சிறந்த இந்திய குறும்படமாக ‘ நடந்த கதை’ தேர்வு

தீபிகா மற்றும் தமிழக செய்தி ஊடகத்துறையும் நடத்திய சர்வதேச குறும்படவிழா (ISFFI 2010 ) மார்ச் 20, 21ம் தேதிகளில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடந்து முடிந்தது.

இந்தப் போட்டியில் 29 நாடுகளைச் சேர்ந்த 420 குறும்படங்கள் கலந்து கொண்டன.

இறுதி போட்டிக்கு 70 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அனிமேசன் படங்கள், ஆவணப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

70 படங்களும் 20-21 தேதிகளில் காலை முதல் மாலை வரை திரையிடப்பட்டன.

பெரும்பாலும் காட்சி ஊடகத்துறை மாணவ, மாணவிகளால் நிறைந்திருந்தது ஆல்பர்ட் தியேட்டர்.

போட்டிகள் 2 பிரிவாக நடைபெற்றது. சர்வதேச அளவிலான படங்களுக்கான போட்டி மற்றும் இந்திய

அளவிலான குறும்படங்களுக்கான போட்டி என்று நடைபெற்றது.

ஸ்பெயின், ஆஸ்திரிலேயா, அமெரிக்கா, ஹங்கேரி, இங்கிலாந்து பிரஞ்ச், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா,
சுவிஸ்சர்லேண்ட், கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டன.

இந்திய அளவிலான போட்டிகளில் கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா,

குஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து குறும்படங்கள் கலந்து கொண்டன.

இந்திய அளவில் சிறந்த குறும்படமாக தமிழ் குறும்படமான ‘ நடந்த கதை’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருது
அளிக்கப் பெற்றது.

இது நடந்த கதை வெளியான 6 மாதங்களுக்குள் அது பெறும் 5 வது விருது ஆகும்.

’ நடந்த கதை ’ பொன்.சுதாவாகிய என்னால் திரைக்கதை,வசனம் எழுதி இயக்கப்பட்ட 21 நிமிட
குறும்படம்.

இதன் கதை அழகிய பெரியவன். அவர் எழுதிய ’குறடு’ சிறுகதையே ‘ நடந்த கதை’ யாக உரு மாற்றம்
ஆனது.

இப்படத்தை அருள் சங்கர் தயாரித்துள்ளார். நிறுவனம் நண்பர்கள் திரைகுழுமம்.

ஒளிப்பதிவாளர் இராசாமதி ( சக்கரைக்கட்டி, சித்து +12, பேசு, குறுநில மன்னர்கள்).

படத்தொகுப்பு ஏ.எல். ரமேஷ் ( நாடோடிகள்)

இசை மரியா மனோகர் ( நாயகன் மற்றும் ஈழம், நேதாஜி தொடர்)

கதை சொல்லியின் குரல்- கவிஞர். அறிவுமதி.

கதை நாயகன் கருணாகர்.

நடந்த கதையில் இடம் பெற்ற அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும், மற்றும் இதன் வெற்றிக்குத் துணை நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் இதயம் நெகிழ்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக் குறும்படத்தை காண விரும்புவர்கள் இதன் குறுந் தகடை வாங்கிப் பயன் பெறலாம்.

நடந்த கதையின் குறுந்தகடு சென்னையில் நியூ புக் லேண்ட்ஸ், டிஸ்கவரி பிக் பேலஸ் போன்றவற்றில் பெறலாம்.

கோவையில் விஜயா பதிப்பகத்தில் கிடைக்கும்.

தபாலில் பெற விரும்புபவர்கள் – 9444324316 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள ponsudhaa@gmail.com என்ற முகவரியைப் பயன்படுத்தவும்.

Advertisements

‘சிவப்பு பலூன்’ குறும் படம் – ஓர் அற்புத அனுபவம்

சிவப்பு பலூன் (The Red Balloon ) 34 நிமிடங்கள் ஓடக் கூடிய பிரஞ்ச் குறும்படம். 1956 ல் வெளியான படம். அந்த வருடத்தில் சிறந்த குறும்படத்திற்கான கேன்ஸ் அவார்ட் மற்றும் ஆஸ்கர் அவார்டையும் வென்றுள்ளது இப்படம்.

இதன் இயக்குநர் ஆல்பர்ட் லமொரீஸ் (Albert Lamorisse). லமொரீஸ் ஒளிப்பதிவாளராக இருந்து 40 வயதுக்குப் பின் குறும்படங்கள், ஆவணப்படங்களை இயக்கத் துவங்கி இருக்கிறார். ஒரு ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். சிகப்பு பலூனில் லமொரீஸின் மகனே முக்கிய கதாபாத்திராமாய் நடித்துள்ளான்.

வெளியாகி 54 வருடங்கள் கடந்த பின்பும் இன்று பார்க்கும் போதும் ஒரு புதிய உலகை திறந்து விடக் கூடிய பரவசமான, மகிழ்வான அனுபவமாய் இருக்கிறது சிவப்பு பலூன்.

அற்புதங்களுக்கும் மாயங்களுக்கும் மனித மனம் பன்னெடும் காலமாய் ஏங்கிக் கிடக்கிறது. அதன் காரணமாகத் தான் உலகெங்கும் மாயக் கதைகள் குவிந்து கிடக்கின்றன. பறக்கும் குதிரைகள், பேசும் மிருகங்கள், நினைத்ததை உடனே தரும் கற்பக மரம், பாற்கடல், இப்படி கதைகளில் மனிதன் உண்டாக்கிய கற்பனை சிருஷ்டிகள் ஏராளம்.

குழந்தைகளின் கற்பனைகள் எல்லையற்றது. எந்த எழுத்தாளனும் , கவிஞனும், கதை சொல்லியும் குழந்தைகளின் கற்பனைக்கு முன்னே தோற்றுப் போகவே நேரும். அவர்களோடு தான் பொம்மைகள் கூட பேசுகின்றன. அவர்களின் கதைகளை கேட்கின்றன, நட்பு கொள்கின்றன, உறவாடுகின்றன. வானமும், மலைகளும், நதிகளும், கடல்களும் கூட அவர்களுக்கு விளையாட்டுத் தோழர்களாகின்றன.

’சிவப்பு பலூன்’ ஒரு சிறுவனுக்கும் ஒரு சிவப்பு பலூனுக்குமான உறவைப் பற்றிய கதை.

4 அல்லது 5 வயது சிறுவன் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பெரிய சிகப்பு பலூன் விளக்குக் கம்பத்தில் கட்டி இருப்பதைப் பார்கிறான். விளக்குக் கம்பத்தில் ஏறி பலூனை எடுக்கிறான். பலூனை கைகளில் பிடித்த படி மகிழ்வோடு தெருக்களில் நடக்கிறான்.

பலூனை கைகளில் பிடித்த படியே பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறான். அவன் வழக்கமாய் பள்ளிக்குப் போகும் பேருந்து வருகின்றது. பேருந்தில் கூட்டமாய் இருக்கிறது. பலூனிடன் ஏற முயற்சிக்கும் சிறுவனை நடத்துநர் நிறுத்துகிறார். பலூனை விட்டு விட்டு ஏறச் சொல்கிறார். அவன் பலூனை இழக்க மனமில்லாமல் நிற்கிறான். பேருந்து கிளம்புகிறது. அவன் மனம் தளராமல் பலூனை கைகளில் பிடித்த படி பள்ளியை நோக்கி ஓடத் துவங்குகிறான்.

பள்ளிக்குள் சென்றதும் பலூனை என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. அங்கிருக்கும் வாயில் காப்போனிடம் மாலை வரை பத்திரமாய் வைத்திருங்கள் என்று ஒப்படைக்கிறான்.
மாலை பள்ளி முடியும் போது மழை பெய்கிறது. சிறுவன் பலூனை நனையாமல் எப்படி கொண்டு போவது என்று யோசிக்கிறான். குடையோடு போகும் ஒவ்வொருவரிடம் ஒண்டிக் கொண்டு பலூனை மட்டும் குடைக்குள் நனையாமல் வைத்து விட்டு சிறுவன் நனைக்கிறான். பல்வேறு குடைகளில் தஞ்சமடைந்த பின் வீடு சேர்கிறான்.

நிறைய வீடுகளை கொண்ட, நிறைய மாடிகளைக் கொண்ட கட்டிடம் அது. உயரத்தில் இருக்கும் அவனது வீட்டு சன்னலின் வழி அவனது தாயார் பலூனை தூக்கி எறிந்து சன்னலை சாத்துகிறாள்.
சிறிது நேரம் கழித்து சிறுவன் அறையின் சன்னலைத் திறக்கிறான் அங்கேயே காத்துக் கொண்டிருக்கிறது அவனது சிவப்பு பலூன். உயரத்தில் இருக்கும் பலூனை அவனால் பிடிக்க முடியவில்லை. கைகளை நீட்டுகிறான் பலூன் தானாய் இறங்கி அவனது கைகளுக்குள் வருகின்றது.

மறுநாள் காலை பள்ளி கிளம்பும் போது பலூனிடம் ஏதோ சொல்லி சன்னலில் வெளியே விடுகிறான் சிறுவன். அவன் பல மாடிகள் இறங்கி வந்து சேரும் போது அவனிடம் வருகிறது பலூன். அவன் போகும் வழியெல்லாம் அவனுடனேயே போகின்றது. வழியெல்லாம் பலூனுடன் விளையாடி படியே போகிறான். பலூனும் அவனுடன் விளையாடுகிறது.

பேருந்து நிறுத்தில் பலூனுடன் நிற்கிறான். பேருந்து வருகின்றது. அவன் பலூனை பறக்க விட்டு பேருந்தில் ஏறுகிறான். பலூன் பேருந்தை பின் தொடர்கிறது செல்கிறது.

பள்ளிக்குள் செல்லும் முன் அவன் பலூனை வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டுப் போகிறான். சிறிது நேரத்திற்குப் பிறகு பலூன் பள்ளியின் சுவரைக் கடந்து உள்ளே வருகின்றது. அதைப் பார்த்து பல சிறுவர்கள் பிடிக்க ஓடுகின்றனர் ஆனால் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் பலூன் தப்பிக்கின்றது. சிறுவனைத் தேடி அவனின் வகுப்பறைக்குள்ளேயே நுழைந்து விடுகின்றது. மாணவர்களும், ஆசிரியர்களும் அதைப் பிடிக்க முயற்சி செய்ய யாருக்கும் மாட்டாமல் தப்பிக்கின்றது சிவப்பு பலூன்.

பலூனுக்கும் அவனுக்குமான சிநேகம் சில பெரிய மாணவர்களின் கண்களை உறுத்துகின்றது. அவனிடமிருந்து பலூனைக் கைப்பற்ற முயற்சி செய்து ஒரு முறை துரத்துகிறார்கள். பலூனும் சிறுவனும் தப்பிக்கின்றார்கள்.

ஒரு முறை கடையில் ஏதோ பொருள் வாங்க நுழையும் சிறுவன் பலூனை வெளியே விட்டுச் செல்கிறான். காத்திருக்கும் பலூனை, முன்பு பிடிக்க முயற்சித்து தோற்றுப் போன சிறுவர்கள் மறைந்திருந்து கைப் பற்றுகிறார்கள்.

கடைக்குள்ளிருந்து திரும்பும் சிறுவன் பலூனை காணாமல் தேடுகிறான். பலூனைத் திருடியவர்கள் பலூனை ஒரு இடத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து உடைக்க முயற்சிக்கிறார்கள். சிறுவன் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறான். பலூனைக் காப்பாற்ற போராடுகிறான். ஒருவனின் கல் பட்டு பலூனில் இருந்து காற்று வெளியேறத் துவங்குகின்றது. பலூனை கீழே பிடித்து இழுத்து மிதித்து உடைக்கிறான் ஒருவன். பலூன் வெறும் ரப்பர் துண்டாய் கீழே விழுகின்றது. சிறுவனும் பலூனும் மட்டும் தனித்திருக்க அவைவரும் ஓடி விடுகின்றனர். சிறுவன் பலூனைப் பார்த்து கண் கலங்கத் துவங்குகிறான்.

மீதியை வெண்திரையில் அல்லது டிவீடியில் காண்க என்று சொல்லலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு கிட்டாதவர்களுக்காக முழுவதும் சொல்வது தானே நியாயம்.

பிறகு தான் நிகழ்கிறது அற்புதம். ஊரில் சில சிறுவர்கள் கையில் வைத்திருந்த பலூன்கள் எல்லாம் அவர்களின் கைகளை விட்டுத் தானாய் பறக்கத் துவங்குகின்றன. ஒரு பலூன் விற்பனையாளனின் கைகளிலிருந்த பலூன்கள் பறக்கத் துவங்குகின்றன. இப்படி ஊரில் உள்ள பலூன்கள் எல்லாம் ஒன்று கூடி அணி வகுப்பு நடத்துகின்றன. பல்வேறு இடங்களைக் கடந்து அத்தனை பலூன்களும் சிவப்பு பலூனை இழந்து அழும் சிறுவனின் முன்னால் இறங்குகின்றன. அத்தனை பலூன்களையும் ஆச்சரியத்தோடு பார்க்கிறான். அந்த பலூன்களைப் பிணைத்திருக்கும் கயிறுகளையும் ஒன்றாக்கிப் பிடிக்கிறான். அத்தனை பலூன்களும் அவனைத் தூக்கிக் கொண்டு ஃபேரசூட் மாதிரி வானில் பறக்கின்றன. அவன் மகிழ்வோடு பறந்து உயரே உயரே போகிறான்.

இடையில் ஒரு காட்சியில் சிறுவன் பலூனோடு நடக்கும் போது ஒரு சிறுமி நீல பலூனோடு கடந்து போகிறாள். உடனே சிவப்பு பலூன் சிறுவனிடமிருந்து நீல பலூனைப் பின் தொடர்ந்து செல்கிறது. சிறுவன் போய் பிடித்து வந்து நடக்கத் துவங்கும் போது நீல பலூன் சிறுமியை விட்டு சிறுவனோடு வருகின்றது. சிறுமி ஓடி வந்து நீல பலூனை பிடித்துப் போகிறாள்.

ஒவ்வொரு மனிதனின் ஆசைகளும் கனவுகளும் வெவ்வேறு நிறமான பலூன்களாய் அவனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அழகான கதையும். இயல்பான நம்பகத் தன்மையுடன் கூடிய படமாக்கலும், ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பாராத நிகழ்வுகளின் வியப்பும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாத புதுமையாய் அழியாத அற்புதமாய் என்றென்றும் ’சிவப்பு பலூனை’ வாழ வைக்கும்.

ஹைக்கூத் தோட்டம்- 58

பெரும் மழைநாள்
தனிமையில் குளிக்கிறது
மலை அருவி.

கொட்டிக்கிடக்குது குட்டிக் கதைகள்

கதைகளில் குட்டிக் கதைகள் அற்புதமானவை.

சாருநிவேதிதாவின் குட்டிக் கதைகளைச் சொல்லவில்லை.

சில வரிகளில் அற்புதமான கருத்துக்களையோ, சிந்தனையையோ, நகைச்சுவையோ கொடுத்து விடக் கூடியவை குட்டிக் கதைகள்.

ஈசாப் குட்டிக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் போன்றவைகள் தான் சிறுகதைகள், நாவலுக்கான மூலவிதைகள்.

ஜென் கதைகள், மற்றும் மத உபதேசங்களின் பொருட்டு உண்டான குட்டிக் கதைகள் ஏராளம்.

தமிழில் பாக்யராஜ் கேள்வி பதிலில் பல்வேறு குட்டிக் கதைகளைப் பயன்படுத்தி பிரபலப்படுத்தினார்.

உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் கதைகளும், நறுக்குகளும் தமிழ் இலக்கியத்திற்கான பெரும் கொடைகள்.

எஸ். ராமகிருஷ்ணன் கூட இந்த ஆண்டில் நகுலனின் வீட்டில் யாருமில்லை என்ற குறுங்கதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுக்க பெரும் இலக்கியவாதிகள் ஒரு சில குட்டிக் கதைகளையாவது எழுதியுள்ளார்கள்.

மின் மினி தேசம் என்ற சமீபத்தில் பூத்த வலைப்பூ ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.

குட்டிக் கதைகளுக்கு மட்டுமே ஆன ஒரு வலைப்பூ அது. கொட்டிக் கிடக்குது குட்டிக் கதைகள் அங்கே.

பெரும்பாலும் நகைச்சுவையும், அங்கதமுமான குட்டிக் கதைகளே நிறைந்திருக்கிறது.

குட்டிக் கதைகளுகான வலைப்பூவிற்கு மின்மினி தேசம் என்ற ரசனையான பெயர்.

குட்டிக் கதை ரசிகர்கள் தவறாமல் தினமும் எட்டிப் பார்க்க வேண்டிய வலைப்பூ அது.

படித்துப் பயன் பெறுக…

http://minminidesam.blogspot.com/

அழகிய பெரியவனுக்கு தமிழக அரசின் விருது….

அழகிய பெரியவன் தமிழின் முக்கியமான படைப்பாளி.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்ற அனைத்து இலக்கிய படைப்பாக்க வெளிகளிலும் தனது முத்திரையை பதித்து வருபவர்.

தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கக் கூடியவை இவரது படைப்பின் குரல்.

நவீன எழுத்து முறையும், வாழ்வியல் விட்டு விலக்காத கதை களமுமாக அற்புத கலவை இவரது எழுத்துகள்.

பேரணாம் பட்டைச் சேர்ந்தவர் அழகிய பெரியவன்.

ஒரு பள்ளி ஆசிரியராக எளிய வாழ்வு வாழும் எழுத்தாளர்.

எளிமையான மனிதர்.

சமரசமற்ற போராளி, எழுத்தோடு நில்லாமல் ஓடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களிலும் முன்னனியில் நிற்பவர் அழகிய பெரியவன்.

அவரது ‘ உனக்கும் எனக்குமான சொல் ‘ என்ற கவிதைத் தொகுப்பிற்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது.

சரியான நபருக்கு சரியான படைப்புக்கு விருது கிடைத்துள்ளது.

அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

’நடந்த கதை’ குறும்படம் புத்தக கண்காட்சியில் 256 & 257 விஜயா பதிப்பகத்தில் கிடைக்கும்.

பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது ‘ நடந்த கதை ‘ குறும்படம்.

அழகிய பெரியவனின் ‘ குறடு’ சிறுகதையை ’நடந்தகதை’ என்ற பெயரில் குறும்படமாக எடுத்துள்ளேன்.

ஒரு தலித்தின் வாழ்வைச் சொல்லுகிற கதை அது.

திரைகதை, வசனம், இயக்கம் – பொன்.சுதா ( மறைபொருள்)

கதை- அழகிய பெரியவன் ( நெறிக்கட்டு, தகப்பன் கொடி, தீட்டு, உனக்கும் எனக்குமான சொல்,
கிளியம்மாவின் இளம் சிவப்புக் காலை, அரூப நஞ்சு, …….)

ஒளிப்பதிவு – இராசாமதி ( கக்கரைக்கட்டி, சித்து +2, பேசு, குறுநில மன்னர்கள்)

படத் தொகுப்பு – ஏ.எல். ரமேஷ் ( நாடோடிகள்)

இசை – மரியா மனோகர் ( மக்கள் தொலைக்காட்சியில் ஈழம், நேதாஜி)

தயாரிப்பு – அருள் சங்கர் ( கலர்ஸ்)

வெளியான சில மாதங்களிலேயே பேரணாம்பட்டு, திருப்பத்தூர், வந்தவாசி, மதுரை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், போளூர், சென்னை, உடுமலைப்பேட்டை, சத்தியமங்கலம் என்று பல ஊர்களில் பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், கலை இலக்கியப் பெருமன்றம், பதியம், சுழி , உரத்த சிந்தனை, பூங்குயில் படைப்பாக்க வெளி போன்ற பல்வேறு அமைப்புகளால் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.

மக்கள் தொலைக்காட்சி, மற்றும் சன் செய்திகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனந்தவிகடன், சினிமா எக்ஸ்பிரஸ், தலித்முரசு, நிழல், உண்மை, போன்ற இதழ்களிலும், தெனாலி, சென்னை ஆன்லைன், கூடு போன்ற இணைய இதழ்களிலும் பல்வேறு வலைப்பூக்களிலும் பாராட்டப்பட்டிருக்கிறது.

போளூரில் நடைபெற்ற கிராமிய குறும்படவிழாவில் முதல் பரிசு பெற்றது. பெரியார் திரை நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ‘ நடந்த கதை’

சென்னை புத்தக கண்காட்சியில் கோவை விஜயா பதிப்பகத்தின் கடையான 256 & 257 ல் ’நடந்த கதை’ விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

குறும்படம் மற்றும் மாற்று திரைப்பட ஆர்வலர்கள் வாங்கிப் பயன்பெறுங்கள்.

பார்த்ததோடு மட்டுமல்லாமல் உங்களது கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=c145e2d5-7c63-4d90-a2b8-815ecebc8885&CAT

http://www.thenaali.com/thenaali.aspx?A=678

http://www.chennaidigest.in/epaper.aspx?date=8/14/2009&p=5

http://veeduthirumbal.blogspot.com/2009/11/3.html

http://guhankatturai.blogspot.com/

http://koodu.thamizhstudio.com/kurunthirai_1_nadandha_kadhai_yazh_231109.php

http://www.cinemaexpress.com/Images/pdf/2009-12-01/46.pdf

http://www.cinemaexpress.com/Images/pdf/2009-12-01/47.pdf

http://etiroli.blogspot.com/2009/12/blog-post_23.html

http://viduthalai.periyar.org.in/20091228/Page06.html

‘திற’ குறும்படம் திரையிடல் மற்றும் திறனாய்வு

எனது நண்பர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் மிகச் சிறந்த குறும்படமான ‘திற’ குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு 17.12.2009 | வியாழன் | மாலை 6.30 மணி ரஷ்ய கலாச்சார மய்யம் (ஹோட்டல் சோழா பின்புறம்), சென்னை-18 நடைபெற உள்ளது.

‘திற’ தமிழில் வந்த குறும்படங்களில் ஒரு சில சிறந்த படங்களில் முக்கியமானது . சதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதை ஒன்றை இன்றைய கால கட்டத்திற்கு தக்கவாறு தழுவி எடுக்கப்பட்ட படம்.

தரமான தொழில் நுட்பத்துடன் அமைந்துள்ளது. மிகவும் சவாலான கதையை திறம்பட கையாண்டுண்டிருந்தார் பிரின்சு என்னாரெசு பெரியார்.

குஜராத் கலவரத்தை காட்சிப்படுத்தி அந்த கலவரத்தின் ஒட்டு மொத்த வலியையும் உணர்த்தக் கூடிய ஒரு சம்பவமாக இருக்கிறது கதை.

பிரின்சு என்னாரெசு பெரியார் அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்தவர். கெளதம் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

சமூக சிந்தனையும், அசாத்திய துணிச்சலும் தான் இப்படத்திற்கான பின்னனியில் இருக்கிறது.

’திற’ குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நாளை நடக்கிறது. அனைவருக்கும் இக்குறும்படத்தை காணும் வாய்ப்பு.

அனைவரும் வருக.

 • எனது கவிதை நூல்கள்


  கவிதை அல்ல காதல்
  வெளியீடு: விஜயா பதிப்பகம்
  நானும் நீயும் நாமான போது
  வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
  வெளியீடு: விஜயா பதிப்பகம்