல் மாநாட்டில்’ இரண்டே இரண்டு நாட்டுத் தலைவர்கள்தான் நேரடியாக கலந்து கொண்டார்கள். ஒன்று : அந்த மாநாட்டை நடத்திய பால்ப் ஓல்மே. இரண்டு : இந்திராகாந்தி அமையார். மற்ற நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டுப் பிரதிநிதிகளைத்தான் அனுப்பி வைத்தது. அந்த மாநாட்டில் அவருக்குக் கிடைத்த உணர்வின் உந்துதல்தான் நம் நாட்டில் உள்ள காட்டை காப்பாற்றுவதற்காக சட்டத்தை உருவாக்கியது. ஆனால், 2002_ல் நடைபெற்ற அடுத்த சுற்று மாநாட்டில் ஏறக்குறைய 115 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். இந்தியாவிலிருந்து டி.ஆர்.பாலு கலந்துகொண்டார்.

உலக அரசியல் தளங்களில் சுற்றுச் சூழல் என்பது பெரிய விவாதத்திற்கான பொருளாகப் பேசப்படுகிற இந்த வேளையிலாவது இந்திய அரசியல் தலைவர்கள் மிக கவனத்தோடு இப்பிரச்னையைக் கையாள வேண்டும்.

தீராநதி : நீங்கள், வெளிநாட்டில் காலாவதியான கப்பல்கள் எப்படி இந்தியாவை குப்பை தேசமாக மாற்றுகின்றன என்பதைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னீர்கள். `ப்ளூலேடி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட எஸ்.எஸ்.நார்வே என்கிற கப்பல் வங்க தேசத்திற்கு உடைக்க வந்தது. அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கிருந்து மலேசியா சென்றது. அங்கும் அனுமதி கிடைக்கவில்லை. சுமார் 1,240 டன்கள் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாஸும், பாலிக்ளோரினேட்டட் பைபினைல்ஸ் என்ற நச்சுத் தன்மையுடைய ரசாயனமும் இருந்ததாக அந்த நிறுவனமே ஒப்புக் கொண்ட அந்தக் கப்பல் இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்தது. குஜராத் மாநிலம் பவ நகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் உடைத்து பிரிக்கப்பட்டது. ஜூன் மாதம் 12-ம் தேதி தினமணியில் `நாம் என்ன குப்பைத் தொட்டியா’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியானது. அதில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு செப்டம்பர் 2005-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து ஒரு கப்பல் வந்தடைகிறது. பன்னாட்டு புகையிலை நிறுவனமான ஐ.டி.சி.யின் காகிதத் தொழிற்சாலைப் பிரிவு இறக்குமதி செய்திருக்கும் 25,000டன் பழைய பேப்பர் என்று சுங்க இலாகாவினிடம் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 1,000 கன்டெய்னர்களில் 960 கன்டெய்னர்களில் மட்டும் பழைய பேப்பர்களும் காகிதக் குப்பைகளும் வந்து சேர்ந்தன. மீதமுள்ள கன்டெய்னர்களில் அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி நகரத்தின் குப்பைகள் நிரப்பப்பட்டு இந்தியாவில் கொட்டுவதற்காக அனுப்பப்பட்டது. பிறகு இந்திய அரசால் கண்டறியப்பட்டு கப்பல் துபாய்க்குத் திருப்பி அனுப்பப்பட்டது. அங்கும் மறுக்கப்பட்டு மீண்டும் தூத்துக்குடி துறைமுகத்தில் அனுமதிக்காக காத்திருக்கிறது என்று எழுதி இருந்தார்கள்…

காளிதாஸ் : மேலை நாட்டினர் எவ்வளவு மோசமானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்லட்டுமா? சுனாமியால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாயின. இதில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு இந்தோனேஷியா. இந்தியா வெளிநாடுகளின் உதவியைப் புறக்கணித்தது. ஏனென்றால் இந்தப் பேரழிவால் ஏற்பட்ட நஷ்டத்தை நம்மால் சமாளிக்க முடியும் என்பற்காக. இந்தோனேஷியா அப்படியல்ல; எல்லா நாடுகளும் அதற்கு உதவின. இந்த சுனாமி முடிந்து ஆறு மாதம் கழித்து இந்தோனேஷியா அரசிடமிருந்து ஒரு தகவல் வருகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மேலை நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட மருந்துப் பொருட்களில் ஏறக்குறைய 20 சதவீதம் மருந்துகள் காலாவதியான மருந்துகளாக இருந்தன என்று. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றவனுக்கு தங்கள் நாட்டு மேலாண்மை செய்ய முடியாத காலாவதியான மருந்துகளை அனுப்புகின்ற அளவுக்கு பணக்கார நாடுகளின் கொடைத் தன்மைக்குப் பின்னால் ஒரு வஞ்சகம் இருக்கிறதென்று சொன்னால் நாம் ஏமாறுகின்ற வரை தன் நாட்டுக் குப்பைகளை நம் நாட்டிற்கும் அனுப்பிக் கொண்டுதான் இருப்பார்கள்.

தீராநதி : களக்காடு, ஆனைமலை போன்ற சரணாலயங்களில் அடர்ந்த மழைக்காடுகளின் உச்சியில் வாழக்கூடிய சிங்கவால் குரங்கினம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்ப்பவை. அதேபோல பாறை நிறைந்த வனப் பகுதிகளில் காணப்படுகின்ற வரையாடுகள் இன்று வேட்டைக்காரர்களின் கைவரிசையால் குறைந்துபோய்விட்டன. திருக்கொம்புடைய வெளிமான்கள் (பெருவெளியில் திரிந்து அலைவதால் இப்பெயர்) கிண்டி மாதிரியான சில இடங்களில் மட்டுமே உயிர் வாழ்கின்றன. சோலைக்காடுகளில் மட்டுமே ஜீவிக்கக்கூடிய வான்கோழி, இருவாசி, கானாங்கோழி, சத்தியமங்கலம் புதர்க்காடுகளில் காணப்படும் சிவிங்கிப் புலி (இன்றைக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை) ஒகேனக்கல் பகுதியில் வாழும் வரகுக்கோழி, உப்பு நீர் முதலை போன்ற ஜீவராசிகள் தமிழ்நாட்டுப் பகுதிக்கே உரித்தானவை. இவற்றின் பாதுகாப்புச் சூழல் இன்றைக்கு எந்த அளவில் இருக்கின்றது?

காளிதாஸ் : நீங்கள் குறிப்பிட்ட வரையாடு, சிங்கவால் குரங்கு இரண்டுமே ஏன் சிறப்பானதாக இருக்கிறதென்று கேட்டால் இவை இரண்டும் மேற்குத் தொடர்ச்சி மலையைத் தவிர்த்து உலகில் வேறு எங்கும் கிடையாது. இதைத்தான் `என்டமிக் அனிமல்ஸ்’ என்று சொல்கிறார்கள். அப்படி என்றால், இந்த மண்ணைத் தவிர வேறு எங்கும் கிடையாது என்பது பொருள். வரையாடு தமிழகம், கேரளத்தைத் தவிர வேறு எங்கும் கிடையாது. சிங்கவால் குரங்கு தமிழகம், கேரளம், கர்நாடகம் என்று மூன்று எல்லைப் பகுதிகளிலும் இருக்கின்றது.

சிவிங்கிப் புலியைக் குறிப்பிட்டுக் கேட்டீர்கள். அதை ஆங்கிலத்தில் Cheetah என்று சொல்வார்கள். Cheetah என்ற அந்த உயிரினம் இந்தியாவில் 1950-ம் ஆண்டு கடைசியாக காணப்பட்டது. இன்றைக்கு ஒரு சிவிங்கிப் புலிகூட இந்தியாவில் கிடையாது. சத்தியமங்கலக் காடுகளில் சிவிங்கிப்புலி முன்பு இருந்திருக்கிறது. இன்றைக்கு இல்லை. இன்றைக்கு நமது தமிழகப் பகுதிகளில் பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு விலங்குகள்தான் இருக்கின்றன. ஒன்று.: புலி. இன்னொன்று : சிறுத்தைப் புலி. முல்லை நிலம் என்று சொல்லப்படக்கூடிய எல்லா இடங்களிலும் ஒரு காலத்தில் புலி இருந்தது. முல்லை நிலம் என்று சொல்லப்படுகின்ற நிலம் இன்று இல்லை. சத்திய மங்கலத்தை ஒட்டி கொஞ்சம் இருக்கின்றன. 1940களின் தொடக்கத்தில் இந்தியாவில் 40 ஆயிரம் புலிகள் இருந்ததாக ஒரு மதிப்பீடு சொல்கிறது. ஆனால் இன்றைக்கு வெறும் 1600 புலிகள் மட்டும்தான் இந்தியா முழுக்கவே இருக்கின்றன. இன்றைக்கு இதில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதில் நமக்கு ஒரு சின்ன மகிழ்ச்சி இருக்கிறது. இந்தியாவெங்கும் புலிகளின் எண்ணிக்கை குறைந்ததாக கணக்கிட்டுக் கொண்டு வருகின்றபோது தமிழ்நாட்டில் மட்டும்தான் கொஞ்சம் அதிகரித்து இருக்கின்றது. 1973களில் Cheetah என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து நாடெங்கும் உள்ள புலிகளைக் காப்பாற்றுவதற்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தப் புலித் திட்டத்தின் கீழ் களக்காடு, முண்டந்துறை பகுதி மட்டும்தான் இருந்தது. இப்போது ஆனைமலை, முதுமலை என்ற இரண்டு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் ஆனைமலையிலும், முதுமலையிலும் புலிகளின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது. டாக்டர் மன்மோகன் சிங் சுதந்திர தின விழா நிகழ்ச்சி உரையில் `புலிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். மக்கள் இன்றைக்கு வரை புலியை ஒரு பயங்கரமான விலங்கு என்று சொல்லி வருகிறார்கள். உயிரியல் ரீதியான ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், அதை `பயோ இன்டிகேட்டர்’ என்று குறிப்பிடுகிறார்கள் _ புலி இருக்கும் காட்டை ஒரு வளமான காடு என்று தைரியமாக அறிவித்துவிடலாம். ஆனால் அந்த ஆனைமலைக்கும், முதுமலைக்கும் இப்போது ஒரு ஆபத்து வந்திருக்கிறது. இது வேட்டைக்காரர்களால் வரும் ஆபத்துமட்டுமல்ல, வேறு சிலராலும் ஆபத்துகள் வருகின்றன. வனவிலங்குகளை மையமாக வைத்து உலக அளவில் பெரிய கள்ளச்சந்தையே செயல்பட்டு வருகிறது. சீனா போன்ற நாடுகளில் புலியின் மாமிசத்தைத் தின்றால் ஆண்மை பெருகும் என்ற மூட நம்பிக்கையினால் புலிகள் வேட்டையாடி கடத்தப்படுகின்றன. போதைப் பொருட்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கடத்தப்படும் பொருட்கள் கானுயிர் சம்பந்தமானவைதான். இதற்குக் காரணம் வனத்துறை அதிகாரிகளின் பற்றாக்குறை. கடந்த பல வருடங்களாக வனத்துறைக்கு ஆள் எடுக்கப்படவே இல்லை. பத்தாயிரம் ஏக்கருக்கு ஒரு காப்பாளர்தான் இருக்கிறார். பல மட்டங்களில் இருக்கின்ற காட்டு அதிகாரிகளில் ரேஞ்சர் ஆபீஸர் என்று சொல்லப்படுகின்றவர்களின் சராசரி வயதே ஐம்பதுக்கு மேல்தான். புதிய ஆள் சேர்ப்பு நடக்கவே இல்லை. வயதால் முதிர்ந்தவர்களான இவர்களால் எப்படி காட்டின் எல்லா பகுதிக்கும் போக முடியும்? அப்புறம் எப்படி காட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்? ஆகவே உடனடியாக தமிழக அரசு புதிய ஆட்களை எடுத்து பணியில் நியமிக்க வேண்டும். இந்தப் புதிய ஆள் சேர்ப்பின்போது என்ன செய்ய வேண்டுமென்றால் குறைந்தபட்சம் பழங்குடி மக்களை அதில் நியமிக்க வேண்டும். தமிழக அரசு மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் `வன ஆணையம்’ என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து வெளிமானுக்கு வருவோம். கிண்டியில் வெளிமான்கள் இருப்பது உண்மை. அதற்கு அடுத்தபடியாக கோடியக்கரையில் கடல் ஓரமாக வெளிமான்களுக்காகவே ஒரு தனிச் சரணாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும்கூட சிறிய அளவினதாகவே இருக்கிறது. சத்தியமங்கலம் பக்கமுள்ள சுழல்குட்டை என்ற பகுதியில் இயற்கையாக காடுகளை ஒட்டி நூற்றுக்கணக்கான வெளிமான்கள் (திருகுக்கொம்பு மான் என்றும் சொல்வார்கள்) இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கின்ற வெளிமான் வாழ்விடங்களிலேயே மிகச் செழுமையான இடமும் அதுதான். அந்தப் பகுதியை ஒரு வெளிமான் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்பது எங்களின் வெகுநாள் கோரிக்கை. சத்தியமங்கலம் பகுதியை ஒட்டிய அதை உடனே அறிவிக்க வேண்டும்.

சத்தியமங்கலத்தைப் பற்றித் தனியாகவே பேச வேண்டிய அளவுக்கு விஜயங்கள் இருக்கின்றன.
தீராநதி : நீங்கள் சத்தியமங்கலத்தைப் பற்றிச் சொல்ல நினைப்பதையும் சேர்த்துப் பேசலாம்?

காளிதாஸ் : சத்தியமங்கலம் வனப் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள்ளாக இன்னும் வரவில்லை. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை வனத்துறை மூன்று பிரிவாக பிரிக்கும். ஒன்று : காப்புக்காடு. இரண்டு : சரணாலயம். மூன்று : தேசியப் பூங்கா. இதில் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று குறிப்பிடுவது சரணாலயத்தையும், தேசியப் பூங்காவையும்தான். இந்த இரண்டிற்கும் இருக்கின்ற பாதுகாப்பு காப்புக்காட்டிற்கு இல்லை. சத்தியமங்கலப் பகுதி காப்புக்காடாக மட்டும்தான் இருக்கிறது. சத்திய மங்கல தெங்குமராட்டா பகுதியான பவானி, மோயாற்றுப் பகுதிகளில்தான் அதிக அளவில் வெளிமான்கள் வாழ்கின்றன. சத்தியமங்கல வனப்பகுதியில் சமீபத்திய கணக்கெடுப்பின்படி 12 புலிகள் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. சத்தியமங்கலம் மோயாற்றங்கரைப் பகுதியை ஆண்டுதோறும் 800 யானைகள் கடக்கின்றன. ஆசிய யானைகளின் மிகப் பெரிய புகலிடமாக விளங்கக்கூடிய இடம் இது. முதுமலை, நாகர்குலை போன்ற பகுதியைச் சேர்ந்த யானைகள் இதன் பகுதியாக அமைதிப் பள்ளத்தாக்கிற்கும், கொல்லேகால் போன்ற பகுதிகளுக்கும் செல்கின்றன.
மோயாறு பள்ளத்தாக்கில்தான் கழுதைப் புலி, பிணந்தின்னிக் கழுகுகள் இருக்கின்றன. சாதாரணமாக புலி இருந்தால் நல்ல காடு என்று பொருள். பிணந்தின்னிக் கழுகும், கழுதைப் புலியும் இருந்தால் அது வளமான காடு என்று உயிரியல் ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். ஏனென்றால் கழுதைப்புலியும், பிணந்தின்னிக் கழுகும் வேட்டையிடாத விலங்கினம். ஊண் உண்ணி. மற்ற பிராணிகள் வேட்டையாடி தின்று போட்ட எச்சங்களைத்தான் இவை தின்னும். வேட்டையாடுகின்ற விலங்கினங்கள் இருக்கின்றன என்றால் மான், மாடு, ஆடு என்று தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக பொருள். தாவர உண்ணிகள் வாழ்கின்றனவென்றால் காட்டில் தாவரச் செழுமை அதிகமாக இருக்கிறதென்று அர்த்தம். ஆக, இந்தக் கழுதைப் புலியும் பிணந்தின்னியும் இருக்கின்ற வளமான காடாக நீலகிரியின் ஒரு பகுதியும் சத்தியமங்கலத்தின் ஒரு பகுதியும் சேர்ந்த மோயாறு பள்ளத்தாக்கு இருக்கின்றது. ஆகவேதான் உடனே இதை சரணாலயமாக அறிவிப்பதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்கிறோம்.

தீராநதி : வேட்டைச் சிவிங்கி, அல்லது சிவிங்கிப் புலி என்று சொல்லப்படுகின்ற Cheetahவைப் பற்றிப் பேசினோம் இல்லையா? அதை ஒட்டி ஒரு தகவல் என் நினைவுக்கு வருகிறது. ஒரு காலத்தில் Cheetahவை வேட்டைக்காக தமிழர்கள் பழக்கிய தகவல்கூட பதிவாகி இருக்கிறது. சென்னையை அடுத்து உள்ள பொன்னேரியில் ஒரு விவசாயி Cheetahவுடன் சண்டையிட்டு வென்றதாக பத்திரிகைகளில் அக்காலத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. புதியதாக ஆரம்பிக்கப்பட இருந்த ஒரு தீப்பெட்டி கம்பெனி தனது தீப்பெட்டிக்கு பெயரிடுவதற்காக ஆலோசனை செய்த போது அது மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு பெயராக இருந்தால் உடனே போய்ச் சேரும் என்று கருதி அந்த விவசாயி Cheetahவுடன் போரிட்ட சம்பவத்தை மையமாக வைத்து Cheetah என்று பெயரிட்டு (அந்த வரைபடத்தோடு) தனது தயாரிப்பை வெளியிட்டது. சரி, நமது பேச்சிற்குள் வருவோம்.

1947-க்குப் பின் வந்த இருபத்தைந்து ஆண்டுகளில் காட்டுயிர்களின் எண்ணிக்கை குறைந்தது போல முன்பு எப்போதும் அந்த வேகத்தில் குறைந்ததில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்தியக் காட்டு உயிர்களின் நிலைமையை ஆய்வு செய்த அமெரிக்க காட்டு உயிரியலாளர் ஜார்ஜ் ஜேலர் ‘The Deer and the Tiger என்ற தனது நூலில் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் காட்டு உயிர்கள் அழிக்கப்பட்ட வேகத்தை 1880-களில் அமெரிக்கப் புல்வெளிகளில் சுற்றித் திரிந்த லட்சக்கணக்கான காட்டெருமைகள் கண்மூடித்தனமாக கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தோடு ஒப்பிடுகிறார். 100 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு அருகே வண்டலூரிலுள்ள காடுகளில் புலிகள் இருந்திருப்பதாக பலர் எழுத்தில் பதிய வைத்திருக்கிறார்கள். 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 1972-ல் கணக்கெடுப்பின்படி 1827 ஆக சரிந்துள்ளது. வனத்துறையின் கணக்கின்படி இன்று தமிழகத்தில் இருப்பது மொத்தம் 89 புலிகளே. இந்திய அளவிலான வனத்துறை மேற்கொண்ட புலி கால் தட அளவிலான கணக்கெடுப்பின்படி இன்று நம்நாட்டில் மொத்தம் 3720 புலிகளே உள்ளன. நம் நாட்டில் நாள் ஒன்றிற்கு ஒரு புலி கொல்லப்படுவதாக‘Environmental Investigation Agency’’ கணித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த அளவில் புலிகளின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் சமயத்தில் தமிழக அரசு ஆரோக்கியமான நடத்தைகளில் இறங்கிச் செயல்படுகிறதா?

காளிதாஸ் : நீங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒரு சின்னத் திருத்தம். புலியின் கால் தடத்தை வைத்து கணக்கிட்ட அளவில்தான் 3720 புலிகள் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு அந்த முறையே தவறு என்று சில ஆய்வாளர்கள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.

தீராநதி : ஆமாம். உல்லாஸ் கரந்த் என்ற காட்டு உயிர் ஆராய்ச்சியாளர் புலியின் கால் தடத்தை வைத்துத் துல்லியமாக புலிகளை அடையாளம் காணுவதோ எண்ணிக்கை செய்வதோ இயலாதென்று ஒரு வாதத்தை முன் வைக்கிறார் இல்லையா?

காளிதாஸ் : உல்லாஸ் கரந்த் என்ன சொல்கிறார் என்றால் கேமிரா ட்ராக் வைத்து கணக்கிடுவதே சரியானதாக இருக்குமென்கிறார். இரவு நேரங்களில் எடுக்கப்படும் நிழற்படங்களை வைத்து புலிகளை அடையாளம் காணுவதில் சிக்கல் இருக்காது என்கிறார். நம்முடைய கைரேகையைப் போலவே புலிகளின் உடற்கோடுகளில் மாற்றங்கள் இருக்கும். அதன் மூலம் சுலபமாக வித்தியாசத்தை உணர்ந்துவிடலாம் என்கிறார். ஒரே புலியின் பாதத் தடங்கள் ஒவ்வொரு முறையும் பதிவாகும் போது அதில் மாற்றங்களைக் காண முடியும். ஆகவே ஒரே புலியைப் பல முறை கணக்கில் சேகரித்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது என்கிறார் அவர்.
ஆக, இந்த கேமிரா மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 1600 புலிகள்தான் நம் நாட்டில் இன்றைக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆனை மலை, முதுமலை போன்ற பகுதிகள் புலிகளின் காப்பகங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் நிதி அதற்காக பெரும் அளவில் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த இடத்தில்கூட போதுமான அளவிற்கு அலுவலர்கள், களப்பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. வனப் பாதுகாப்பில் பழங்குடி மக்களின் பங்கை அரசு உறுதி செய்து கொண்டே இருந்தால்தான் காடு காப்பாற்றப்படும். இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தக் காப்பகங்களைத் தாண்டி வெளியிலும் புலிகள் இருக்கின்றன. சத்தியமங்கலம், கொடைக்கானல், குற்றாலம் போன்ற பகுதிகளில் புலிகள் வசிக்கின்றன. சரணாலயங்களுக்கு வெளியில் இருக்கும் புலிகளின் கணக்கெடுப்பை இன்னும் சரியாக நடத்தி அந்தப் பகுதிகளின் பாதுகாப்பையும் நாம் உடனே உறுதி செய்தாக வேண்டும்.
தீராநதி : யானைகள் குறித்து அதிக கவனம் தந்து போராடி வருகிறீர்கள்? வேழமுடைத்த தமிழ்நாடு என்று பெருமைப்பட்ட தமிழகத்தில் இன்று யானைகள் ரயிலில் அடிபட்டுச் சாகின்றன. பெருநகர வீதிகளில் பிச்சை எடுக்கின்றன. யானையின் அழிவைத் தடுக்க 1871-ல் சென்னை ராஷதானியில் யானைப் பாதுகாப்பிற்கு பிரிட்டீஷ் அரசு சட்டம் இயற்றியது. 1992-ல் இந்திய அரசு Project Elephant என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. இருந்தும் ஆசிய வகை யானைகள் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கின்றன. ஐம்பதாயிரம் ஆசிய யானைகளே இன்று உயிரோடு உள்ளன. ஆப்பிரிக்காவில் மூன்று லட்சம். ஆசிய யானைகள் அதிகம் உள்ளது நமது நாட்டில்தான். இதில் காட்டில் 28,000. அதில் பழக்கப்பட்டவை 3,500.

யானைகளுக்கும் நமது இந்திய மனிதக் குழுக்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டுமே தாய்வழிச் சமூகத்தை அடிப்படையாக கொண்டவை. யானை பற்றி உங்களது தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

காளிதாஸ் : எங்களைப் பொறுத்த அளவில் நாங்கள் யானை ஆர்வலர்கள், அவ்வளவுதான். ஆசியாவைப் பொறுத்தளவில் தலைசிறந்த யானை ஆய்வாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். டாக்டர் ராமன் சுகுமார். டாக்டர் சிவகணேசன், டாக்டல் பாஸ்கரன், டாக்டர் ராமகிருஷ்ணன், டாக்டர் அறிவழகன் இவர்கள் எல்லாம் யானை ஆராய்ச்சியில் மிகச் சிறந்த ஆய்வாளர்கள். இன்று மண்ணில் வாழக்கூடிய மிகப்பெரிய உயிரினம் யானை. கடலில் திமிங்கலம். சராசரியாக 500 சதுர கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு யானைக் கூட்டத்திற்கும் வசிப்பிடம் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 250 கிலோ கிராம் வரை ஒரு வளர்ந்த யானைக்கு உணவு தேவைப்படுகிறது. 150 லிட்டர் தண்ணீர் அதற்குத் தேவையாகிறது.

நமது சமீபத்திய வளர்ச்சிப் பணிகளின் விளைவாக யானை வாழும் காடுகளுடைய வாழ்விடங்கள் துண்டாடப்பட்டன. ஆசியாவில் 50 சதவீதம் யானைகள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியாவில் இருக்கின்ற யானைகளில் 50 சதவீதம் தென்னிந்தியாவில்தான் இருக்கின்றன. தென்னிந்திய யானைகளில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே உள்ள யானைகள் ஒரு பகுதியாக இன்றைக்குப் பிரிந்துவிட்டன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக பகுதிகளில் குறிப்பாக நாகர்குலை, பண்டிப்பூர், முதுமலை, வயநாடு இதையொட்டிய பகுதியில் யானைகள் தொடர்ந்து இடம்பெயருகின்றன. யானைகள் பெரும்பாலும் தனது `வலசை’ பாதைகளை மாற்றிக்கொள்வதில்லை.

ஒரு பரந்த வனப்பரப்பிலிருந்து இன்னொரு பரந்த வனப்பரப்பிற்கு யானைகள் போகக்கூடிய பாதைகள் இந்த வலசை பாதைகள். `எலிஃபென்ட் காரிடார்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அந்த வலசை பாதைகளுக்கு இப்போது சிக்கல் வந்திருக்கின்றன. ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கு யானை போய்ச் சேர்ந்தால் மட்டும்தான் அந்த இரண்டு காடும் அதனுடைய வாழ்விடமாக கருதப்படும். ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கு அதுபோய்ச் சேரக்கூடிய பகுதி துண்டாடப்பட்டால் ஒரு காடு மட்டும்தான் அதற்கு மிஞ்சும். அப்படியென்றால் அதன் வாழ்விடம் சுருங்கிப் போய்விடும். இந்த வலசை பாதைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு மட்டும்தான் யானையின் வலசை பாதைகள் தனியாரிடம் இருந்தாலும் அவற்றை விலைக்கு வாங்கி வனத்துறையோடு சேர்ப்பது என்ற முடிவை கொள்கை அளவில் எடுத்திருக்கிறது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். நாம் இன்றைக்கு முதலில் செய்யவேண்டிய விஷயம் என்னவென்றால், யானைகளின் மிக முக்கியமான வலசை பாதைகளை முதலில் `யானைகளின் வலசைப் பாதை’ என்று அரசு அறிவிக்கவேண்டும். காட்டில் மட்டுமே இந்த வலசை பாதைகள் இன்றைக்கு இல்லை. ஒரு காலத்தில் காட்டின் வலசை பாதையாக இருந்து இன்று விளைநிலங்களாக மாற்றப்பட்ட இடங்களிலும் வலசைப் பாதைகள் இருக்கின்றன.

இன்றைக்கு புதிய கலாச்சாரம் ஒன்று நம்மிடம் மிக வேகமாக பரவி வருகிறது. அமைதி வேண்டும், தனிமை வேண்டும் என்பதற்காக ஆசிரமங்களை காடுகளில் வைத்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கோவை மாவட்டம் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் தியானம், அமைதி என்ற பெயரில் பெரிய பெரிய கட்டிடங்களை ஆசிரமங்களாக கட்டி இருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள் பல காட்டை ஒட்டி எழுப்பப்படுகின்றன. அடுத்து சில மருத்துவமனைகள். இவையெல்லாம் எங்கு கட்டப்பட்டிருக்கின்றன என்று பார்த்தால் யானைகளின் வலசைப் பாதைகளை மறித்துக் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த வழியில் இடையூறு ஏற்பட்டதால்தான் யானைகள் வழிதவறி ஊருக்குள் வந்து விடுகின்றன. சமீபத்தில் ரயில் பாதையில் அடிப்பட்டு இறந்துபோன யானைகள் ஏறக்குறைய காட்டிலிருந்து ஆறு, ஏழு கிலோ மீட்டர் வெளியில் வந்து இறந்துபோய் இருக்கின்றன. யானை காட்டைவிட்டு வெளியே வருவதற்கான அவசியம் என்ன? அதற்கான உணவு காட்டிலேயே இருக்கிறது. ஆனால் அந்த உணவைத் தேடி செல்லக்கூடிய பாதை இன்றைக்கு தடுக்கப்பட்டிருக்கின்றது.

யானைகளை மட்டும் அல்ல எந்த உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று நாம் சொல்வது அவைகளுக்குப் பரிந்து பேசுவதாகாது. மனிதனின் சுயநலத்திற்காகவே இவை கொல்லப்படுகின்றன. யானைகளைப் பற்றிய ஆய்வுகள் மட்டுமே என்ன சொல்கிறது என்று கேட்டால், யானைகள் உள்ள காடுகள் மட்டுமே வளமானதாக இருக்கின்றன. யானைகள்தான் விதைப்பரவல் என்ற மகா உயிர் இயக்கத்தைச் செய்கின்றன. பல மரங்கள் யானை மட்டும் இல்லாவிட்டால் முளைக்கவே முளைக்காது என்று யானை ஆய்வாளர்கள் அறுதி இட்டுச் சொல்கிறார்கள். யானையை ஆகார உயிரினம் என்று சொல்கிறார்கள். சில நேரங்களில் யானை வாழ்கின்ற காட்டில்தான் புலி வாழமுடியும் என்றும் சொல்கிறார்கள். முட்புதர் நிறைந்த காடுகளில் புலி இருக்க வேண்டுமென்று சொன்னால் மான்கள் இருக்கவேண்டும். ஆனால் முட்புதர்கள் அடர்ந்திருந்தால் மான்கள் நடமாட முடியாது. மான் நடமாடாவிட்டால் புலி வராது. முட்புதர்க் காடுகளில் யானைகள் இருந்தால் யானை நடக்கும் இடமெல்லாம் பாதையாகிவிடும். அந்தப் பாதைகளை மான்கள் பயன்படுத்தும். மான்களைத் தேடி புலிகள் வரும். இப்படி மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கு யானைகள் மறைமுகமாக உதவுகின்றன. யானையின் சாணத்தில் உருவாகின்ற காளானைத் தின்பதற்கு காட்டு ஆமைகள் வருகின்றன. அதிலுள்ள பூச்சியைச் சாப்பிடுவதற்கு கோழிகள் வருகின்றன. அந்த சாணமே பிறகு காட்டிற்கு எருவாக மாறுகின்றது. ஆகவே யானை அழிந்து போனால் இந்த வளமை கெட்டுப்போகும். இந்த வளமை கெட்டுப்போனால் காட்டிலிருந்து நமக்குக் கிடைக்கின்ற மற்ற எல்லா வளங்களும் கெட்டுப்போகும்.

தீராநதி : தமிழ்ச் சமூகத்திற்கும் யானை இனத்திற்கும் பொதுவாக உள்ள தாய்வழி மரபின் ஒத்திசைவின் கூறுகளைப் பற்றியும் தொடர்ந்து பேசுங்கள்?

காளிதாஸ் : ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்… ஒரு தாய் யானை, அதனுடைய குட்டிகளைச் சேர்த்து `ஒரு குடும்பம்’ என்று வரையறை செய்கிறார்கள். பொதுவாக ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு வெளியேறிவிடும். இந்தத் தாய் யானை, தான் ஈன்ற ஆண் யானையை அது பருவம் எய்தும் 13 வயதில் தன் கூட்டத்திலிருந்து வெளியே துரத்திவிடும்.. அல்லது கூட்டத்தை விட்டு வெளியே வைக்கின்றது. அல்லது கூட்டத்தைவிட்டு அவைகளே வெளியே சென்றுவிடுகின்றன. இந்தக் கூட்டத்திற்குள்ளாகவே அந்த ஆண் யானை உறவு வைத்துக்கொள்வதை அவை அனுமதிப்பதில்லை. இந்தக் குறியீட்டை நமது தாய் வழிச் சமூகத்தில் பார்க்க முடிகிறது. குடும்பப் பாசம் என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்துகின்ற உயிரினமாக யானை மட்டும்தான் இருக்கின்றது.

யானைகளில் `மூத்த தாய் யானை’ என்று ஒன்றிருக்கிறது. அந்தத் தாய் யானை தாய்வழிச் சமூகத்தின் அத்தனை கூறுகளையும் வைத்திருக்கிறது. பொதுவாக அதன் கூட்டத்தை அதுதான் வழி நடத்திச் செல்லும். கூட்டத்திற்கு ஒரு ஆபத்தென்று சொன்னால் அதுதான் முன்னறிவிப்புச் செய்கிறது. கூட்டத்தை விட்டு ஒழுங்கீனமாக வெளியே செல்கின்ற யானைகளை கூட அது அடக்கி வைக்கின்றது. இன்னும் உறுதி செய்யப்படாத ஆய்வுகள், யானைகள் இறந்துபோன தன் மூதாதையர்களின் எலும்புகளை எடுத்து வைத்து நினைவுபடுத்திக் கொள்கின்றன என்று சொல்கிறது.

தீராநதி : யானைகளை மையமாக வைத்து இயங்கும் உயிரியக்கம் பற்றி சொன்னீர்கள். மான்களிலிருந்து உதிர்த்து விழும் அதன் கொம்புகள் முள்ளம்பன்றிகளின் ரோமங்களுக்கு கால்ஷியமாக (எலும்புச் சத்து) பயன்படுகிறது என்று படித்திருக்கிறேன். இந்த உயிரியக்கம் பற்றி வேறு ஏதாவது உங்களுக்குத் தெரிந்த தகவலைச் சொல்லுங்களேன்?

காளிதாஸ் : இந்தப் பூமியை மனிதர்களின் பூமி என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. இப்போது `உயிர்களின் பூமி’ என்று ஒத்துக்கொள்கிறோம். ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று பிணைத்திருக்கிறது. இது அதிகமானாலும் ஆபத்து. குறைந்தாலும் ஆபத்து. இந்த உணர்வு எங்கிருந்து ஆரம்பித்ததென்றால், அது 1970களில் மொரிஷியஸ் தீவில் `கல்வேரியாமேஜர்’ என்ற மரங்களுக்காக நடத்தப்பட்ட ஆய்விலிருந்து தான் ஆரம்பித்தது. இன்றைக்கு கல்வேரியா மேஜர் வெறும் 18மரங்கள்தான் மிச்சம் இருக்கின்றன.இந்த மரத்திலிருந்து விழும் விதைகளால் புது மரங்கள் முளைப்பதில்லை. அத்தனையும் முன்னூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவை. பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன. எல்லா முயற்சிகளும் தோல்வியுற்றன. இன்றைக்கு முளைக்காத இந்த மரம் 300 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி முளைத்தது? இந்தக் கேள்விதான் dodo என்ற பறவைகளின் அழிவைக் கண்டறிந்தது. இந்தப் பறவைகளின் உணவாக இம்மரத்தின் விதைகள் இருந்திருக்கின்றன. dodo பறவை உண்டு கழிக்கும் விதைக்குத்தான் முளைக்கும் ஆற்றல் இருந்திருக்கிறது. இன்றைக்கு dodo இல்லை. மரங்களும் முளைக்கவில்லை.

காட்டிலுள்ள ஒவ்வொரு உயிரினமும் காட்டிற்குத் தேவையான பங்களிப்பைச் செய்கின்றன. காட்டுப் பன்றி இருக்கிறது. நம்மை பொறுத்த அளவில் வெறுக்கத்தக்க விலங்கு. ஆனால் காட்டுப் பன்றிகள் கிழங்குகளைத் தேடும். அது குழி தோண்டும் இடமெல்லாம் காட்டில் உழுத இடமாக மாறிவிடும். மரத்திலிருந்து கீழே விழுகின்ற விதை, பன்றி உழுத நிலத்தில் உடனே முளைக்கும். இந்த வேலையை காடுகளில் நாம் செய்ய முடியாது. பன்றிதான் செய்ய முடியும். காட்டில் இருக்கின்ற யானை, மாடு போன்ற பெரிய விலங்குகள் இறந்துபோனால் அவை மண்ணோடு மண்ணாக மக்குவதற்கு பல மாதங்கள் ஆகும். நோய் பரவும். துர்நாற்றம் அடிக்கும். ஆனால் காட்டுப்பன்றி கூட்டம் இருந்தால் இறந்த விலங்கு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை சாப்பிட்டு இரண்டொரு நாளில் அப் பகுதியை தூய்மைப்படுத்தி விடும். நீங்கள் முதலில் குறிப்பிட்ட இருவாசி பறவை. இப்பறவைகளுக்கும் சுருளி மரங்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக ஒருஆய்வு சொல்கிறது. இருவாசி பறவை சுருளி மர பழங்களை சாப்பிட்டு எச்சமிடும் கழிவிலிருந்துதான் அம்மரங்கள் பரவுவதாக அந்த ஆய்வு சொல்கிறது. இன்னொரு ஆய்வு கடமான்களுக்கும் கடுக்காய்ச் செடிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்கிறது. இறந்து விழுந்த ஒரு மரம் பல பறவைகளின் கூடாக இருக்கிறது. பல பூச்சிகளுக்கு உணவாக இருக்கிறது. ஆனால் இன்றைக்கு இந்த உயிர் இயக்கத்தையெல்லாம் சிதைக்கக்கூடிய அளவிற்கு விபரீதங்கள் நடக்கின்றன. சுற்றுலாத்தலங்கள் என்ற பெயரில் பல தலங்கள் திறந்தவெளி சாராயக் கடைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. நீலகிரியை இந்தியாவிலேயே `உயிர்ச்சூழல் மண்டலம்’ என்று முதல் முதலாக யுனெஸ்கோ அறிவித்தது, உலகில் உள்ள 12 உயிர் வளமைமிக்க மலைகளில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. மெகா பயோ டையசிட்டி ஹார்ட் ஸ்பாட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இடம். இப்படி சொல்வது நாம் அல்ல; யுனெஸ்கோ. உயிர் வாயுவான ஆக்ஸிஷன் உற்பத்தியாகின்ற இடம் மரங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உலகெங்கிலும் இருக்கின்ற மனிதர்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவற்றிற்கான உயிர் வாயுவை பெருமளவிற்கு உற்பத்தி செய்கின்ற காடுகள் 13 நாடுகளில்தான் இருக்கின்றன. அந்த பதின்மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை உலகத்தின் உயிர் வாயு உற்பத்திக்காக செய்யும் பங்களிப்பு மிகமிக அதிகமானது.

ஆனால் இந்த உயிர்ச்சூழல் மண்டலத்தில் பல கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட்டு இரவு நேரங்களில் காதைக் கிழிக்கும் சத்தத்தில் பாடல்களைப் போட்டு விட்டு நடனமாடுகிறார்கள். நீலகிரியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கேளிக்கை விடுதிகள் உள்ளன. அவை காட்டின் அமைதியைச் சீர்குலையச் செய்து கொண்டிருக்கின்றன. இரவில் எழும் அலறல் சத்தத்தால் பல பறவைகள் தங்களின் வசிப்பிடத்தை காலி செய்து கொண்டு போய்விட்டன.

தீராநதி : சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சுற்றுலாவாசிகள் அங்குள்ள குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவிடுகிறார்கள். சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அதாவது செஞ்சியை அடுத்து வரும் வனப்பகுதியில் பேருந்தில் செல்லும் பயணிகள் குரங்குகளுக்காக உணவை கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். இதைப் பொறுக்க ஓடி வரும் குரங்குகள் கனரகவாகனங்களில் அடிபட்டுச் சாகின்றன. இதை கண்கூடாகவே நான் பார்த்தேன். வெளியிலிருந்து சுற்றுலாவிற்காக காட்டிற்குச் செல்லும் சுற்றுலாவாசிகள் காட்டு விலங்கினங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

காளிதாஸ் : நீங்கள் குறிப்பிட்ட குரங்கிற்கு உணவிடும் பிரச்னை எல்லா மலைப்பகுதிகளிலும் உள்ளது. குரங்குகளுக்கு உதவுவதாகச் சொல்லி அவற்றை பெரிய சீரழிவிற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது: இந்தக் குரங்குகளுக்குத் தேவையான உணவு அந்தக் காட்டிலேயே இருக்கிறது என்பதை. அப்படி அங்கு உணவில்லை என்றால் உணவுள்ள இடத்தைத் தேடி அது போய்விடும். நாம் உப்பிட்டு சமைத்த உணவு அந்த விலங்குகளுக்கு நோயைத் தருகிறது. அடுத்து, நமது உணவிற்குப் பழக்கப்பட்ட விலங்குகள் காட்டிலுள்ள உணவுப் பண்டங்களைத் தேடிப் போவதில்லை. ஆகவே நம்மைச் சார்ந்து செயல்பட ஆரம்பித்து விடுகின்றன. அப்படி செயல்படத் துவங்கும் போது அந்தக் குரங்குகள் பிச்சைக்காரர்களாக மாறிப் போகின்றன. நாம் உணவளிக்காத காலத்தில் அவை நமது வசிப்பிடங்களைத் தேடி நகரங்களுக்கு வருகின்றன. வந்தவை பிறகு நம் வீட்டில் இருப்பதைத் திருட ஆரம்பிக்கின்றன. முதலில் பிச்சைக்காரர்களாக இருந்தவை பிறகு திருடர்களாக மாறுகின்றன.

தீராநதி : உலகம் முழுக்க உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உடனடியாக அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றவேண்டிய உயிரினம் தவளை என்று உரைத்திருக்கிறார்கள். தவளைகளின் அழிவால்தான் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்திருக்கிறது. கொசுவத்திச் சுருள்கள் இல்லாத இரவு என்பது இன்பமற்றதாக மாறி இருக்கிறது. அதே போல கிராமங்களில், வயல்வெளிகளில் இருந்த அக்கா குருவிகள் அழிந்து வருகின்றன. தவளைகளின் அழிவு குறித்துப் பேசுவோமா?

காளிதாஸ் : ஒரு காலத்தில் கயிற்றுக்கட்டிலை வீட்டிற்கு வெளியே போட்டுத் தூங்கிய நம் முன்னோர்கள் இருந்தார்கள். இன்றைக்கு பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட வீடுகளில் கொசுத் தொல்லை இல்லாமல் தூங்கவே முடியாது. அப்போ அன்றைக்கு கொசுக்களே இல்லையா? இருந்தது. ஆனால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. எப்படி என்றால், அந்தக் கொசுவை, `லார்வா’ பருவத்திலேயே சாப்பிடக் கூட்டிய சில தவளைகள், பூச்சிகள் இருந்திருக்கின்றன. இந்தப் பூச்சிகள் நாம் கெமிக்கல் என்று சொல்கின்ற ஷாம்பூ, சோப்பு, கிளீனிங்பவுடர், வாஷிங் பவுடர் என்று பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்ட பிறகு அவை இறந்து போய்விட்டன. அதனால் தடையின்றி கொசுக்கள் பெருக ஆரம்பித்திருக்கின்றன.

இன்றைக்கு உலக வெம்மையாகுதலில் உடனடியாக பாதிப்புக்குள்ளாகும் உயிரினமாக தவளைகள் இருக்கின்றன. இங்கிலாந்தில் மட்டுமே காணப்படுகின்ற `கிராஸ் பில்’ பறவை இப்போது க்ரீன் லேண்ட் பகுதியில் காணப்படுகிறதாம். அப்போ மிகக் குளிரான பகுதியான க்ரீன் லேண்ட் பகுதி இங்கிலாந்திற்கு ஒத்த சீதோஷ்ண நிலைக்கு மாறி இருக்கிறது என்று அர்த்தம்? அல்லது இங்கிலாந்தினுடைய வெப்பநிலை அதிகமாகி இருக்கிறதென்று அர்த்தம்? அதே போல மேற்குத் தொடர்ச்சி மலையில் சில ஆய்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. டாக்டர் சலிம் அலி என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட உயரத்தில் மட்டுமே காணப்பட்ட பறவைகள் இன்றைக்கு அதை விட மிக உயரமான பகுதியான அவலாஞ்சி பகுதிகளில் காணப்படுவதாக பதிவு செய்திருக்கிறார். இது குறித்த ஆய்வு இன்னும் முடிவடையவில்லை. சீதோஷ்ண நிலையில் மாற்றம் வருகின்ற போது பறவைகள் இடம் மாறிப் போய் விடுகின்றன. விலங்குகள் இடம் மாறிப் போய் விடுகின்றன. ஆனால் தவளைகளால் அவ்வளவு பெரிய இடமாற்றத்திற்குத் தயாராக முடிவதில்லை. ஆகவே அவை மடிந்து போய்விடுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் பயிரிடப்பட்டிருக்கின்ற தேயிலைச் செடிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் படிப்படியாக மழைநீருடன் கலந்து ஓடைகள் வழியாக ஆறுகளில் வந்து கலப்பதினால் வாய்க்கால்களில் வசிக்கக் கூடிய தவளை, நண்டு போன்ற உயிரினங்கள் அம்மருந்தின் வீரியம் தாங்காமல் மடிந்து போகின்றன.

தீராநதி : நகரப் பகுதிகளில் மாட்டுச் சாணம் கிடைக்காததினால் இப்போது புதியதாக சாணப் பவுடரை மொழுகும் புதிய போக்கு உயர்குடிகளிடம் அதிகரித்து வருகிறது. இந்த சாணப் பவுடரின் நச்சுத்தன்மையால் எறும்பு, ஈசல், மண்புழு, தவளைகள் சாவதாக தெரியவந்திருக்கிறதில்லையா?
காளிதாஸ்: பெருநகரங்களுக்கு குடியேறியவர்கள் தங்களின் மரபுத் தொடர்ச்சியை எப்படியாவது வேறு வடிவங்களில் பேணத் துடிக்கிறார்கள். இதில் பேராபத்து இருக்கிறது. இந்த மனநிலையை வியாபாரமாக்க பல நிறுவனங்கள் முயலுகின்றன. சாணம் இட்டு வீட்டை மொழுகிய காலம் மலையேறி இன்று சாணப்பொடி என்று சொல்லக்கூடிய நச்சுப் பொடிகளை வீட்டின் முன்பாக தெளிக்கிறார்கள். இந்த சாணப்பொடி தடை செய்யப்பட்டிருக்கிறது. பலர் தற்கொலை செய்வதற்குப் பயன்படுத்தக் கூடிய பொருளாக இந்த விஷப் பொருள் இருப்பதினால் தமிழகம் முழுக்க அதை தடை செய்திருக்கிறார்கள். ஆனால் தடை மீறி விற்கப்படுகிறது. அதே போல தான் தலைக்கு அரப்பும், சீயக்காய்த் தூளையும் தேய்த்து குளித்த வம்சாவளியினர் நாம். இதற்கு மாற்றாக ஷாம்பூவையும் சோப்புவையும் முன்மொழிந்தார்கள். நாம் அதைப் பயன்படுத்தி உடல்முழுக்க நஞ்சான பிறகு இப்போது அவர்களே சொல்கிறார்கள். `நாங்கள் புதியதாக அறிமுகம் செய்கிறோம் சீயக்காய் சோப்பு’ என்கிறார்கள். ஏறக்குறைய இந்தியாவிலிருந்து 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதி ஆவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மருந்து தயாரிப்பதற்கான பொருட்களில் 60 சதவீதம் பொருட்கள் கானுயிர்களிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. நம்மிடமிருந்து நம் மூலிகைகளைப் பிடுங்கிக் கொண்டு மறுபடியும் பெயரை மாற்றி நவீன குடுவைகளில் கொண்டு வந்து காசாக்குகிறார்கள்.

அப்புறம் இன்னொரு விஷயம். 1952-ஆம் ஆண்டு வாக்கில் ஆங்கிலேயர்களால் கோதுமை விதைகளோடு சேர்த்துக் கொண்டு வரப்பட்ட பார்த்தீனிய விதைகள் இன்றைக்கு நமது காடுகளில் அசுர வேகத்தில் பற்றிப் படர்கின்றன. மற்ற எல்லாவற்றையும் அழித்துக் கொண்டு இச்செடி வளர்கிறது. இதனால் காடுகளில் இருந்த மூலிகைச் செடிகள் அழிந்து வருகின்றன. தும்பைச் செடிகள் இருந்த இடமெல்லாம் இன்றைக்கு பார்த்தீனியச் செடிகள் ஆக்ரமித்துள்ளன. நமது வேர்களைத் தேடி திரும்ப நினைக்கும் இந்த சமயத்திலாவது நமது மூலிகை நற்குணங்களை மனதில் வைத்து இந்தப் பார்த்தீனியங்களை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். `உணவே மருந்து’ என்று வாழ்ந்த சமூகம் நாம். நம் முன்னோர்களின் அறிவை இனியாவது மீட்டெடுப்போம் என்ற எண்ணம் நம்மிடம் தழைக்க வேண்டும்.

தீராநதி : தொல்காப்பியம் தொட்டு `பல்லுயிர் ஓம்புதல்’ என்று செல்லும் திருவள்ளுவர் வரை பசுமை இலக்கியம் என்பதில் முன்னோடிச் சமூகமாக நாம் இருந்திருக்கிறோம். இன்று வளர்த்தெடுக்கப்பட வேண்டிய பசுமை இலக்கியம் பற்றிப் பேசுவோமா?

காளிதாஸ் : `அரண்’ என்ற அதிகாரத்தில் வள்ளுவர் எழுதுகிறார். “மணிநீரும் மண்ணும் மலையும் அணி நிழற்காடும் உடையது அரண்” என்று எழுதுகிறார். என்னை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய குறள் இது. ஒரு காடு இந்த நாட்டிற்கு அரணாக இருக்குமென்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி அவர் யோசித்திருப்பார் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது.
பாரதிதாசன் எழுதுகிறார். “தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம்” என்று நீளும் அந்தக் கவிதையில் முதலில் கடுகு உள்ளம் என்கிறார். அடுத்து துவரை உள்ளம் என்று சொல்கிறார். துவரைக்கு அடுத்து தொன்னையுள்ளம் என்கிறார். அடுத்து மாம்பிஞ்சுள்ளம் என்கிறார். அப்புறம் தான் தாயுள்ளம் என்கிறார். இதில் வரும் உதாரணப் பொருட்களான கடுகு ஒரு தாவரப்பொருள். துவரை ஒரு தாவரத்தினுடைய விதை. மாம்பிஞ்சு ஒரு தாவரத்தின் காய். இதெல்லாம் சரி, இடையில் வரும் தொன்னை என்பதென்ன? இந்தக் கேள்வி எழுகிறது. நான் படிக்கும் காலத்தில் தொன்னை என்றால் பனையோலையில் செய்யப்படும் குடுவை என்று ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இயற்கை விளைச்சலை உதாரணமா காட்டும் பாரதிதாசன் இடையில் மனிதனால் செயற்கையாக செய்யப்படும் கைவினைப் பொருளை உவமையாக சொல்வாரா என்று ஆராய்ந்தால் அப்போதுதான் பாரதிதாசனுக்குள் இருக்கும் தாவரஅறிவு வெளிப்படுகிறது. தொன்னை என்பது பாண்டிச்சேரி பகுதியில் இருக்கும் ஒரு தாவரத்தினுடைய விதை. இன்று அழிந்து விட்டது.

துவரையைவிட பெரியது. மாம்பிஞ்சுவைவிட சிறியது. ஆக, தேடி உவமைகாட்டும் கவிஞன் வாழ்ந்த மண் இது. இரண்டாயிரம் வருடமாக முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைப் புகழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதுகிறார் “பாரியை பார்த்து முல்லை சொன்னது, முதலில் நிறுத்து மரம் வெட்டுவதையும் தேர் கட்டுவதையும்” என்று. இரண்டாயிரம் வருட இலக்கியத்தின் மீது புது வெளிச்சம் பாய்ச்சுகிறார் அவர். இதுதான் உண்மையான பசுமை இலக்கியம். இன்றைக்கு ஒரு கவிதையை எழுதும் போது வெறுமனே அந்த மரம், ஒரு பறவை என்று எழுதாமல் அந்த மரத்தின் பெயரைக் குறிப்பிட்டு எழுதுவதினால் அதன் வரலாறு இலக்கியத்தில் பதிவாகும். வண்ணதாசன் மிக அழகாக இதை செய்திருக்கிறார். அதேபோல ஜெயமோகனின் ரப்பர் மிக முக்கியமான பதிவு. அறிவுமதியின் அணுதிமிர் அடக்கு அதேபோலதான். இவை போதாது. எப்படி தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்பது தேவையோ, அதே போல பசுமை இலக்கியம் என்ற ஒன்றும் தேவையாகிறது.

-சந்திப்பு : கடற்கரய்
படங்கள் : சித்ரம் மத்தியாஸ்

வாழ்க ஜனநாயகம்

இரண்டு நாளுக்கு முன்பு தினத் தந்தியில் ஒரு செய்தியைப் பார்த்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை.
வேறு ஒன்றுமில்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் விட்டுப் போனவர்களை இணைக்கும் இறுதி முயற்சியாக இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்திருந்தது . அதில் ஒன்று செல்பேசி எண், மற்றொன்று தொலைபேசி எண். 8ம் தேதி கடைசி நாள் அதற்குள் அந்த எண்களுக்கு பேசினால் வீடு தேடி வந்து வாக்காளர் பட்டியலில் உங்களை இணைத்துக் கொள்வார்கள் என்றது அந்த செய்தி.

நமது நாடு எவ்வளவு முன்னேறிவிட்டது. குடிமக்களை என்னமாய் மதிக்கிறது ஆனது ஆகட்டும், போனது போகட்டும் என்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். உணர்ச்சி வசப்பட்டு என்ன செய்தேன் என்கிறீர்களா? அந்த எண்களுக்கு முயற்சி செய்தேன்.

முதலில் செல்பேசிக்கு, எண்களை மெனக்கிட்டு எனது செல்பேசியில் சேமித்திருந்தேன். என்ன பதில் என்று ஆவலுடன் அவர்கள் வீட்டுக்கு வர வசதியாய் வீட்டில் இருக்கும் நாளாகப் பார்த்து இன்றைக்குப் பேசினேன். எண்களை அழுத்திவிட்டு காத்திருந்தேன் சிறிது நேரத்திற்குப் பிறகு ‘ இந்த எண் சுவிட்ச்டு ஆப் ‘ என்றது ஒரு பதிவுக் குரல்.

கொஞ்சம் ஏமாற்றமாகத் தான் இருந்தது. ஆனாலும் தொலைபேசி எண் கையிலிருக்கும் தெம்பு இருந்தது. மனம் தளராத விக்கிரமாதித்யனாக தொலைபேசி எண்ணை தேடி அழுத்தி விட்டுக் காத்திருந்தேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ‘ டெம்ரவர்லி அவுட் ஆப் ஆடர் ‘ என்று சொல்லி அதுவும் கைவிட்டது.

எனக்கு பெரும் கோபமாகிவிட்டது. என் மேல் தான். அரசு சம்பந்தப்பட்ட செயல்கள் இப்படித் தான் என்பதை கால காலமாக உணர்ந்தும் அல்ப நம்பிக்கையில் செயல்பட்டு விட்டது குறித்து ஆயாசமாக இருந்தது.

என்னைப் போல எத்தனை பேர் பேச முயற்சி செய்து கொலை வெறியில் சுத்துறாங்களோ?

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன். 9382136694 – 25383695 –

வாழ்க ஜனநாயகம்…..

சின்ன வயதில் ரிட்டையர்ட் ஆனவன்

அப்பா ரிட்டையர்ட் ஆவதற்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்.

ஓய்வு பெறும் போது அலுவலகத்தில் நடக்கும் பிரிவு உபச்சார விழாவில் நான், தம்பி, அக்கா அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பப் பட்டார். ஓய்வு பெற்றாலும் பெற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்கு என்று ஆறுதல் கொள்ளவாக இருக்கும்.

மனைவிக்கு விடுமுறை எடுப்பதில் தான் பிரச்சனை. அந்தக் கம்பெனியில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது. எனவே விடுமுறை கேட்பதில் தயக்கம்.

எனக்கு அந்தப் பிரச்சனை கிடையாது. நான் திரைபட உதவி இயக்குனன். எங்கள் துறையில் வேலை இருந்தால் ராப் பகலாக, தொடர்ந்து இருக்கும். இல்லையேல் வருடக் கணக்கில் ஓய்வாய் இருக்கவும் நேரும். நான் அப்போது வருடக் கணக்கில் ஓய்வில் இருந்தேன். அதனால் நான் கிளம்புவதில் சிக்கல் இல்லை.

அதனால் என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தோம் மனைவியும், நானும்.

என் மகள் அன்புமதி ( அப்போது வயது 3 ) ‘ அப்பா ஊருக்கு போறோமா? தாத்தாவுக்கு என்னப்பா ‘ என்றாள்.

‘தாத்தா ரிட்டையர்ட் ஆகப் போறாங்க’ என்றேன்.

‘ அப்படின்னா ‘ என்றாள்.

விளக்கம் தெரியாமல் ஒரு வார்த்தையும் இருக்கக் கூடாது அன்புமதிக்கு.

‘ ஆபீஸ்ல வேலை செய்யிறாங்கல்ல , வயசாச்சுன்னா நல்லா வேலை செய்ய முடியாதில்ல, அதனால நீங்க வேலை செஞ்சது போதும் ரெஸ்ட் எடுத்துக்கங்க, இனிமே வேலைக்கு வர வேண்டான்னு சொல்லீருவாங்க அது தான் ரிட்டையர்ட்’ என்று என்னாலான விளக்கத்தைச் சொன்னேன்.

சொல்லி ஒரு நொடியில் அன்புமதி கேட்டாள் ‘ அப்பா நீங்க சின்ன வயசிலயே ரிட்டையர்ட் ஆகீட்டீங்களா?’

சிரிப்பு தாங்க முடியவில்லை. அதே நேரத்தில் சின்னதான ஒரு வலியும் எழுந்தது மின்னலென.

என் தொழில் பற்றி சரியாக விளங்க வைக்கத் தவறி விட்டதை உணர்ந்தேன்.

தனது சந்தேகத்தை எவ்வளவு அழகாக வெளிப் படுத்திவிட்டாள் அன்புமதி.

ஒரு உதவி இயக்குனரின் ஓய்வு என்பது மற்ற ஓய்வுகள் போலில்லை .அவன் படிகிற புத்தகங்கள், பார்க்கிற திரைப்படங்கள், யோசிகின்ற கதைகள், காட்சிகள், மற்றும் நண்பர்களிடம் ஈடுபடுகின்ற விவாதங்கள் எல்லாமும் முக்கியமான வேலைகள் தான். இவையெல்லாம் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற காரணிகள்.

ஆனால் சம்பாத்தியம் கிடைக்காத , அலுவலகம் கிளம்பிப் போகாத இவைகளை வேலையென்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

நல்ல கதைக்கான கரு கிடைத்த திருப்தியில் மாலை டீ சாப்பிடக் கிளம்பும் உதவி இயக்குனரை பக்கத்து விட்டுக்காரர் ‘ என்ன சார் நல்ல தூக்கமா ‘ என்று எதிர் கொள்வது ஒன்றும் புதிதில்லை.

எல்லாம் சொன்னேன் அன்புமதிக்கு.

இப்போது யாராவது கேட்டால் ‘ அப்பா கதை எழுதீட்டு இருக்கிறார்’ என்று சொல்கிறாள் அன்புமதி.

பிப்ரவரி14- 98, கோவை, காதலும் வெடிகுண்டும்…

எனது காதல் கவிதைத் தொகுப்பான ‘கவிதை அல்ல காதல் ‘ நூல் வெளியீட்டு விழா காதலர் தினமான பிப்ரவரி 14ல் 98ம் வருடம் கோவையில் நடந்தது.

அண்ணன் அறிவுமதியும், அண்ணன் பழநி பாரதியும் சிறப்பு விருந்தினர்கள்.மாலை 3 மணிக்கு விழா.

இடம் ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையில் இருக்கும் திவ்வோதயா அரங்கம்.
‘விழா நேரத்திற்கு முன்பே கூட்டம் வரத் துவங்கி விட்டது. விரைவாகவே அரங்கம் நிறைந்து விட்டது.

அண்ணன் பழநிபாரதி சாய்பாபா காலனியின் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

கூட்டம் அதிகமாகி விட்டதால் அவர்களைக் காக்க வைப்பது முறையல்ல எனவே விழாவைத் துவங்கி
விடலாம் அண்ணன் வந்து இணைந்து கொள்வார் என்று முடிவெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்கள்
மேடையில் அமர வைக்கப் பட்டார்கள்.

நண்பன் மாகலிங்கத்தோடு பாடலோடு விழா துவங்கியது.

பாதிப் பாடல் பாடிக் கொண்டிருகும் போது மாபெரும் வெடிச் சத்தம், அரங்கமே கொஞ்ச நேரம்
அதிர்ந்து அடங்கியது. கூட்டம் முழுவதும் வெளியில் ஓடி வந்தது.

என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. விரும்பத் தகாத ஏதோ நடந்து விட்டது என்பதை மட்டும் அனைவருக்கும் புரிந்தது.

எனக்கு விழா அவ்வளவு தான் என்று தோன்றியது.

உதவி இயக்குனரான நான் என் சக்திக்கு மீறி உறவினர்கள், நண்பர்களிடம் பிய்த்துப் பிடிங்கி பணம்
தயார் செய்து செலவழித்திருந்தேன்.விழா நின்று போய்விட்டால் இன்னொரு முறை நடத்துவதென்பது சத்தியமாய் சாத்தியமில்லை.

குழுக்கள் குழுக்களாக கூடி நின்று அனைவரும் பேசி சலசலத்த படி இருந்தார்கள்.

அண்ணன் ஓசைக் காளிதாசனும்,அண்ணன் கவிஞர் அவை நாயகனும் குழப்பத்தில் நின்று
கொண்டிருந்தவனை உலுக்கி உலகிற்கு கொண்டு வந்தார்கள்.

‘போய் மேடைல உட்காருங்க ஆனது ஆகட்டும் நிகழ்சியை நடத்துவோம்’ என்றார்கள்.

மீண்டும் அண்ணன் அறிவுமதி மேடையில் வந்து அமர்ந்தார் விழாத் துவங்கியது.

கொஞ்ச நேரத்திற்கொரு முறை பெரும் வேட்டுச் சப்தங்கள் கேட்ட படி தான் இருந்தது.

பழநி பாரதி அண்ணன் வரவில்லை. எங்கு இருக்கிறார் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை.

கொஞ்சம் பேர் பீதியில் கிளம்பி விட்டாலும் அரங்கம் நிறைந்திருக்க விழா நடந்தது.

பாதியில் பழநி பாரதி வந்து விட்டார்.

அவர் வந்த பிறகு தான் வெளியே வெடித்துக் கொண்டிருப்பவைகள் குண்டுகள் என்பதை அறிந்தோம்.

மேடையிலேயே வெளியில் குண்டு வெடிப்பதைப் பற்றி அறிவித்தும் அனைவரும் விழாவில் பங்கு
கொண்டது ஆச்சரியமாய் தான் இருக்கிறது இன்றும்.

பழநி பாரதி பேசும் போது ‘ காதலைப் பற்றிப் பேசுவது மதத்திற்கு எதிராகப் பேசுவது, சாதிகளுக்கு
எதிராகப் பேசுவது, அதற்கு உதாரணமாகத் தான் வெளியே யாரோ யாரையோ அழிக்க ஆயுதங்கள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பொன் சுதா நாம் பேசுவதற்காக பூக்களை வழங்கி கொண்டிருக்கிறார்’ என்று பேசினார்.’

விழா சிறப்பாய் பயத்தோடும் பதட்டத்தோடும் நிறைவடைந்தது.

விழா முடிந்ததும் தான் தெரிய வந்தது எங்கேயும் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை என்பது.

இரு சக்கர வாகனங்களில் ஒவ்வொருவராய் சென்று நண்பர்கள் விட்டு வந்தார்கள்.

பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த நண்பர் காந்தி, லதா அக்கா, நண்பன் மீன்ஸ், அம்சப்ரியா, மற்றும்

இன்னும் சிலர், சென்னயிலிருந்து, திருப்பூரிலிருந்து வந்திருந்த நண்பர்கள் அனைவரும் அரங்கிலேயே
தங்க வைக்கப் பட்டார்கள். விழா முடிந்தும் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்படியாக அந்த விழா அதில் பங்கு கொண்ட யாவருக்கும் மறக்க முடியாத திகிலான நாளாக அமைந்து விட்டது.

திகில் நிமிடங்கள்:

1. விழாவிற்கு முந்தைய நாள் இரவிலும், அதற்கு முந்திய நாள் இரவிலும் கோவை முழுக்க நானும்
நண்பன் மீனாட்சி சுந்தரமும், திலகேஸ்வரனும் போஸ்டர் ஓட்டினோம் அப்போது தானே அவர்கள்
குண்டுகள் வைத்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

2. சிறப்பு விருந்தினர்களுக்கு ரோஜாக்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆர் எஸ் புரத்திற்கு
நானும் என் தம்பி பிரசாத்தும் அத்வானி பங்கு கொள்ளும் விழாவின் மேடயைக் கடந்து போய் அதன்
வழியாகவே திரும்பினோம். அதன் பிறகு அரை மணி நேரத்தில் முதல் குண்டு அங்கு வெடித்தது.

 • எனது கவிதை நூல்கள்


  கவிதை அல்ல காதல்
  வெளியீடு: விஜயா பதிப்பகம்
  நானும் நீயும் நாமான போது
  வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
  வெளியீடு: விஜயா பதிப்பகம்