பெயர்க் காரணம்

824aa776135ed6068e3c56519034c870

“ எனக்கு ஏம்பா அன்புமதின்னு பேரு வைச்ச ” திடிரென ஒரு இருசக்கர வாகனத்தின் பயணத்தின் பாதியில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருந்த அன்புமதி கேட்டாள்.

நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி அர்த்தம் அறிந்து பிடித்துப் போய் வைத்ததினால் உடனடியாய் பதில் சொல்ல முடிந்தது.

‘ ஒரு மனுசனுக்கு அறிவு அதிகம் இருந்து அன்பு இல்லாமல் போனால் அவன் முழுமையானவன் இல்லை.

அதே போல ஒருத்தருக்கு அன்பு அதிகம் இருந்து அறிவே இல்லாமல் போனால் அதுவும் வீண் தான்.

அன்பும் அறிவும் ரெண்டும் இருந்தால் தான் அவங்க முழுமையான சிறந்த மனுசங்களா இருக்க முடியும். அதுனால தான் உனக்கு அன்பும், அறிவும் சேர்ந்த பெயராய் வைச்சிருக்கோம் ’ என்றேன்.

ரொம்ப கவனமாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஒரு விநாடி நேர இடைவெளிக்குள் 7 வயது அன்புமதி கேட்டாள் “ நான் அப்பிடி இருக்கேனாப்பா?”

சொன்னதை முழுமையாய் புரிந்து அதற்குள்ளிருந்து ஒரு அர்த்தமுள்ள மிகப் பெரிய கேள்வியை மிகச் சாதாரணமாய் கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திருந்தாள்.

எனக்குத் தான் வாயடைத்துப் போனது. மகிழ்விலும், அதிர்விலும்..

சாமாளித்துக் கொண்டு உடனே சொன்னேன் ‘ நீ அப்பிடித் தான் இருக்கே ’

அன்புமதியின் முகத்தில் பெயரைக் காப்பாற்றி விட்ட ஒரு நிறைவு.

என் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது எனக்குத் தெரியாது எனபதும். என்ன காரணத்தினால் என் அப்பா அம்மா வைத்தார்கள். என்பதை ஏன் இத்தனை வயது வரை அறிந்து கொள்ளத் தோன்றவில்லை என்ற கேள்வி எனக்குள் வளர்ந்து வீங்கிக் கொண்டிருந்தது.

காதல் கொண்ட பெண்மை

8767247-lg

குரல் காதில் விழுவதற்கு முதல் நொடியில் கூட பேசுவது
அமுதாவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஹலோ’
என்ற ஒரே வார்த்தையில் கண்டு பிடித்துவிட்டேன். சென்னைக்கு
வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நான் கல்யாணத்திற்கு வரவில்லை என்ற கோபத்தில் தொலைபேசி எண், முகவரி எல்லாம் இருந்தும் வைராக்கியமாய் அவள் தொடர்பு கொள்ளவே இல்லை.

தினந்தோறும் எதிர்ப்படும் முகங்களில் அவள் இருந்து விடமாட்டாளா எங்காவது துணிக்கடையில் துணி வாங்கிக் கொண்டிருக்கும் போதோ, மார்கெட்டில் இருந்து காய்கறி பையை சுமந்தபடி வந்து கொண்டிருக்கும் போதோ அவளைப் பார்த்து விடமாட்டேனா என்று அவ்வப்போது தோன்றும்.

நானிருக்கும் சைதாப்பேட்டையில் இருந்து வண்டியில் போனால்
பத்து நிமிடம் கூடப் பிடிகாத தி நகரில் கோபால் தெருவில் இரண்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறாள்.ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னாள்.

உடனேயே அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அலுவலகத்தில் வேலை ஏதும் செய்யத் தோன்றாமல் வெறுமனே உட்கார்ந்திருந்தேன்.

நான் நினைத்திருந்தால் அமுதாவின் கல்யாணத்திற்கு போயிருக்க முடியும். ஆனால் போகப் பிடிக்கவில்லை.

ஆறு வருடங்களுக்கு முன்னால் சிபியோடு கோவை காந்திபுரதில் உள்ள அவனது அலுவலகத்திற்குப் போன போது தான் அமுதாவை முதன் முதலில் பார்த்தேன். பார்த்தவுடன் பிடித்துப் போவது மாதிரியான முகம். நிறம் குறைந்திருந்தாலும் ஏதோ ஒரு அம்சம் அந்த முகத்தின் அழகுக்கு முழுப் பொறுப்பு ஏற்று பொலிவுற வைத்திருந்ததது. அலங்காரங்களின் இரவல் இல்லாத நிஜ அழகு. கவனமான ஆனால் கண்களை உறுத்தாத ஆடைகளின் தேர்வு. மனதிலிருந்து வரும் சிரிப்பு,உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகள். டர்ந்த வனத்திற்குள் இதுவரை பார்த்திராததும், பெயரறியாததும், மிக அழகானதும் வாசம் நிரம்பியமானதொரு பூவைப் பார்த்தது போல இருந்தது. அந்த சந்திப்பு எனக்கு.

சிபி எனக்கு பால்ய நண்பன். சோலையாரில் மின் வாரியக் குடியிருப்பில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு சிபியுடையது. எனது முதல் நண்பன் சிபி தான். உறங்கும் நேரம் தவிர ஒன்றாகவே சுற்றுவோம். பத்தாவது படிக்கும் போது அவனின் அப்பாவிற்கு டிரான்ஸர்வந்துவிட்டது.

அதன் பின் வாரத்திற்கு ஒரு கடிதமாவது எழுதிக் கொள்வோம். பின் மாதத்திற்கு ஒரு கடிதம், வருடத்திற்கு ஒரு கடிதம் என்றாகி பின் கடிதங்களே இல்லாத சில வருடங்கள் ஓடிப் போனது.

நண்பனொருவனின் அறையில் தங்கி வேலை தேடும் முடிவோடு கோவைக்கு வந்து ஒரு மாதமாகி இருந்தது. ஒரு நாள் இரவுக் காட்சிக்கு ராகம் தியேட்டரில் டிக்கெட் வாங்க நின்றிருக்கும் போது தான் தற்செயலாய் மீண்டும் சிபியை பார்த்தேன். அவன் தான் முதலில் என்னை கண்டுபிடித்தான்.மீசையும் தாடியும் வந்திருந்தாலும் பெரிய மாறுதல்கள் இல்லாமல் இருந்தது அவன் முகம். கம்பியூட்டர் சயின்ஸ் படித்து முடித்து லோன் வாங்கி, சொந்தமாக விளம்பர டிசைன்கள் செய்து தரும் நிறுவனத்தை சில ஆண்டுகளாக நடத்தி வருவதாய் சொன்னான். மறுநாள் அவனே என்னுடைய ரூமூக்கு வந்து அலுவலகத்திற்குக் கூட்டி வந்தான்.

அதன் பிறகு சிபியின் அலுவலகமே என் முகவரி ஆனது. எப்போதும் அங்கேயே இருப்பேன். தப்பித் தவறி ஒருநாள் போக முடியவில்லை என்றாலும் சிபி தேடி வந்துவிடுவான். அங்குதான் முதன் முதலாய் கம்பியூட்டரைத் தொட்டுப் பார்த்தது.
இன்டர்நெட் என்றால் என்ன, இ மெயில் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டது. அமுதா தான் சொல்லிக் கொடுத்தாள். அவனது நிறுவனத்தில் நான்கு வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்தாள் அமுதா. சிபி, அமுதா இன்னும் செந்தில் என்று
மூன்று பேரைக் கொண்ட குட்டி நிறுவனம் அது. செந்தில் மார்கெட்டிங் பார்ப்பதால் எப்போதாவது தான் ஆபிஸில் பார்க்க முடியும். சிபியும் அமுதாவும் டிசைன் செய்வார்கள். முக்கியமான சந்திப்புக்கள், பேங்க் செல்வது , என அடிக்கடி வெளியில் போய் விட்டு இரவில் ழித்து வேலை பார்பான் சிபி.

மதியம் அங்கிருந்தால் எனக்கும், சிபிக்கும் பக்கத்தில் இருக்கும் செட்டிநாடு மெஸ்சில் இருந்து பார்சல் வந்துவிடும். அமுதாவுடன் சேர்ந்து மூன்று பேரும் சாப்பிடுவோம். விதவிதமான உணவு வகைகளோடு வரும் டிபன் பாக்ஸை எங்களுக்கு கொடுத்து
விட்டு பார்சல் சாப்பாட்டுத் தண்டனையை ஏற்றுக் கொள்வாள்.

பெரும்பாலான நேரங்களில் நானும் அமுதாவும் மட்டும் அலுவலகத்தில் இருப்போம். ஒரு சில நாட்களிலேயே நானும் அமுதாவும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். உரையாடல்களின் போது அவள் வாயை விட காதை அதிகம் பயன் படுத்துபவளாக
இருந்தாள். நான் என்னுடைய நேற்றைய நிகழ்வுகளையும், நாளைய கனவுகளையும் கொட்டித் தீர்ப்பேன்.எதைச் சொன்னாலும்
அக்கறையோடு கேட்பாள். சிபியின் சின்ன வயது சம்பவங்களை
ஆர்வத்துடன் கேட்பாள். பால்ய காலத்தில் அவன் குறும்பு
செய்வானா, நன்றாகப் படிப்பானா அவன் யாரையாவது
காதலித்தானா? என்று அவனது வாழ்க்கைச்சரித்திரத்தை எழுதப்
போவதுபோலக் கேட்பாள். சிபியைப் பற்றி பேசத் துவங்கினால்
அவளுக்கு வேலை கூட இராண்டாம் பட்சம் தான். அவனைப் பற்றிய பேச்சு அவளைக் கனவில் ஆழ்த்தி விடும், கண்கள் நிலை குத்தி நிற்கும். சொல்வதையெல்லாம் இறந்த காலத்திற்குள் இறங்கிச் சென்று பார்த்துக் கொண்டு இருக்கிறாளோ என சந்தேகம் வரும்.

எனக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் அவனது பேரை உச்சரிப்பதில் அவளுக்கு கிடைத்ததைக் கவனித்தேன். அவன் பார்க்காத போது அவனை அள்ளி விழுங்குவது போல பார்ப்பதும், சிறப்பாய் படிக்கும் ஒரு மாணவி ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனமாய் கேட்பது போல அவன் பேசும் வார்த்தைகளை மனப் பாடம் செய்வதும், எனக்கு வித்தியாசமாய் தெரிந்தது. ஒரு முறை சிபிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி பரிசொன்றை கொடுத்தாள். அதன் பிறகு தான் அன்றைக்கு பிறந்தநாள் என்பதே அவனுக்கு நினைவில் வந்தது. அவன் ஆச்சரியத்தோடு ‘எப்பிடி’ என்று கேட்க ‘தெரியும்’ என்பது மட்டும் அவளது பதிலாக இருந்தது. கேக் வாங்கக் கிளம்பிய போது ‘அமுதாவிற்கு நல்ல ஞாபக சக்தி ‘என்றான். நாம் விரும்பி நேசிக்கிற அக்கறை உள்ள சில விசயங்கள்எப்போதும் மறக்காது என்று அவனுக்குசொல்ல நினைத்தேன்.

எல்லாம் கவனித்து ஒருமுறை தனித்து இருக்கும் போது
அமுதாவிடம் ‘ நீங்க சிபியை விரும்புறீங்களா அமுதான்னு’
கேட்டேன். அவள் அதிர்ந்து போனாள்.சிறிது நேரம் மெளனமாய் இருந்து விட்டு, ‘ஆமா லவ் பண்ணுரேன்’னு சொன்னாள். அவனுக்குத் தெரியுமா என்று கேட்க பதட்டப்பட்டவளாக ‘ சொல்லல பயமா இருக்கு, ஒரு வேளை வேணான்னு சொல்லிட்டா என்னால தாங்கிக்க முடியும்னு தோணல, ஆனா சிபி எனக்குத் தான். என்னோட முருகன் என்ன கைவிட மாட்டான் ‘ என்றாள். அவனிடம் வாய்ப்பு இருக்கும் போது பேசி அவன் மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும் என்று நினைத்துக் கொண்டேன். என் மனசைப் படித்தவளைப் போல தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணுறேன்னு நீங்க சொல்லிராதீங்க ப்ளீஸ். எனக்கு தைரியம் வரும் போது நானே சொல்லிக்குறேன்.’ என்றாள்.

ஒரு பெண்ணின் காதல் எத்தனை உணர்வுப் பூர்வமானது என்பதை அமுதாவிடம் தான் தெரிந்து கொண்டேன். சிபியின் அசைவுகளை வைத்தே அவனது மனநிலையை துல்லியமாய் கணிக்க அவளால் முடிந்தது. அவனது சட்டையை இதற்கு முன்னால் எப்போது அணிந்தான் என்பதை சரியாகச் சொன்னாள். யாருக்கும் தெரியாமல் அவனது இருக்கையை துடைத்து வைப்பதை ஒருநாள் கண்டு பிடித்தேன். அவனுக்கு பிடித்த உணவு, நிறம், நடிகர், நடிகை, எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தாள். அவளது சிந்தை செயல் எல்லாமே சிபி தான்.

சிபி அமுதாவிடம் நன்றாகப் பழகுகிறான், அவள் மீது மதிப்பு
வைத்திருக்கிறான் என்பது எனக்குத் தெரியும் ஆனால் அவனுக்கு
காதல் இருக்கிறதா என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு முறை வீட்டில் இருந்து அவசரமாக அழைப்பு வந்ததும் ஊருக்கு கிளம்பினான். ஊரில் இருந்து பெண் பார்க்கப் போவதாக போன் செய்தான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் வந்ததும் அவனுக்கு அமுதாவின் காதலைத் தெரியப்படுத்தி விடுவதென்று தீர்மானித்தேன். ஆனால் சிபி வரும் போதே நிச்சயதார்த்தம் முடித்து கல்யாண நாளைக் குறித்து முடித்து விட்டு வந்திருந்தான்.

அமுதா இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்பது எனக்கு
கவலையாக இருந்தது. நான் தான் தயங்கிய படி விசயத்தைச்
சொன்னேன். நம்பாமல் சிரித்தாள் பிறகு என் குரலில் இருந்த
வருத்தத்தையும் உண்மையையும் உடனே புரிந்து கொண்டாள்.
மரண சேதியை கேட்டது போல அதிர்ந்து போனாள். வெடித்து
அழுதாள். அப்படி ஒரு அழுகை. வாழ்வில் எல்லாற்றையும்
இழந்துபோய் நிற்கும் ஒரு ஜீவனை போல இருந்தது
அவளின் நிலை.

எதிர்பாராத அதிர்ச்சி அவளை நிலை குலைய வைத்து விட்டது.
மணிக் கணக்கில் அழுதாள். ஒரு வேளை அமுதா தன் காதலை
சிபியிடம் சொல்லி இருந்தால் இப்படி நடக்காமல் இருந்திருக்கலாம். நாளையின் மீதுள்ள நம்பிக்கையில் இன்றைய கணங்களை அலட்சியப் படுத்தி விடுகிறோம். உலகின் அத்தனை கதைகளையும் விட திருப்பங்கள் நிறைந்தது வாழ்வென்பதை பல முறை மறந்தே போகிறோம். அழுது முடித்து எழுந்து போய் முகம் கழுவி வந்தவள உடனே வீட்டிற்கு கிளம்பினாள். என்ன நினைத்தாளோ ‘ இப்பிடி ஒருவிசயம் இருந்ததுங்கறதே சிபிக்கு என்னைக்கும் தெரிஞ்சிரக் கூடாது. என்னைக்குமே சொல்லிறாதீங்க ‘ என்று சொல்லி என்னையே பார்த்தாள். கலங்கிய கண்களொடு சம்மதமாய் தலை அசைத்தேன். மீண்டும் துவங்கிய அழுகையோடு கிளம்பினாள்.

சில நாள் விடுமுறைக்குப் பின் வந்தாள். எப்போதும் போலவே
இருந்தாள். சிபியின் கல்யாணத்தில் ஈடுபாட்டோடு வேலை
பார்த்தாள். அவனது மனைவியிடம் அதற்குள் பேசிப் பழகி அவள்
எதற்கெடுத்தாலும் அமுதா அமுதாவென்று அழைக்கும் படியாய்
தோழியாகிப் போனாள். எனக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது.
அதே வேளையில் சந்தோசமாகவும் இருந்தது.

அதன் பிறகு சென்னைக்கு வந்து சேர்ந்தேன். நல்ல நல்ல
இடங்களில் இருந்து எத்தனையோ மாப்பிள்ளைகள் வந்தும்
வீம்பாய் மறுத்து விட்டாள். யார் யாரோ என்னென்னவோ
சொல்லிப் பார்த்தும் முடியவில்லை. என்னிடம் போனில் பேசும்
போது சிபியை மறக்க முடியவில்லை என்றாள். நான் ஏதோ
சொல்லத் துவங்கும் முன் அட்வைஸ் பண்ணுனா பேசவே
மாட்டேன் தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ என்றாள். சிபியிடம் நீ
சொன்னா கேப்பா என்று நான் சொல்ல அவனும் சொல்லிப்
பார்த்திருக்கிறான்.

மூன்று வருடங்கள் பிடிவாதமாய் இருந்தவள் நேரில் கூட
பார்க்காமல் புகைப்படத்தைப் பார்த்து கல்யாணத்திற்கு சம்மதித்ததில் அனைவருக்கும் ஆச்சரியம். இத்தனைக்கும் மாப்பிள்ளைக்கு பெரிய படிப்பு இல்லை. ஏதோ தனியார் நிறுவனதில் கிளர்க் வேலை, சொல்லிக் கொள்ளும் படியான சம்பளமில்லை. அமுதா தான் இந்த கல்யாணத்தில் உறுதியாய் இருந்திருக்கிறாள். பின் சென்னை வந்து இரண்டு வருடங்கள் கடந்து இப்போது நினைவு வந்திருக்கிறது.

எனக்கு அவளை, அவள் வாழும் வாழ்வைப் பார்க்க ஆவலாய்
இருந்தது. அலுவலகத்தில் இருந்து சீக்கிரமாய் கிளம்பிவிட்டேன்.
என் மனைவியை அழைத்துப் போய் சரவணாவில் குழந்தைக்கு
துணியும் , சில விளையாட்டுப் பொருள்களும் வாங்கிக்
கொண்டேன். தியேட்டரில் படம் போட இன்னும் நிமிடங்களே
இருக்கிறதென்று பரபரப்போடு வண்டி ஓட்டும் ஒருவனின்
மனநிலையில் இருந்தேன். என் மனைவியிடம் பல முறை
அமுதாவைப் பற்றி சொல்லிருந்ததால் அவளும் ஆர்வமுடன்
இருந்தாள்.

கோபால் தெருவில் அவள் சொன்ன வீட்டின் முன்னால்
நிற்கும் போது வாரத்திற்கு இரண்டு தடவையாவது இந்த
தெரு வழியே போவேன் எப்படி கண்ணில் படாமல் போனாள்
என்று ஆச்சரியமாக இருந்தது. வாழ்வதற்காக இல்லாமல்
வாடகைக்காக கட்டப் படும் வீடுகளில் ஒன்றாக இருந்தது
அது. கீழே மூன்றும் மேலே மூன்றுமாக தீப்பெட்டி போன்ற
அறைகள். மாடியில் மூன்றாவது வீடு அவளுடையது. காலடி
சத்தத்தை கேட்டதும் வெளியே வந்தாள். அமுதாவிற்கு
கல்யாணமானவர்களுக்கே உண்டான சதைப் பிடிப்பான முகமும்
உடலும் வந்து விட்டிருந்தது. முகம் மலர்ந்து போனது எங்களைப்
பார்த்தும். என் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். வா என்றாள் என்னை உரிமையோடு.

முன் அறையில் அமர வைத்து விட்டு உள்ளே சென்று
தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். உள்ளே சமையல் அறை. முன்புறம் வரவேற்பறை, உறங்கும் அறை, உண்ணும் அறை, என எல்லாமாகிய ஒரு அறை. அறை சிறியது என்றாலும் அதை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருந்தாள் அமுதா. சப்தம் கேட்டு குழந்தை சிணுங்கியது. தொட்டிலில் இருந்து குழந்தையை
தூக்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள். அதனை வாகாக ஏந்தி கொண்டேன். ‘பரவாயில்ல குழந்தைய நல்லா தூக்கறீயே’ என்றாள் சிரித்த படி. குழந்தை அழகாக இருந்ததது. ரெம்பப் பழகியது போல சிரித்தது.

சமையல்அறைக்குப் போய் டீ போட்டு கூடவே தின் பண்டங்களுமாக வந்து கொடுத்து விட்டு கீழே உட்கார்ந்து கொண்டாள். எனது வீடு, வேலை பற்றி எல்லாம் விசாரித்தாள். பார்த்து பல வருடங்கள் ஆனதால் பேச விசயங்கள் நிறைய மிச்சம் இருந்தது. நிறைய பேசினோம். என் மனைவி குழந்தையை கொஞ்சிக் கொண்டு அவ்வப் போது அரட்டையில் கலந்து கொண்டாள். இத்தனைக்கும் நடுவில் நான் அமுதாவின் முகத்தையே உற்று பார்த்துக் கொண்டு இருந்தேன். முகத்தில் கசியும் அவளின் மனசை துழவிக் கொண்டிருந்தேன். அவள் சந்தோசமாக இருப்பதாகவே பட்டது.

அமுதாவைப் பெண் பார்க்க அரசாங்க வேலையில் இருப்பவர்கள், இன்ஜினியர்,டாக்டர் என்று எவ்வளோ மாப்பிள்ளைகள் வந்தார்கள். அமுதா நினைத்திருந்தால் இன்னும் வசதி உள்ள வாழ்க்கை அமைந்திருக்கும். ஆனால் இது போதும் என்ற நிறைவோடு இவள் வாழ என்ன காரணம் என்பதற்கான பதில் மட்டும் கிடைக்கவில்லை.

பக்கத்து வீட்டில் சன் செய்தி முடியும் சப்தம் கேட்டது. அமுதாவின் கணவரை பார்க்க ஆவலோடு இருந்தேன். எப்பவும் வந்திருவார், நீங்க வருவீங்கன்னு தெரியும், சொல்லிட்டு சீக்கிரம் வரேன்னார் இன்னும் காணமேன்னு அமுதா சொல்லிக் கொண்டே இருந்தாள்.

‘அக்கா உங்களுக்கு போன்’ என்ற படி பக்கத்து வீட்டு சிறுவன் வந்து செல்போனை அமுதாவிடம் கொடுத்தான். அவளின் கணவன் தான் பேசுகிறார் என்று தெரிந்தது. அலுவலகத்தில் அவசரவேலை காரணமாக வர முடியவில்லை தாமதமாகும் என்பதை தான் சொல்கிறார் என்பதை அவள் பேசுவதை வைத்தே புரிந்து கொள்ள முடிந்ததது. அமுதாவிற்கு கண்கள் கலங்கி விட்டது. ஏதோ கோபமாக சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.

‘ரெம்ப முக்கியமான வேலையாம் ஒனர் கூட ஒரு எடத்துக்கு போகனுமாம். வர லேட்டாகுமாம். ரெம்ப வருத்தப் பட்டாரு.’ சொல்லும் போதே கண்கள் கலங்கியது அமுதாவிற்கு.’பரவாயில்ல அவருக்கு என்ன அவசரமோ ப்ரைவேட் கம்பெனினா அப்பிடித் தான்.’ என்றேன். ‘சன் டே லீவ் தான அவரையும் கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வாங்க’ என்றாள் என் மனைவி. சரி என்று தலை அசைத்தாள்.

ஏதோ நினைவுக்கு வந்தவளாக’அட மறந்துட்டேன்’ என்ற படி பீரோவைத் திறந்தாள் அமுதா. என்ன என்று நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அது கல்யாண ஆல்பம் . நானும் கேக்கணும்னு நெனச்சேன் பேசிக்கிட்டே
மறந்தாச்சு என்றேன். பெரியதாய் இருந்தது ஆல்பம். ‘ இதிலயாவது அமுதாவோட வீட்டுக்காரர பாக்கலாம்’ என்றாள் என் மனைவி.

ஆல்பத்தின் முதல் பக்கத்தில் அமுதா மாலை அணிந்து
நின்றிருந்தாள். அவளருகே மாப்பிள்ளை கோலத்தில் நிற்பவரை பார்த்ததும் அதிர்ந்து போனேன். இன்னும் ஒரு முறை உற்றுப் பார்த்தேன். நம்ப முடியவில்லை. அப்படியே அச்சு அசல் சிபி மாதிரியே ஒருவர். சிபியோ என்று கூட ஒரு கணம் தோன்றியது. திரைப் படத்தில் இரட்டை வேட காட்சியில் மட்டுமே சாத்தியமாக் கூடிய விஷயம். மிக நுட்பமான வித்தியாசங்கள் இருந்தது என்றாலும் சிபியை தெரிந்தவர்களுக்கு அவனே தான் என்று தோன்றும்.

அமுதாவை பார்த்தேன். என் பார்வையை பரிபூரணமாய் புரிந்து கொண்டு அர்த்தம் நிரம்பிய ஒரு புன்னகை செய்தாள். அது சாதனை புரிந்தவர்கள் செய்யும் வெற்றிப் புன்னகையைப் போல இருந்ததது. அதுவரையான அவளைப் பற்றிய விடை தெரியாத கேள்விகளின் மீது புதிய வெளிச்சமாய் பெருகியது அந்தப் புன்னகை.

நுழை வாயிலில்…

youngdirector_450x4301

சார், யாரு ?’ என்று என் பக்கம் திரும்பிக் கேட்டார் அவர். கேட்டவர் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இயக்குனர். கேட்ட இடம்
ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்.

சென்னை வந்து சில ஆண்டுகளாகியும் உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், அப்பா தனக்குத் தெரிந்தவரும், தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் தயாரிப்பாளரும் கதாநாயகருமான புகழ் பெற்ற நடிகரின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி கொடுத்து இருந்தார். கடிதமும் எதிர்பார்ப்புமாக நடிகரை சந்திக்க காத்துக் கொண்டிருதேன்.

இன்னும் அரை மணி நேரத்தில் உணவு இடைவேளை விட்டு விடுவார்கள். அப்போது தான் அவரைப் பார்க்க வேண்டும்
என்று அறிவுறுத்தப் பட்டிருந்தேன். என் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற வினாடிக்காக பதட்டமும், பரபரப்பும், சற்று சந்தோசமும், வருத்தமுமாக கலவையான எண்ண ஓட்டங்களோடு காத்திருந்தேன்.

இவ்வளவு அருகில் இருந்து இவ்வளவு நேரம் படப்பிடிப்பை பார்க்கக் கிடைத்தே பாக்கியமாய் உணர்ந்தேன்.

இடையில் கிடைத்த இடைவேளையின் போது எனக்குப் பக்கத்தில் வந்து நின்றார் இயக்குனர். இணை இயக்குனர் ஒருவரும் உடன் இருந்தார். வேடிக்கையாய் அவர்கள் பேசிய ஒரு விசயம் என் காதிலும் விழுந்ததில் அனிச்சையாய் சிரித்துவிட்டேன்.

இயக்குனரும், உதவியாளரும் திரும்பிப் பார்த்தார்கள்.
படப்பிடிப்புக்குத் தொடர்பில்லாத யாரிவன் என்று பார்த்தார்கள். நான் மனசுக்குள் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்குத் தெரிந்தவனாகி விடுவேன் என்று சொல்லிக் கொண்டேன்.

அப்போது தான் ‘ சார் யாரு?’ என்றார் இயக்குனர் என்னைப் பார்த்து. யாரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று சொன்னதும் பிரேக்கில பாருங்க என்று சிரித்த படி சொன்னார். எதற்காகவென்று அவர் கேட்கவில்லை. அதற்குள் ‘ரெடி ரெடி’ ஒளிப்பதிவாளர் குரல் கொடுக்க இயக்குனரும் இணை இயக்குனரும் அவசரமாய் கிளம்பினார்கள்.

அது காவல்நிலைய செட். அவ்வளவு இயல்பாய் இருந்தது அது. ஒருமுறை சுவரில் சாயும் போது அது துணி என்பது உரைத்தது. சில இடங்களில் காட் போர்டு சுவர்கள். எது நிசம் எது பொய் என்பதை அறிய முடியாமல் மர்மமாய் இருந்தது.

டிராலி, கிரேன், கிளாப், மைக், நாகரா, லைட்டுகள் என்று ஒவ்வொன்றாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். திடிரென்று ‘பிரேக்’ என்று உரத்த சத்தம் கேட்டது. உணவு இடைவேளை
அறிவிக்கப்பட்டாயிற்று கல்லுக்கு உயிர் வந்தது போல பரபரப்பாகிவிட்டேன்.

உடலுக்குள் ரத்தம் வேகமா ஓடத் துவங்கியது. இயக்குனருடன் பேசிய படி கதாநாயகன் செட்டுக்கு வெளியே நடக்கத் துவங்கினார். நானும் ஓடிப் பின் தொடர்ந்தேன்.

செட்டுக்கு வெளியே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது. ‘தலைவர் வாழ்க’ கோஷம் முழங்கியது. கதாநாயகன் வந்ததும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. ஆளூயர மாலைகள் போட்டார்கள். போட்டோ எடுத்தார்கள். நான் யாரென்று தெரியாத அவரை இந்த கூட்டத்தில்
எப்படி சந்திக்கப் போகிறேன் என்று கலங்கினேன். பசியை வெளிக் காட்டாமல் ரசிகர்களிடம் பேசினார். ஒரு வழியாக கை கூப்பி வணங்கி விடை பெற்றார்.

அவரது வெளிநாட்டுக் காரை நோக்கி அவரும் இயக்குனரும் நடந்தார்கள். நான் குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.

அவர்கள் பேசிய படியே இருந்ததால் தொந்தரவு செய்து விடக் கூடாது என்று அமைதியாய் பின் நடந்தேன். அதை நடை என்று
சொல்ல முடியாது நடைக்கும் ஓட்டத்திற்கும் இடைப்பட்ட ஒன்று.

அவர்கள் காரை நெருங்கி விட்டார்கள். என் முகம் தெரியும் படியாய் அவருக்கு முன்னே சென்று ‘சார்’என்றேன். கடிதத்தோடு நிற்கும் என்னைப் பார்த்து ஒன்றும் புரியாத முகபாவத்தோடு ‘ என்ன’ என்றார். ‘எஸ்டேட் அரவிந் சார் அனுப்புனாரு’ என்றபடி கடிதத்தை கொடுத்தேன்.

‘ம்.. போன் பண்ணிருந்தான்’ என்ற படி கடிதத்தைப் படித்தார். கடிதத்தைப் படித்து முடித்த உடன் ‘என்ன படிச்சிருக்கீங்க’ என்றார். ‘பீகாம்’ என்றேன். பெயரைக் கேட்டார். சொன்னேன். சிறிது
யோசனைக்குப் பின் இயக்குனரை பெயர் சொல்லி கூப்பிட்டார். இயக்குனர் பவ்வியமாய் ‘சார்’ என்றார். ‘இந்தப் பையனை உங்க அஸிஸ்டென்டா வச்சிக்கங்க’ என்றார். கிட்டத் தட்ட உத்தரவு போலத் தான் இருந்தது. ‘சரிங்க சார்’ என்று தலை வணங்கினார் இயக்குனர்.

என் பெயர் சொல்லி கூப்பிட்டார் கதாநாயகன். அடக்கமாய் பார்த்தேன்.’நல்லா ஓர்க் பன்ணுங்க. அடுத்தடுத்து சீக்கிரமா வளரனும். போய் சாப்பிடுங்க மதியானத்தில இருந்து ஓர்க் பண்ணுங்க. பெஸ்ட் ஆப் லக்’ என்று சொல்லி கை குலுக்கினார்.
காரில் ஏறி கிளம்பினார்.

நடந்ததை நம்ப முடியாமல் கார் போவதைப் பார்த்துக்
கொண்டிருந்தேன்.

ஒரு கடிதம். ஒரு வார்த்தை.ஒரு கணம். ஒருவனின் வாழ்வையே தலைகீழாக்கி விட்டது.

‘ டே’ என்று குரல் கேட்டது.

என்னை யார் இங்கு அப்படி கூப்பிடப் போகிறார்கள் என்று நினைத்த படி என் சந்தோசத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

‘ டே உன்னைத்தான்டா’ என்றது குரல் பின்னிருந்து. சந்தேகத்தோடு திரும்பினால் அழைத்து இயக்குனர். அதிர்ச்சியாய் இருந்தது.

‘உன் பேர் என்னடா’ என்றார்.

பதில் சொன்னேன்.

‘கிளாப் எப்பிடி அடிகிறதுன்னு பாத்துக்க நாளைல இருந்து நீ தான் அடிக்கணும் சீக்கிரம் சாப்பிட்டு வாடா’ சொல்லிவிட்டு போனார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சார்ன்னு கூப்பிட்டவர் அத்தனை சீக்கிரமாய் டே க்கு இறங்கி விட்டாரே என்று யோசித்தேன்.

இத்தனைக்கும் இயக்குனரும் இளையவர் தான். ஒரு வேளை உதவி இயக்குனர்களை இயக்குனர்கள் அப்படித் தான் கூப்பிட
வேண்டுமோ என்னமோ? கட்டாயம் அப்படியெல்லாம் இருக்காது. தன்னம்பிக்கை அற்ற சிலர் தன் அதிகாரத்தை நிறுவும் பொருட்டு செய்யும் அல்ப தந்திரம் அது என்பதை விளங்கிக் கொள்ள
அதிக நேரம் ஆகவில்லை.

சினிமாவில் எனக்கான முதல் பாடமாய் இதிலிருந்து துவங்கலாம் என்று தோன்றியது. சில பாடங்கள் பின்பற்றுவதற்காக சில பாடங்கள் பின் பற்றாமல் இருக்க என்பதை நினைத்த படி செட்டுக்குள் நுழைந்தேன்.

முன்னறிய முடியாதவை…

zzthecommunicators202055

பட படவென்று கதவு தட்டப் பட்டது, அதிர்ந்து விழித்தேன். இருள் இன்னும் முழுமையாக வெளுத்திருக்கவில்லை. இரவு முழுதும் தூக்கம் வராமல் போராடி இப்போது தான் கண் மூடினேன். கண் எரிந்தது. எழ முயற்சிப்பதற்கு முன் இன்னொரு முறை கதவு தட்டப் பட்டது. தட்டிய கைகளுக்குள்அவசரமான செய்தி ஏதோ இருப்பதை துரித கதியிலான தட்டுதல் உணர்த்தியது.

இத்தனை சப்தத்திலும் ப்ரியா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிலா லேசாக நெளிந்தாள். மெதுவாக தொட்டிலை ஆட்டி விட்டு விரைவாய் கதவைத் திறந்தேன். மருது சாரும், காளியம்மா அக்காவும் நின்றிருந்தார்கள். அவர்கள் நாங்கள் இதற்கு முன் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்கள். நான்கு வீடு தள்ளி அவர்கள் வீடு இருக்கிறது.

இந்த அதிகாலையில் என்ன அவசரம் என்று விளங்காமல் அவர்களைப் பார்த்தேன். ஏதோ சொல்லத் தயங்கி நிற்பதைப் போல இருந்தது.

‘ என்ன சார், உள்ள வாங்க ?’ என்றதும்.

‘ஒன்னும் பதட்டப் படாதீங்க , காலைல ஊர்லருந்து போன் வந்தது . ப்ரியாவோட அப்பாவுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லயாம், குடும்பத்தோட உடனே வரச் சொன்னாங்க சீக்கிரம் கிளம்புங்க ‘

இதைச் சொல்வதற்குள் அவர் பட்ட சிரமும் அவரின் கலங்கிய கண்களும் எனக்கு சந்தேகமாய் இருந்தது.

‘ என்ன சார் ஆச்சு என்ன சொன்னாங்க ‘ கேட்டுக் கொண்டிருக்கும் போதே ப்ரியா எழுந்து வந்து விட்டாள். பேசியதெல்லாம் காதில் விழுந்திருக்கிறது.

‘அப்பாவுக்கு என்ன ஆச்சு ‘ என்றாள்.

‘ சீரியசா இருக்காராம் உடனே வரச் சொன்னாங்க’ சொல்லச் சொல்லவே குரல் உடைந்து போனது மருது சாருக்கு.

‘எதையோ மறைக்கிறீங்க எதுவா இருந்தாலும் சொல்லிருங்க சார்’ என்று அழுது உடைந்து ப்ரியா கேட்டாள்.

‘ மனச தேத்திக்கோ ப்ரியா உங்க அப்பா இறந்து போயிட்டாரு.’ காளியம்மா அக்கா விசயத்தை உடைத்தார்கள்.

பெரும் வீறிடல் கிளம்பியது ப்ரியாவிடமிருந்து.

வாழ்வில் எப்போதும் ஏற்படாத அளவு குற்ற உணர்வு மலையென அழுத்தத் துவங்கியது என் மனதில்.

ப்ரியாவை அவளது அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்ட போது கூட கொஞ்சமும் குற்ற உணர்வு வந்ததில்லை.

ப்ரியாவை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.

என் மனிதத்தனம் முழுதும் உருகிக் கரைந்து ப்ரியாவின் முன்னால் ஒரு மிருக உருக்கொண்டு நிற்பதாய் தோன்றியது.

ப்ரியாவுக்கு மட்டுமல்ல நிலாவின் வாழ்விலும் உறுத்தலாகவே இருக்கப் போகிறது இந்த மறைவு.

நாளைய நம்பிக்கையில் நேற்றைக்குச் செய்த பெரும் பிழை மனதை அறுத்தது.

சரி செய்ய முடியாத பெரும் பிழை தான் அது.

பேத்தி பிறந்து ஏழு மாதங்கள் ஆகியும் பார்க்க முடியாமல் போய்விட்டார்.

பார்க்க வந்த வரை பார்க்க விடாமல் திருப்பி அனுப்பி விட்டது என் கோபம்.

ஒரு ஞானியைத் தவிர எந்த மனிதனாக இருந்தாலும் செய்திருக்கக் கூடிய தவறு தான்.

வாழ்வில் அதை இனித் திருத்த முடியாது என்ற போது அது மிகப் பெரும் வலியாய் இதயத்தை அறுக்கத் துவங்கியது.

கோவையில் நண்பர் சபாபதியின் கல்யாணத்தில் தான் ப்ரியாவை முதன் முதலில் பார்த்தேன். ப்ரியாவின் அம்மாவும் சபாபதியும் ஒரே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறார்கள்.

நான் மாப்பிள்ளைத் தோழனாகவும், ப்ரியா மணப் பெண்ணின் தோழியாகவும் இருந்தாள்.கல்யாணம் முடிந்து வீடு திரும்பும் வரை ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு திரிந்தோம்.

அவளுக்கு நானொரு பட்டப் பெயர் சூட்ட , அவள் எனக்கொரு பெயர் வைக்க கலாட்டாவாக இருந்தது.

மறுநாள் வீடு திரும்பும் போது ப்ரியா முற்றிலும் மாறு பட்ட தோற்றத்துடன் நின்றாள்.

கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாய் முகத்தில் இருந்த சந்தோசமும் , சிரிப்பும் பெயருக்குக் கூட தென்படவில்லை.

சீக்கிரம் வரவில்லை என்று வீட்டில் திட்டுவார்கள். யாராவது வந்து விட்டு விட்டுத் திரும்ப வேண்டும் என்றாள்.

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது வீட்டைப் பற்றிய அவளது பயம்.

காளிதாசன் அண்ணன் கொண்டு போய் விடக் கிளம்பினார்கள். நீயும் வருகிறாயா என்று என்னையும் கூப்பிட உடனே ஒப்புக் கொண்டேன். அவளின் வீட்டையும் , வீட்டினரையும் பார்க்க கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை.

மாலை ஏழு மணி இருக்கும் ஒண்டிப் புதூரில் இருக்கும் ப்ரியாவின் வீட்டிற்குப் போய் சேரும் போது.

அவளின் அம்மாவை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

ப்ரியாவின் அப்பாவும் என் எதிர்கால மாமனாராகிய ஆறுமுகம் அவர்களைச் சந்தித்த முதல் சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.

கட்டையாய் கறுத்த உருவம். மீசை இல்லை. கச்சிதமாய் உடம்பு இருந்ததால் வயசு தெரியாமல் சின்னப் பையன் மாதிரி இருந்தார். வெள்ளை வேட்டி, வெற்றுடம்பில் ஒரு துண்டு.

அவர் வாங்க என்று சொல்லும் போதே எனக்கு போதையே வரும் படியான மதுவாசம் அடித்தது.

அவரது கை குலுக்கும் போது இரும்பு போன்ற பலம் ஆச்சரியமாக இருந்தது.

பேசியதையே மீண்டும் மீண்டும் பேசிய படியே ஒரு மணி நேரம் விடவில்லை.

ஒரு மணி நேரத்திற்குள் ஒரு பாக்கெட் சிச்சருக்கு மேல் காலியாகி இருக்கும்.

கட்டிலில் அமர்ந்த படி ஊதித் தள்ளி வீடே புகை மண்டலமாக இருந்தது.

நான் சினிமாவில் இருப்பதாய் அறிமுகம் ஆனதும் சில பிரபலங்களின் பெயரைச் சொல்லி எனக்கு நண்பர்கள் தான் என்றார்.

வெளியே வந்தும் ரெம்ப நேரத்திற்குப் பிறகும் அவரின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது காதில்.

ரொம்ப காலத்திற்கு முன் மில் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். விருப்ப ஓய்வு பெற்று, அதில் வந்த பணத்தையெல்லாம் யாரையோ நம்பி கடனாய் கொடுத்து தொலைத்து விட்டார்.

ப்ரியாவின் அம்மாவின் அரசாங்க சம்பளத்தில் குடும்பம் ஓடுகிறது.

அவரே பெருமையாய் பேசும் போது சொன்ன படி 33 ஆண்டுகளாக குடிப்பவர்.

ஒரு நாளைக்கு ரூ 100க்கு (95ம் ஆண்டுக்கான விலையில்) குடித்தாகனும்.

வீட்டில் கேட்கும் போது கறி, கோழி, முட்டை கிடைத்தாக வேண்டும் இல்லை என்றால் என்னவாகும் என்பதற்கு வீட்டில் இன்சிலேசன் டேப் வைத்து ஓட்டப் பட்டிருக்கும் சுவிட்ச் போர்டுகள், ஒடுங்கிக் கிடக்கும் பீரோ போன்றவை உதாரணங்கள்.

இவை அத்தனையும் விட கோவிலில் சிலைக்கு பவ்வியமாய் பூசை செய்யும் பூசாரியைப் போல் ப்ரியாவின் அம்மா தன் கணவனின் எல்லாத் தேவைகளையும் முக்கல் முனகல் ஏதும் இல்லாமல் செய்து கொடுப்பது தான் ஆச்சரியம். அவர்களின் திருமணம் காதல் திருமணமாம். அந்தக் காதல் தானோ என்னவோ?

இதெல்லாம் தெரிந்த பிறகு தான் ப்ரியாவின் மீது காதல் பெருகி வளர்ந்தது.

நான் சென்னையில் இருந்த படியும் அவள் கோவையில் இருந்த படியும் கடிதத்தில் காதலித்துக் கொண்டிருந்தோம்.

இடையில் கோவை வரும் போது சில முறை அவள் வீட்டிற்குப் போய் அவளின் அப்பாவின் போதை புராணத்தை மணிக் கணக்கில் கேட்டுத் திரும்புவேன்.

ஒருமுறை பல மணி நேரம் என்னைப் போகக் கூடாது என்று கிளம்ப விடவே இல்லை. இரவு நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது.என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்த போது ப்ரியாவின் அம்மா அவர் பார்க்காத போது காகிதத்தில் எழுதப் பட்ட குறிப்பு ஒன்றை கையில் திணித்தார்கள். அதில் ‘ அப்பா என்று சொல்லவும் விட்டு விடுவார் ‘ என்று எழுதி இருந்தது.

பசங்க யாரவது வீட்டிற்கு வந்தால் இது தொடர்ந்து நடக்கிற விசயம் போல என்று நினைத்துக் கொண்டேன்.

பாவம் எங்களின் காதலைப் பற்றி தெரியாமல் பிதற்றி இருக்கிறார் ப்ரியாவின் அம்மா என்று மனதில் நினைத்த படி கூடுதலாய் ஒரு மணி நேரத்தை செலவழித்து கடைசி பேருந்தையும் விட்டு விட்டு நடந்து திரும்பினேன்.

எங்கள் வீட்டில் என் காதல் அங்கீகரிக்கப் பட்டது. ஆனால் வயது கடந்து கொண்டிருப்பதால் உடனே திருமணம் நடத்த வேண்டும் என்று துடித்தார்கள்.

இதற்குள் ப்ரியாவின் வீட்டில் விசயம் தெரிந்து தண்டிக்கப் பட்டாள். வேறு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியும் ஆரம்பமானது.

ஆனது ஆகட்டும் என்று என் அப்பா, அம்மா, மாமா, தம்பி அனைவரும் ஒரு வாடகை காரை அமர்த்தி ப்ரியாவின் வீட்டிற்குப் போய் பெண் கேட்டார்கள்.

அவளின் அப்பா ‘பெண்ணைப் படிக்க வைக்கணும் , உங்களுக்கு கொடுக்க முடியாது, அதை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா நீங்க தான் காரணம்னு எழுதி வைச்சுட்டு குடும்பத்தோட தற்கொலை செஞ்சுக்குவோம்,’ என்று சொல்லி அனுப்பி விட்டார்.

இது நடந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பின் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுத சிதம்பரம் வந்த போது , தேர்வுகளை எழுதி முடித்து விட்டு என் வீட்டிற்கு ப்ரியாவை அழைத்து வந்து விட்டேன்.

எனது உறவினர்கள் நண்பர்கள் புடை சூழ திருமணம் நடந்து முடிந்தது. இதற்கிடையில் சொன்ன படி குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்வார்களோ என்று பயந்த படி இருந்தாள் ப்ரியா.

அவள் எதிர்பார்த்த படி ஒன்றும் நடக்கவில்லை ஆனால் எதிர்பாராத விதமாக திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் சமாதானத்திற்கு வந்தார்கள் அவளின் அப்பாவும், அம்மாவும்.

கோவையில் ஒரு வரவேற்பு விழா நடத்தினார்கள்அவர்களின் உறவினர்கள் முன்னிலையில்.

அன்றைக்கு இரவே சென்னைக்கு கிளம்பினோம் நானும் , ப்ரியாவும் எனது பெற்றோரும் .

கிளம்புவதற்கு சற்று முன் என்னை தனியே அழைத்து என் மாமனார் ‘ அவளை நல்லா அடக்கி வையுங்க, நான் என் பொண்டாட்டியை வச்சிருக்க மாதிரி. ஏய்னு சத்தம் போட்டா ஒன்னுக்கு போயிரு வா’ என்று எந்த மாமனாரும் இது வரை உலகில் வழங்கி இராத அறிவுரை வழங்கினார்.

அம்மாவும் , அப்பாவும் சென்னை வந்து நான் பார்த்து வைத்த வீட்டிற்கு முன் பணம் கொடுத்தார்கள்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை சரவணா ஸ்டோரில் வாங்கிக் கொடுத்து விட்டு,இரண்டு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களுக்கும் வாங்கி வைத்தார்கள்.

கையில் 2500 பணம் கொடுத்து விட்டு மகனே இனி உன் சமத்து என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்கள்.

இந்த நாளுக்கு இடைப் பட்ட மூன்றரை ஆண்டுகளில் சில முறை தான் ஊருக்குப் போய் இருக்கிறோம்.

மருமகனாக ப்ரியாவீட்டிற்கு போயிருந்த போது கூட அதே போல் குடித்து வீட்டு சொன்னதையே சொல்லி உயிரை எடுத்துக் கொண்டிருந்தார்.

காதலின் போது கட்டாயமாக தாங்கிக் கொள்ள நேர்ந்தது.

திருமணத்தின் பின் இரண்டாம் முறை போயிருந்த போது பகலில் குடித்து விட்டு உளற ஆரம்பித்தார் பொறுக்க மாட்டாமல் உடை மாற்றிக் கொண்டு பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

மாமனார் இரண்டு முறை சென்னை வந்திருக்கிறார்.

ப்ரியாவின் தங்கை வேதாவிற்கு பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை விட்டிருந்த போது அவளை அழைத்துக் கொண்டு முதன் முறை வந்திருந்தார்.

ரயிலில் வந்து இறங்கி வீட்டிற்கு வந்த போது இரவு 10 மணியாகி விட்டது. சாப்பிட டிபன் கொடுத்த போது கறி பக்கத்துல எங்கயாவது கடையில் கிடைக்குமா என்றார். நானும் ப்ரியாவும் அதை எதிர் பார்க்கவில்லை.

நாளைக்கு எடுத்து சமைச்சுக்கலாம் என்று ஒருவழியாய் சமாதானப் படுத்தி விட்டோம்.

மறுநாள் போரடிக்கிறது என்றார். பொண்ணு வீட்டிற்கு வந்திருக்கும் காரணத்தை வைத்தாவது தண்ணியடிக்காமல் இருப்பார் என்று நினைத்தேன். மாலையில் அவரால் முடியவில்லை.

தண்ணியடிக்க வேண்டும் கடை எங்கே இருக்கிறது கூப்பிடுப் போக வேண்டும் என்றார். எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க முடியவில்லை.

கடையை மட்டும் காட்டுங்கள். வரும் போது நானே வந்து விடுகிறேன் என்றார் . ஒப்புக் கொண்டேன்.

வீட்டிலிருந்து பக்கத்தில் தான் கடை. போகும் போதே வழியெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டார்.தெருப் பெயர், வீட்டு எண்ணை சொல்லச் சொல்லி மனப் பாடம் செய்து கொண்டார்.

கடையைப் பார்த்ததும் பக்தனுக்கு கோவிலைக் கண்டதும் வரும் பக்தி மாதிரி முகம் மலர்ந்து உள்ளே சென்றார்.

சரியாக வந்து விடுவேன் நீங்கள் கிளம்பலாம் என்று அவர் சொல்லி இருந்தாலும் எனக்கு மனசு கேட்கவில்லை. கூடவே இவர் சரியாக வீட்டிற்கு வருகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.

அவருக்குத் தெரியாமல் காத்திருந்து பின் தொடர முடிவு செய்தேன்.

அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்தார். பக்கத்துக் கடையில் சிகரெட் வாங்கினார்.

நடக்கத் துவங்கினார். சரியான திசை தான்.

அவர் திரும்பினாலும் உடனே தெரியாத அளவு இடைவெளியில் பின் தொடர்ந்தேன்.

அவரின் நடையில் தள்ளாட்டம் இல்லை. எத்தனை வருட சர்வீஸ். மகள் வீடு என்பதால் குறைவாகக் கூட குடித்திருக்கலாம்.

சரியான பாதை வழியாகவே போனார்.

இன்னும் ஒரு தெரு தான் இருந்தது. அதைத் தாண்டினால் எங்கள் தெரு.

நான் அவரைக் கவனித்த படியே நடந்தேன்.

சடாரென எங்கள் தெருவுக்கு முந்தைய தெருவில் திரும்பி நடக்கத் துவங்கினார்.

நான் நடையை விரைவு படுத்தினேன். அவர் என்ன தான் செய்கிறார் என்பதைப் பார்க்கிற ஆவலும் இருந்தது.

இடது பக்கம் ஒரு வீட்டிற்குள் நுழைய காலடி எடுத்து வைத்தார். விரைந்து போய் அவர் கைகளைப் போய் பிடித்துக் கொண்டேன். அதிர்ந்து பர்த்தார். நம்ம வீடு அடுத்த தெருவில் என்றேன்.

எங்கள் வீட்டின் எண் தான் அவர் நுழைந்த வீட்டிற்கும்.

நல்ல வேளை பின்னாலேயே வந்தீங்க என்று சொல்லி குழந்தை மாதிரி சிரித்தார். ப்ரியாவிடம் இதைச் சொல்லி விடாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்.

அதன் பின் ஓரிரு நாளில் கிளம்பிவிட்டார். அவரின் சுதந்திரமும், அதிகாரமும் கொடிகடிப் பறக்கும் அவரின் வீட்டிற்கு அவசர அவசரமாய் கிளம்பிவிட்டார்.

அதன் பிறகு ப்ரியாவின் வளை காப்பிற்கு முந்தைய நாள் சென்னைக்கு மீண்டும் வந்தார்.

அவளின் அப்பா, அம்மா, தங்கைகள், எனது அப்பா, அம்மா எல்லோரும் வந்திருந்தார்கள்.

மூன்று ஆண்டுகள் எனது அப்பா, அம்மா தொடர்ந்த நச்சரிப்பை இனியும் தாங்க முடியாது என்ற ஒரு கட்டத்தில் குழந்தைக்கு ஒப்புக் கொண்டோம்.

வளைகாப்பை சென்னையிலேயே நடத்த வேண்டுமென்று நானும், ப்ரியாவும், விருப்பப் பட்டோம்.

கல்யாணம் பொள்ளாச்சியில், வரவேற்பு கோவையில், சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பாக இதைக் கருதினோம்.

ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும் ஒப்புக் கொள்ளவில்லை. அதை பொறுமையாய் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. நாங்கள் கிளம்புகிறோம் என்று பேக்கைத் தூக்கிவிட்டார்கள். அதோடு ஏதோ எசகு பிசகாக வார்த்தை ப்ரியாவின் அம்மாவோ அப்பாவோ சொல்ல எனக்கு வந்த கோபத்தில் ஏதோ பேச அது பெரும் சண்டையாக முடிந்தது.

அனைவரும் மதிக்கும் படியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் பெயரை கெடுக்கும் படியாக நடந்து கொண்டது என்னை ஆத்திரமுற்றவனாக்கி இருந்தது.

கொஞ்ச நேரத்திற்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை. ஆளுக்காள் கத்தி, திட்டி பெரும் புயல் அடிப்பது போலிருந்தது.

எதையும் யோசிக்காமல் ப்ரியாவின் அப்பா கிளம்ப அம்மாவும், ப்ரியாவின் இரு தங்கைகளும் கிளம்பி விட்டார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து என் அப்பா, அம்மாவே சென்னயில் வளைகாப்பை நடத்தி விட்டு ப்ரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினார்கள்.

பின் வீட்டைக் காலி செய்து விட்டு நானும் கோவைக்குப் போய்ச் சேர்ந்தேன்.

குப்புசாமி மருத்துவமனையில் அவ்வப் போது செக்கப்புக்கு போய் வருவோம்.

அப்படி ஒருநாள் போய்விட்டு வரும் போது ப்ரியாவின் அம்மா வந்துவிட்டுப் போனதாக என் அம்மா சொன்னார்கள்.

அவர்கள் ஏன் வந்தார்கள் வந்தால் பார்க்க முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

ஒரு வழியாய் நிலா பிறந்தாள்.

நிலா பிறந்து ஒரு 10 நாள் இருக்கும் ஒரு நாள் மாலை ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும், தங்கைகளும் எங்கள் வீடு நோக்கி வந்து கொண்டிருப்பதை தூரத்திலேயே பார்த்து விட்டேன்.

ப்ரியாவிடம் சொன்னேன் வரட்டும் நல்லா கேட்கிறேன் என்றாள். நீ பேசுனா தப்பாயிடும் உள்ள போஎன்ன நடந்தாலும் வெளிய வராதே என்று சொல்லிவிட்டேன்.

வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் போதே திண்ணையில் நின்றிருந்தேன்.

கோபம் எனக்கு பொங்கிப் பொங்கி வந்தது. வாயும் வயிறுமாய் இருந்தவளை ஒருநாள் கூட பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளாமல், வலியில் துடித்து கதறும் போது ஆறுதல் சொல்லாமல் தனது பொறுப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து விட்டு, ஊரில் வந்து கேவலப் படுத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் என்ன தைரியமாக வருகிறார்கள்.

‘எங்க வந்தீங்க’ வர வரவே வார்த்தையால் நிறுத்தினேன்.

‘ எங்க பொண்ணப் பாக்கிறதுக்கு ‘ பதிலாய் சொன்னார்.

‘ இது வரைக்கும் பாத்ததெல்லாம் போதும், நாங்க பாத்துக்கிறோம், கிளம்புங்க ‘ என்றேன்.

அவருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

‘ அப்ப இனி எல்லாம் அவ்வளவு தானா ? எல்லாம் முடிஞ்சிருச்சா? ‘ என்றார் வேகமாக.

‘அப்படித் தான் ‘ என்றேன் முடிவாக.

கோபம் பெருகிய முகத்தோடு முறைத்து விட்டுத் திரும்பினார்.

அது தான் எனக்கும் அவருக்குமான கடைசிச் சந்திப்பு என்பது தெரியவில்லை அப்போது.

ஒருவேளை தெரிந்திருந்தால் அந்த நிகழ்வு அப்படி இருந்திருக்காது என்பது உறுதி.

எப்படி அவரின் இறந்த உடலைக் காண்பது என்று தெரியவில்லை. ஒருவேளை பாவி என்று மாமியார் மண்ணெடுத்து வீசி வசை பாடினால் என்ன செய்வது என்று மனம் அடித்துக் கொண்டது பயண வழியெல்லாம்.

இரவு வரை எங்களுக்காக காத்திருந்தது சடங்குகள்.

ப்ரியா குழந்தையை காலடியில் போட்டு கதறினாள்.

ப்ரியா தனது தங்கையிடம் கொடுத்த நிலாவின் போட்டோவை அவர் பார்த்துவிட்டு எல்லோரிடமும் பேத்தி என்று காட்டிக் கொண்டிருந்தாராம்.

ஓரிரு நாட்களில் கிளம்பி சென்னை வந்து பேத்தியைப் பார்க்கவும் முடிவு செய்திருந்தாராம்.

வழக்கம் போல் இரவு தண்ணியடித்து விட்டுப் படுத்தவர். உறக்கத்திலேயே போயிருக்கிறது உயிர்.

அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு கணமும் மனம் கொந்தளித்து இருந்தது.

இறந்த பிறகு லேமினேட் செய்து மாட்டப் படிருந்த புகைப் படத்திலிருந்து சிரித்த படி அவர் பார்த்துக் கொண்டே இருந்தார்.

அவர்களின் வீட்டில் திருவாளர் ஆறுமுகம் அவர்கள் படமாய் இருக்கிறார். ஆனால் எனக்குள் உயிருள்ள வரை வைத்துப் போற்ற வேண்டிய பாடமாய்.

திருமண அறிமுகம்

may-3-2008-my-card-020

அன்று காலையில் இருந்தே மகிழ்வும் கவலையும் கலந்த உணர்வுப் பெருக்கில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.

என் அக்காள் பெண் நர்மதாவின் திருமணம் அன்று .

என் மகள் அன்புமதிக்கு எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது.

பந்தல் போட்ட வீடு. அலங்காரங்கள், வாழை மரம் , தென்னம் பாளை, எல்லாவற்றையும் வித்தியாசமாய் பார்த்த படி இருந்தாள்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருந்த தருணமாக இருந்தது அவளுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம்.

15 வயது குறைவு நர்மதாவை விட அன்புமதிக்கு.

ஆனாலும் எப்போதும் வாடி போடி என்று தான் கூப்பிடுவாள்.

நர்மதாவிற்கு அலங்காரம் நடக்கும் போது பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அலங்காரம் முடிந்து மண்டபத்திற்கு காரில் கிளம்பும் போது நர்மதாவுடம் காரில் ஏறிக் கொண்டாள்.

மண்டபத்தில் தாய் மாமன் நான் மாலையிட்டு கல்யாண மேடைக்கு அழைத்து வந்ததை சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை சுரேஷை ஏற்கனவே பல முறை பார்த்திருப்பதால் மேடை மீது ஏறி இருவரிடமும் விளையாடிக் கொண்டிருந்தாள்.

நேரமானதும் பெரியவர் ஒருவர் தாலியை எடுத்துக் கொடுக்க தாலி கட்டுதல் முடிந்தது.

கூட்டம் நிரம்பிய மண்டபத்தில் குழந்தைகள் கூட்டத்தில் விளையாட தோழமைகள் அதிகமிருந்ததால் ஒரே ஓட்டமும் விளையாட்டாக இருந்தாள் அன்புமதி.

எல்லாம் முடிந்து மணப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் வர அனைவரும் கிளம்பிய போது அன்புமதியை தேடி கூட்டிக் கொண்டோம்.

மாப்பிள்ளை வீட்டில் சடங்குகள் முடிந்து கிளம்ப வேண்டிய நேரம்
நெருங்கியது.

என் அக்கா சாந்தி மற்றும் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இனி முதல் இத்தனை காலம் தனது கண்களில் ஒன்றாக இருந்த நர்மதா அடுத்த வீட்டுப் பெண். இனி அவள் வீடு இது தான் என்று உணர்ந்து
கண்கள் கலங்கத் துவங்கியிருந்தனர்.

மாப்பிளை வீடு நான்கைந்து தெருக்கள் தள்ளித் தான் இருக்கிறது என்றாலும் அது நீண்ட தொலைவு தான் இனிமேல்.

இனி மாப்பிள்ளை வீட்டின் விதிகள் தான் நர்மதாவைக் கட்டுப்படுத்தும்.

விட்டுப் பிரிய மனமில்லாமல் பேசிக் கொண்டிருந்தவர்களை அனுபவப் பட்ட முதிர்ந்த ஒரு குரல் ’ கிளம்புங்கப்பா அங்க வேலை கிடக்குதில்ல ’ என்று கிளப்பிவிட்டது.

பெண் வீட்டினர் அனைவரும் கிளம்பத் தயாரானோம்.

அக்கா சாந்திக்கும், மணப் பென்ணின் தங்கை நிவேதாவுக்கும் கண்கள் ஊற்றெடுத்துக் கொண்டன எனக்கும் கூட கண்கள் கலங்குவதை கட்டுப் படுத்த முடியவில்லை.

உமா பக்கத்து அறையில் விளையாடிக் கொண்டிருந்த அன்புமதியை அழைத்து வந்தாள்.

நர்மதாவின் கண்களிலும் கண்ணீர் நிரம்பி வழியக் காத்திருந்தது.

ஒவ்வொருவராய் நர்மதாவிடமும் மாப்பிள்ளையிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினோம்.

அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் கடைசியாய் கிளம்பிக் கொண்டிருந்தோம்.

அன்புமதி நர்மதாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாங்கள் வாசலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தோம். அன்புமதி திடிரென பிடித்திருந்த என் கைகளை விலக்கி விட்டு நர்மதாவை நோக்கி ஓடினாள்.

என்ன ஏதுவென்று தெரியாமல் திரும்பிப் பார்ப்பதற்குள் அன்புமதி ஓடிப் போய் நர்மதாவின் கைகளைப் பிடித்து,

‘ எல்லாரும் போறாங்கடி, வாடி நர்மதா , நீ மட்டும் ஏன் இங்க இருக்க வாடி வாடி விட்டுட்டு போயிறப் போறாங்க’

என்று மறுபடி மறு படி சொல்லிய படி நர்மதாவை இழுக்க ஆரம்பித்தாள்.

அனைவரும் ஒரு கணம் அதிர்ந்து போனோம்.

சில அழுத மனங்கள் விம்மலை வெளிப் படுத்தின, சிலருக்கு சிறுமியின் அறியாமை இதழ்களில் சிரிப்பைச் சிந்தியது.

ஓடிச் சென்று அன்புமதியைத் தூக்கிக் கொண்டேன்.

‘ நர்மதாவுக்கு இங்க வேலை இருக்கு அதை முடிச்சிட்டு அப்புறமா வரும் , என்று சொன்னேன் அன்புமதியிடம்.

நம்பாமல் ‘ அப்புறம் வருவியாடி’ என்று நர்மதாவை அன்பு கேட்க
நர்மதா அழுத விழிகளோடு ஆமென தலையாட்டினாள்.

அன்புமதியை தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

வாசல் வரை நர்மதாவை திரும்பிப் பார்த்த படி வந்தாள் மதி.

போகும் போதோ, போய் சேர்ந்த பிறகோ பொங்கிப் பெருகும் அன்புமதியின் கேள்விகளுக்கு வழக்கம் போல் உண்மையான பதில்களால் திருமணத்தை அறிமுகம் செய்து வைப்பதாய் உறுதி கொண்டேன்.

டாம் அன்ட் ஜெர்ரிகள்

tom_and_jery11

அன்புமதிக்கு டாம் அன்ட் ஜெர்ரி என்றால் அவ்வளவு பிடிக்கும்.

வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் டிவிடியில் இருக்கும் டாம் அன்ட் ஜெர்ரி படங்களைப் பார்ப்பது தான் வேலை..

6 வயது சிறுமிக்கு இயல்பான பொழுது போக்கு தான் என்றாலும் அவ்வப் போது எனக்கு உறுத்தலாக இருக்கும்.

ஓரே வீட்டில் யாரோ போல நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது இப்போதெல்லாம்.

நாங்கள் என்பது நான், மனைவி உமா , மகள் அன்புமதி.

நகர வாழ்வின் கைகளில் சோழி முத்துகள் போல உருட்டி எறியப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நொடிகள் தோறும் என்று உணர்கிற தருணங்கள் வாழ்வின் அபத்தங்களை வலிக்கச் சொல்கின்றன.

தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உலுக்கி எழுப்பி…

அவசர குளியல், அவசர உணவோடு அவசரமாய் உடை மாற்றி பள்ளிக்கு அனுப்புகிறோம்.

அடுத்து அவசரமாக நாம் குளித்து உண்டு உடை மாற்றி அலுவலகங்கள் எனும் தீரா பசியுடைய கட்டிட வாய்களின் உணவாக ஓடுகிறோம்.

மாலைப் பொழுதில் சக்கைகளாய் களைத்து திரும்பும் நாமும் குழந்தைகளும் ..

கடலில் அள்ளிய உள்ளங்கை நீரென வடிந்து கொண்டிருக்கும் தினசரி நாட்களின் எஞ்சிய உயிருள்ள பொழுதுகளை தொலைக் காட்சிகள், கணிணிகள், வீட்டு வேலைகள் என்று முகம் தெரியாத தாக உதடுகள் ஈரம் துளியுமின்றி உறிஞ்சிக் கொள்கின்றன…

மூவரும் ஒன்றாய் வீட்டில் இருக்கும் பொழுதுகள் மிகக் குறைந்ததாய் இருக்கின்றது.

என்றாவது ஆபூர்வமாய் ஒன்றாய் இருக்கும் நேரங்களையும் ஆளுக்கொரு வேலையில் கழித்து விடுகிறமென்ற உறுத்தல் விழித்திருக்கிறது எப்போதும்.

அப்படி மூவரும் இணைந்திருந்த ஒரு நாள் அது…

கணிணியில் முன் அமர்ந்திருந்தேன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் உமா.

அன்புமதி டாம் அன்ட் ஜெர்ரி பார்க்கத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

குழந்தையுடன் நேரம் செலவழிப்பதில்லை என்று முந்தைய நாளில் தான் பேசி வருந்திக் கொண்டிருந்தோம்.

டாம் அன்ட் ஜெர்ரி பார்ப்பதில் இருந்து கவனம் திருப்பி அருகில் அழைத்துக் கொள்ளத் தோன்றியது.

அன்பு என்று கூப்பிட்டேன்.

அடுத்த அறையில் இருந்தே என்னப்பா என்றாள்.

இங்க வாப்பா என்றதும் தனது முக்கிய வேலையின் போது அழைக்கப்படுவது குறித்த அலுப்போடு வந்தாள்.

என்ன பண்ணுற என்று தெரியாதது போல் கேட்டேன்.

டாம் அனட் ஜெர்ரி பார்க்கப் போறேன் என்றாள்.

விளையாட்டாய் பேசி எங்களுடன் இருக்க வைக்க வேண்டுமென்று தோன்றியது என்ன சொல்லமென்று யோசிக்கையில் மின்னலென ஒரு எண்ணம் தோன்றியது.

எல்லாக் குடும்பங்களும் போல எப்போதும் எதாவது வாக்குவாதம், சண்டை நடந்து கொண்டிருக்கும் எனக்கும், உமாவுக்கும்.

குழந்தைகள் முன்னால் சண்டையோ வாக்குவாதமோ வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அது ஒவ்வொரு முறையும் மறந்து போவதும் அதன் பிறகு அடுத்த சண்டைக்கு முந்தைய நிமிடம் வரை நினைவில் இருப்பது என்ன மாயமோ?

ஒரு சில நிகழ்வுகளில் அன்புமதி நாட்டாமையாக மாறி சாமாதானப் படுத்தி தீர்ப்பளித்ததும் உண்டு.

இதெல்லாம் கண நேரத்தில் துண்டுக் காட்சியாக ஓடித் தீர்ந்தது.

அன்புமதியை டாம் அன்ட் ஜெர்ரி பார்ப்பதிலிருந்து சமாதானப் படுத்தி அழைத்து வரும் வார்த்தை நாவின் நுனிக்கு வந்து சேர்ந்தது.

‘ நாங்க தான் நிஜ டாம் அன்ட் ஜெர்ரி இங்க இருக்கோம்ல எங்களைப் பார்த்தா போதாதா பாப்பா’

சாமர்த்தியமாய் பேசிய திருப்தியை அனுபவிக்கும் முன் ஒரு வினாடி கூட யோசிக்காமல் அன்புமதி சொன்ன பதில் குறி தவறாத ஒரு கத்தியைப் போல் சரியாய் பாய்ந்து இன்னும் வலித்துக் கொண்டு இருக்கிறது.

அப்படி மதி என்ன சொன்னாளென்றாள்…

‘ ஆனா இந்த டாம் அன்ட் ஜெர்ரில காமெடியே இல்லையேப்பா ‘

சின்ன வயதில் ரிட்டையர்ட் ஆனவன்

அப்பா ரிட்டையர்ட் ஆவதற்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்.

ஓய்வு பெறும் போது அலுவலகத்தில் நடக்கும் பிரிவு உபச்சார விழாவில் நான், தம்பி, அக்கா அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பப் பட்டார். ஓய்வு பெற்றாலும் பெற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்கு என்று ஆறுதல் கொள்ளவாக இருக்கும்.

மனைவிக்கு விடுமுறை எடுப்பதில் தான் பிரச்சனை. அந்தக் கம்பெனியில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது. எனவே விடுமுறை கேட்பதில் தயக்கம்.

எனக்கு அந்தப் பிரச்சனை கிடையாது. நான் திரைபட உதவி இயக்குனன். எங்கள் துறையில் வேலை இருந்தால் ராப் பகலாக, தொடர்ந்து இருக்கும். இல்லையேல் வருடக் கணக்கில் ஓய்வாய் இருக்கவும் நேரும். நான் அப்போது வருடக் கணக்கில் ஓய்வில் இருந்தேன். அதனால் நான் கிளம்புவதில் சிக்கல் இல்லை.

அதனால் என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தோம் மனைவியும், நானும்.

என் மகள் அன்புமதி ( அப்போது வயது 3 ) ‘ அப்பா ஊருக்கு போறோமா? தாத்தாவுக்கு என்னப்பா ‘ என்றாள்.

‘தாத்தா ரிட்டையர்ட் ஆகப் போறாங்க’ என்றேன்.

‘ அப்படின்னா ‘ என்றாள்.

விளக்கம் தெரியாமல் ஒரு வார்த்தையும் இருக்கக் கூடாது அன்புமதிக்கு.

‘ ஆபீஸ்ல வேலை செய்யிறாங்கல்ல , வயசாச்சுன்னா நல்லா வேலை செய்ய முடியாதில்ல, அதனால நீங்க வேலை செஞ்சது போதும் ரெஸ்ட் எடுத்துக்கங்க, இனிமே வேலைக்கு வர வேண்டான்னு சொல்லீருவாங்க அது தான் ரிட்டையர்ட்’ என்று என்னாலான விளக்கத்தைச் சொன்னேன்.

சொல்லி ஒரு நொடியில் அன்புமதி கேட்டாள் ‘ அப்பா நீங்க சின்ன வயசிலயே ரிட்டையர்ட் ஆகீட்டீங்களா?’

சிரிப்பு தாங்க முடியவில்லை. அதே நேரத்தில் சின்னதான ஒரு வலியும் எழுந்தது மின்னலென.

என் தொழில் பற்றி சரியாக விளங்க வைக்கத் தவறி விட்டதை உணர்ந்தேன்.

தனது சந்தேகத்தை எவ்வளவு அழகாக வெளிப் படுத்திவிட்டாள் அன்புமதி.

ஒரு உதவி இயக்குனரின் ஓய்வு என்பது மற்ற ஓய்வுகள் போலில்லை .அவன் படிகிற புத்தகங்கள், பார்க்கிற திரைப்படங்கள், யோசிகின்ற கதைகள், காட்சிகள், மற்றும் நண்பர்களிடம் ஈடுபடுகின்ற விவாதங்கள் எல்லாமும் முக்கியமான வேலைகள் தான். இவையெல்லாம் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற காரணிகள்.

ஆனால் சம்பாத்தியம் கிடைக்காத , அலுவலகம் கிளம்பிப் போகாத இவைகளை வேலையென்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

நல்ல கதைக்கான கரு கிடைத்த திருப்தியில் மாலை டீ சாப்பிடக் கிளம்பும் உதவி இயக்குனரை பக்கத்து விட்டுக்காரர் ‘ என்ன சார் நல்ல தூக்கமா ‘ என்று எதிர் கொள்வது ஒன்றும் புதிதில்லை.

எல்லாம் சொன்னேன் அன்புமதிக்கு.

இப்போது யாராவது கேட்டால் ‘ அப்பா கதை எழுதீட்டு இருக்கிறார்’ என்று சொல்கிறாள் அன்புமதி.

  • எனது கவிதை நூல்கள்

    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்