பெயர்க் காரணம்

824aa776135ed6068e3c56519034c870

“ எனக்கு ஏம்பா அன்புமதின்னு பேரு வைச்ச ” திடிரென ஒரு இருசக்கர வாகனத்தின் பயணத்தின் பாதியில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருந்த அன்புமதி கேட்டாள்.

நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி அர்த்தம் அறிந்து பிடித்துப் போய் வைத்ததினால் உடனடியாய் பதில் சொல்ல முடிந்தது.

‘ ஒரு மனுசனுக்கு அறிவு அதிகம் இருந்து அன்பு இல்லாமல் போனால் அவன் முழுமையானவன் இல்லை.

அதே போல ஒருத்தருக்கு அன்பு அதிகம் இருந்து அறிவே இல்லாமல் போனால் அதுவும் வீண் தான்.

அன்பும் அறிவும் ரெண்டும் இருந்தால் தான் அவங்க முழுமையான சிறந்த மனுசங்களா இருக்க முடியும். அதுனால தான் உனக்கு அன்பும், அறிவும் சேர்ந்த பெயராய் வைச்சிருக்கோம் ’ என்றேன்.

ரொம்ப கவனமாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஒரு விநாடி நேர இடைவெளிக்குள் 7 வயது அன்புமதி கேட்டாள் “ நான் அப்பிடி இருக்கேனாப்பா?”

சொன்னதை முழுமையாய் புரிந்து அதற்குள்ளிருந்து ஒரு அர்த்தமுள்ள மிகப் பெரிய கேள்வியை மிகச் சாதாரணமாய் கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திருந்தாள்.

எனக்குத் தான் வாயடைத்துப் போனது. மகிழ்விலும், அதிர்விலும்..

சாமாளித்துக் கொண்டு உடனே சொன்னேன் ‘ நீ அப்பிடித் தான் இருக்கே ’

அன்புமதியின் முகத்தில் பெயரைக் காப்பாற்றி விட்ட ஒரு நிறைவு.

என் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது எனக்குத் தெரியாது எனபதும். என்ன காரணத்தினால் என் அப்பா அம்மா வைத்தார்கள். என்பதை ஏன் இத்தனை வயது வரை அறிந்து கொள்ளத் தோன்றவில்லை என்ற கேள்வி எனக்குள் வளர்ந்து வீங்கிக் கொண்டிருந்தது.

திருமண அறிமுகம்

may-3-2008-my-card-020

அன்று காலையில் இருந்தே மகிழ்வும் கவலையும் கலந்த உணர்வுப் பெருக்கில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.

என் அக்காள் பெண் நர்மதாவின் திருமணம் அன்று .

என் மகள் அன்புமதிக்கு எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது.

பந்தல் போட்ட வீடு. அலங்காரங்கள், வாழை மரம் , தென்னம் பாளை, எல்லாவற்றையும் வித்தியாசமாய் பார்த்த படி இருந்தாள்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருந்த தருணமாக இருந்தது அவளுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம்.

15 வயது குறைவு நர்மதாவை விட அன்புமதிக்கு.

ஆனாலும் எப்போதும் வாடி போடி என்று தான் கூப்பிடுவாள்.

நர்மதாவிற்கு அலங்காரம் நடக்கும் போது பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அலங்காரம் முடிந்து மண்டபத்திற்கு காரில் கிளம்பும் போது நர்மதாவுடம் காரில் ஏறிக் கொண்டாள்.

மண்டபத்தில் தாய் மாமன் நான் மாலையிட்டு கல்யாண மேடைக்கு அழைத்து வந்ததை சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை சுரேஷை ஏற்கனவே பல முறை பார்த்திருப்பதால் மேடை மீது ஏறி இருவரிடமும் விளையாடிக் கொண்டிருந்தாள்.

நேரமானதும் பெரியவர் ஒருவர் தாலியை எடுத்துக் கொடுக்க தாலி கட்டுதல் முடிந்தது.

கூட்டம் நிரம்பிய மண்டபத்தில் குழந்தைகள் கூட்டத்தில் விளையாட தோழமைகள் அதிகமிருந்ததால் ஒரே ஓட்டமும் விளையாட்டாக இருந்தாள் அன்புமதி.

எல்லாம் முடிந்து மணப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் வர அனைவரும் கிளம்பிய போது அன்புமதியை தேடி கூட்டிக் கொண்டோம்.

மாப்பிள்ளை வீட்டில் சடங்குகள் முடிந்து கிளம்ப வேண்டிய நேரம்
நெருங்கியது.

என் அக்கா சாந்தி மற்றும் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இனி முதல் இத்தனை காலம் தனது கண்களில் ஒன்றாக இருந்த நர்மதா அடுத்த வீட்டுப் பெண். இனி அவள் வீடு இது தான் என்று உணர்ந்து
கண்கள் கலங்கத் துவங்கியிருந்தனர்.

மாப்பிளை வீடு நான்கைந்து தெருக்கள் தள்ளித் தான் இருக்கிறது என்றாலும் அது நீண்ட தொலைவு தான் இனிமேல்.

இனி மாப்பிள்ளை வீட்டின் விதிகள் தான் நர்மதாவைக் கட்டுப்படுத்தும்.

விட்டுப் பிரிய மனமில்லாமல் பேசிக் கொண்டிருந்தவர்களை அனுபவப் பட்ட முதிர்ந்த ஒரு குரல் ’ கிளம்புங்கப்பா அங்க வேலை கிடக்குதில்ல ’ என்று கிளப்பிவிட்டது.

பெண் வீட்டினர் அனைவரும் கிளம்பத் தயாரானோம்.

அக்கா சாந்திக்கும், மணப் பென்ணின் தங்கை நிவேதாவுக்கும் கண்கள் ஊற்றெடுத்துக் கொண்டன எனக்கும் கூட கண்கள் கலங்குவதை கட்டுப் படுத்த முடியவில்லை.

உமா பக்கத்து அறையில் விளையாடிக் கொண்டிருந்த அன்புமதியை அழைத்து வந்தாள்.

நர்மதாவின் கண்களிலும் கண்ணீர் நிரம்பி வழியக் காத்திருந்தது.

ஒவ்வொருவராய் நர்மதாவிடமும் மாப்பிள்ளையிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினோம்.

அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் கடைசியாய் கிளம்பிக் கொண்டிருந்தோம்.

அன்புமதி நர்மதாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாங்கள் வாசலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தோம். அன்புமதி திடிரென பிடித்திருந்த என் கைகளை விலக்கி விட்டு நர்மதாவை நோக்கி ஓடினாள்.

என்ன ஏதுவென்று தெரியாமல் திரும்பிப் பார்ப்பதற்குள் அன்புமதி ஓடிப் போய் நர்மதாவின் கைகளைப் பிடித்து,

‘ எல்லாரும் போறாங்கடி, வாடி நர்மதா , நீ மட்டும் ஏன் இங்க இருக்க வாடி வாடி விட்டுட்டு போயிறப் போறாங்க’

என்று மறுபடி மறு படி சொல்லிய படி நர்மதாவை இழுக்க ஆரம்பித்தாள்.

அனைவரும் ஒரு கணம் அதிர்ந்து போனோம்.

சில அழுத மனங்கள் விம்மலை வெளிப் படுத்தின, சிலருக்கு சிறுமியின் அறியாமை இதழ்களில் சிரிப்பைச் சிந்தியது.

ஓடிச் சென்று அன்புமதியைத் தூக்கிக் கொண்டேன்.

‘ நர்மதாவுக்கு இங்க வேலை இருக்கு அதை முடிச்சிட்டு அப்புறமா வரும் , என்று சொன்னேன் அன்புமதியிடம்.

நம்பாமல் ‘ அப்புறம் வருவியாடி’ என்று நர்மதாவை அன்பு கேட்க
நர்மதா அழுத விழிகளோடு ஆமென தலையாட்டினாள்.

அன்புமதியை தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

வாசல் வரை நர்மதாவை திரும்பிப் பார்த்த படி வந்தாள் மதி.

போகும் போதோ, போய் சேர்ந்த பிறகோ பொங்கிப் பெருகும் அன்புமதியின் கேள்விகளுக்கு வழக்கம் போல் உண்மையான பதில்களால் திருமணத்தை அறிமுகம் செய்து வைப்பதாய் உறுதி கொண்டேன்.

வாழ்க ஜனநாயகம்

இரண்டு நாளுக்கு முன்பு தினத் தந்தியில் ஒரு செய்தியைப் பார்த்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை.
வேறு ஒன்றுமில்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் விட்டுப் போனவர்களை இணைக்கும் இறுதி முயற்சியாக இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்திருந்தது . அதில் ஒன்று செல்பேசி எண், மற்றொன்று தொலைபேசி எண். 8ம் தேதி கடைசி நாள் அதற்குள் அந்த எண்களுக்கு பேசினால் வீடு தேடி வந்து வாக்காளர் பட்டியலில் உங்களை இணைத்துக் கொள்வார்கள் என்றது அந்த செய்தி.

நமது நாடு எவ்வளவு முன்னேறிவிட்டது. குடிமக்களை என்னமாய் மதிக்கிறது ஆனது ஆகட்டும், போனது போகட்டும் என்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். உணர்ச்சி வசப்பட்டு என்ன செய்தேன் என்கிறீர்களா? அந்த எண்களுக்கு முயற்சி செய்தேன்.

முதலில் செல்பேசிக்கு, எண்களை மெனக்கிட்டு எனது செல்பேசியில் சேமித்திருந்தேன். என்ன பதில் என்று ஆவலுடன் அவர்கள் வீட்டுக்கு வர வசதியாய் வீட்டில் இருக்கும் நாளாகப் பார்த்து இன்றைக்குப் பேசினேன். எண்களை அழுத்திவிட்டு காத்திருந்தேன் சிறிது நேரத்திற்குப் பிறகு ‘ இந்த எண் சுவிட்ச்டு ஆப் ‘ என்றது ஒரு பதிவுக் குரல்.

கொஞ்சம் ஏமாற்றமாகத் தான் இருந்தது. ஆனாலும் தொலைபேசி எண் கையிலிருக்கும் தெம்பு இருந்தது. மனம் தளராத விக்கிரமாதித்யனாக தொலைபேசி எண்ணை தேடி அழுத்தி விட்டுக் காத்திருந்தேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ‘ டெம்ரவர்லி அவுட் ஆப் ஆடர் ‘ என்று சொல்லி அதுவும் கைவிட்டது.

எனக்கு பெரும் கோபமாகிவிட்டது. என் மேல் தான். அரசு சம்பந்தப்பட்ட செயல்கள் இப்படித் தான் என்பதை கால காலமாக உணர்ந்தும் அல்ப நம்பிக்கையில் செயல்பட்டு விட்டது குறித்து ஆயாசமாக இருந்தது.

என்னைப் போல எத்தனை பேர் பேச முயற்சி செய்து கொலை வெறியில் சுத்துறாங்களோ?

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன். 9382136694 – 25383695 –

வாழ்க ஜனநாயகம்…..

சந்தேகம்

பள்ளிக்கூடத்திற்கு நேரமாகிவிட்டது என்று அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தோம். வண்டியின் பின்புறம் ஏறிய படியே அன்புமதி கேட்டாள்.

‘ அப்பா அச்சுங்கிறது பொண்ணுகளுக்கு வைக்கிற பேரா? ‘

மலையாளப் படம் ‘ அச்சுவின்ட அம்மா ‘ பார்த்தது நல்லதாகிப் போனது.

‘ ஆமா பாப்பா பொண்ணுக பேரு தான். கேரளாவில வைப்பாங்க… ‘ என்றதும் உடனேயே

‘ ஏம்பா அந்தப் பேரப் போய் வைக்குறாங்க? ‘ என்றாள் ரெம்பக் கவலையாக.

ஒன்றும் புரியாமல் ‘ ஏன் அந்தப் பேருக்கு என்ன குறைச்சல்’ என்றேன்.

‘ இல்லப்பா யாரு அச்சு அச்சு தும்மினாலும் அவ திரும்பிப் பார்ப்பாளே , அவ பாவம் தானே ‘ என்றாள் ரெம்ப சிந்தனையாக.

வெடித்துச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்னால் ,எதிரில் வருபவர்கள் அதிர்ச்சியாய் பார்த்தாலும்.

மரணத்தின் அறிமுகம்

நானும் எனது மகள் அன்புமதியும் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தோம். எதிரே பட்டாசு வெடிப்பு காது கிழிக்க, தாரை, தப்பட்டைகள் முழங்க, குத்தாட்டத்துடன் ஒரு சவ ஊர்வலம் நடு ரோட்டில் வந்தது. கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது.

நானென்ன புத்தனின் தந்தையா? கல்யாணமாகி குழந்தைப் பிறக்கும் வரை மரணத்தைக் கண்ணில் காட்டாமல் பிள்ளை வளர்ப்பதற்கு. அன்புமதிக்கு அப்போது 4 வயசு. புதிய விசயத்தை அறிந்து கொள்ளும் குழந்தையின் இயல்பான ஆர்வத்தோடு எல்லாவற்றையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வயதான மனிதரின் சவம். மாலை அலங்காரத்துடன் பாடையில் பயணித்துக் கொண்டிருந்தது.

கூட்டம் கடந்ததும் வண்டியைக் கிளம்பினேன். முன்னால் அமர்ந்திருந்த அன்புமதி திரும்பிப் பார்த்து
‘ஏம்பா அந்த தாத்தாவை அப்படி தூக்கீட்டு போறாங்க?’ என்றாள்.

‘அவரு இறந்து போயிட்டாரு’ என்றேன்.

‘இறந்து போறதுன்னா’ உடனே அடுத்த வினா. எப்படிச் சொல்லி விளங்க வைப்பது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன்.

‘ இறந்து போயிட்டாங்கன்னா அவங்களால மூச்சு விட முடியாது. பேச முடியாது, நடக்க முடியாது, ஒன்னுமே பண்ண முடியாது. தக்காளிப் பழம் கெட்டுப் போற மாதிரி அதற்கப்புறம் தூக்கிப் போட வேண்டியது தான். ரெம்ப வயசானாலோ இல்ல ரெம்ப உடம்பு சரியில்லன்னாலோ இறந்திருவாங்க.’

இதற்கு மேல் பெரிய விளக்கங்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் நிறுத்தினேன்.

புரிந்ததா இல்லையா தெரியவில்லை அடுத்த கேள்விக்குத் தாவினாள்.

‘ இப்ப அவங்கள எங்க எடுத்திட்டு போறாங்கப்பா? ‘

‘ சுடுகாட்டுக்கு ‘

‘ அங்க போயி என்னப்பா பண்ணுவாங்க?’

‘ மண்ணு தோண்டி புதைப்பாங்க, இல்லன்னா எரிப்பாங்க’

‘ அய்யோ.. அப்ப அவங்களுக்கு வலிக்காதாப்பா ?’

‘ அதுதான் இறந்துட்டா ஒன்னுமே தெரியாதே. கடைல சிக்கன் வாங்கீட்டு வந்து வீட்டுல சமையல் பண்ணுறோம்ல கோழி கத்துதா, அதுக்கு வலிக்குதா, ஏன்னா அது ஏற்கனவே செத்துப் போச்சி. அது மாதிரி தான் .’

புரிந்திருக்கும் போல அமைதியாய் கொஞ்ச நேரம் இருந்தாள் அன்புமதி.

என்ன சிந்திப்பாளென்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

‘ அப்பா நீங்களும் செத்திருவீங்களாப்பா?’ என்றாள் வேகமாக.

‘ ஆமா பாப்பா, எல்லாரும் ஒரு நாள் செத்துத் தான் ஆகணும்.’ நானும் சாவேன் என்றதும் அன்புமதியின் முகம் சிறிது வாடியது.

‘ நீங்க செத்துட்டா அப்பாவுக்கு நான் என்ன பண்ணுறது.’ என்றாள் வருத்தமாக. அடுத்த என்னுடைய பதிலுக்காக காத்திருந்தாள் முகத்தைப் பார்தத படி.

‘ அன்புமதி பெருசானதுகப்புறம் , அப்பாவுக்கு நல்லா வயசானதுகப்புறம் தான் சாவேன் குட்டி’ என்றேன்.

ஒரு நொடிக்கும் குறைவான இடைவெளியில் சட்டென்று ‘அப்பயும் வயசானாலும் நீங்க சாகக் கூடாது சரியாப்பா’ என்று சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருந்தாள்.

நான் ஒன்றும் சொல்லாமல் நெகிழ்ந்த ஒரு முத்தத்தை அன்புமதியின் பிஞ்சுக் கன்னத்தில் கொடுத்துவிட்டு அமைதியாய் வண்டியை ஓட்டத் துவங்கினேன்.

மனசு நிறைந்திருந்தது.

பிப்ரவரி14- 98, கோவை, காதலும் வெடிகுண்டும்…

எனது காதல் கவிதைத் தொகுப்பான ‘கவிதை அல்ல காதல் ‘ நூல் வெளியீட்டு விழா காதலர் தினமான பிப்ரவரி 14ல் 98ம் வருடம் கோவையில் நடந்தது.

அண்ணன் அறிவுமதியும், அண்ணன் பழநி பாரதியும் சிறப்பு விருந்தினர்கள்.மாலை 3 மணிக்கு விழா.

இடம் ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையில் இருக்கும் திவ்வோதயா அரங்கம்.
‘விழா நேரத்திற்கு முன்பே கூட்டம் வரத் துவங்கி விட்டது. விரைவாகவே அரங்கம் நிறைந்து விட்டது.

அண்ணன் பழநிபாரதி சாய்பாபா காலனியின் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

கூட்டம் அதிகமாகி விட்டதால் அவர்களைக் காக்க வைப்பது முறையல்ல எனவே விழாவைத் துவங்கி
விடலாம் அண்ணன் வந்து இணைந்து கொள்வார் என்று முடிவெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்கள்
மேடையில் அமர வைக்கப் பட்டார்கள்.

நண்பன் மாகலிங்கத்தோடு பாடலோடு விழா துவங்கியது.

பாதிப் பாடல் பாடிக் கொண்டிருகும் போது மாபெரும் வெடிச் சத்தம், அரங்கமே கொஞ்ச நேரம்
அதிர்ந்து அடங்கியது. கூட்டம் முழுவதும் வெளியில் ஓடி வந்தது.

என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. விரும்பத் தகாத ஏதோ நடந்து விட்டது என்பதை மட்டும் அனைவருக்கும் புரிந்தது.

எனக்கு விழா அவ்வளவு தான் என்று தோன்றியது.

உதவி இயக்குனரான நான் என் சக்திக்கு மீறி உறவினர்கள், நண்பர்களிடம் பிய்த்துப் பிடிங்கி பணம்
தயார் செய்து செலவழித்திருந்தேன்.விழா நின்று போய்விட்டால் இன்னொரு முறை நடத்துவதென்பது சத்தியமாய் சாத்தியமில்லை.

குழுக்கள் குழுக்களாக கூடி நின்று அனைவரும் பேசி சலசலத்த படி இருந்தார்கள்.

அண்ணன் ஓசைக் காளிதாசனும்,அண்ணன் கவிஞர் அவை நாயகனும் குழப்பத்தில் நின்று
கொண்டிருந்தவனை உலுக்கி உலகிற்கு கொண்டு வந்தார்கள்.

‘போய் மேடைல உட்காருங்க ஆனது ஆகட்டும் நிகழ்சியை நடத்துவோம்’ என்றார்கள்.

மீண்டும் அண்ணன் அறிவுமதி மேடையில் வந்து அமர்ந்தார் விழாத் துவங்கியது.

கொஞ்ச நேரத்திற்கொரு முறை பெரும் வேட்டுச் சப்தங்கள் கேட்ட படி தான் இருந்தது.

பழநி பாரதி அண்ணன் வரவில்லை. எங்கு இருக்கிறார் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை.

கொஞ்சம் பேர் பீதியில் கிளம்பி விட்டாலும் அரங்கம் நிறைந்திருக்க விழா நடந்தது.

பாதியில் பழநி பாரதி வந்து விட்டார்.

அவர் வந்த பிறகு தான் வெளியே வெடித்துக் கொண்டிருப்பவைகள் குண்டுகள் என்பதை அறிந்தோம்.

மேடையிலேயே வெளியில் குண்டு வெடிப்பதைப் பற்றி அறிவித்தும் அனைவரும் விழாவில் பங்கு
கொண்டது ஆச்சரியமாய் தான் இருக்கிறது இன்றும்.

பழநி பாரதி பேசும் போது ‘ காதலைப் பற்றிப் பேசுவது மதத்திற்கு எதிராகப் பேசுவது, சாதிகளுக்கு
எதிராகப் பேசுவது, அதற்கு உதாரணமாகத் தான் வெளியே யாரோ யாரையோ அழிக்க ஆயுதங்கள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பொன் சுதா நாம் பேசுவதற்காக பூக்களை வழங்கி கொண்டிருக்கிறார்’ என்று பேசினார்.’

விழா சிறப்பாய் பயத்தோடும் பதட்டத்தோடும் நிறைவடைந்தது.

விழா முடிந்ததும் தான் தெரிய வந்தது எங்கேயும் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை என்பது.

இரு சக்கர வாகனங்களில் ஒவ்வொருவராய் சென்று நண்பர்கள் விட்டு வந்தார்கள்.

பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த நண்பர் காந்தி, லதா அக்கா, நண்பன் மீன்ஸ், அம்சப்ரியா, மற்றும்

இன்னும் சிலர், சென்னயிலிருந்து, திருப்பூரிலிருந்து வந்திருந்த நண்பர்கள் அனைவரும் அரங்கிலேயே
தங்க வைக்கப் பட்டார்கள். விழா முடிந்தும் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்படியாக அந்த விழா அதில் பங்கு கொண்ட யாவருக்கும் மறக்க முடியாத திகிலான நாளாக அமைந்து விட்டது.

திகில் நிமிடங்கள்:

1. விழாவிற்கு முந்தைய நாள் இரவிலும், அதற்கு முந்திய நாள் இரவிலும் கோவை முழுக்க நானும்
நண்பன் மீனாட்சி சுந்தரமும், திலகேஸ்வரனும் போஸ்டர் ஓட்டினோம் அப்போது தானே அவர்கள்
குண்டுகள் வைத்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

2. சிறப்பு விருந்தினர்களுக்கு ரோஜாக்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆர் எஸ் புரத்திற்கு
நானும் என் தம்பி பிரசாத்தும் அத்வானி பங்கு கொள்ளும் விழாவின் மேடயைக் கடந்து போய் அதன்
வழியாகவே திரும்பினோம். அதன் பிறகு அரை மணி நேரத்தில் முதல் குண்டு அங்கு வெடித்தது.

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்