கண்ணாடிக் கத்திகள்

சும்மா போகும்

திருடர்களின் கால்களை

சவால் விட்டு

அழைக்கின்றன

 

அறைகளில்

பாதுக்காக்கப் படுகின்ற

பொக்கிஷங்களைப் பற்றி

தண்டோரா அறிவிக்கின்றன  

 

கட்டிடப் பொருட்களோடு

சரிவிகிதமாய் 

அச்சமும் கலந்து

வீடு எழும்பியதையும்

 

பறந்தொய்ந்து சிறுபறவையும்

இளைப்பாற 

இடம் தர விரும்பாத

குரூரர்களின்

இருப்பிடமென்பதையும்

உறுதி செய்கின்றன ..

 

.படம்

 

கூரிய கத்திகளாய்

உடைந்த சீசாக்களைப்

பதித்து வைத்திருக்கும்

சுற்றுச் சுவர்கள்.

 

 

ஹைக்கூத் தோட்டம் 60

சிதறி விழுந்த மலர்கள்
நசுக்கி விரையும் வாகனங்கள்
விபத்தில் இறந்தவனின் இறுதிஊர்வலம்.

அழகிய பெரியவனுக்கு தமிழக அரசின் விருது….

அழகிய பெரியவன் தமிழின் முக்கியமான படைப்பாளி.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்ற அனைத்து இலக்கிய படைப்பாக்க வெளிகளிலும் தனது முத்திரையை பதித்து வருபவர்.

தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கக் கூடியவை இவரது படைப்பின் குரல்.

நவீன எழுத்து முறையும், வாழ்வியல் விட்டு விலக்காத கதை களமுமாக அற்புத கலவை இவரது எழுத்துகள்.

பேரணாம் பட்டைச் சேர்ந்தவர் அழகிய பெரியவன்.

ஒரு பள்ளி ஆசிரியராக எளிய வாழ்வு வாழும் எழுத்தாளர்.

எளிமையான மனிதர்.

சமரசமற்ற போராளி, எழுத்தோடு நில்லாமல் ஓடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களிலும் முன்னனியில் நிற்பவர் அழகிய பெரியவன்.

அவரது ‘ உனக்கும் எனக்குமான சொல் ‘ என்ற கவிதைத் தொகுப்பிற்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது.

சரியான நபருக்கு சரியான படைப்புக்கு விருது கிடைத்துள்ளது.

அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

ஹைக்கூத் தோட்டம்- 57

andar420

அமைதியாய் இருந்தாலும்

மதம் பிடித்த யானை

நெற்றியில் நாமம்.

பெயர்க் காரணம்

824aa776135ed6068e3c56519034c870

“ எனக்கு ஏம்பா அன்புமதின்னு பேரு வைச்ச ” திடிரென ஒரு இருசக்கர வாகனத்தின் பயணத்தின் பாதியில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருந்த அன்புமதி கேட்டாள்.

நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி அர்த்தம் அறிந்து பிடித்துப் போய் வைத்ததினால் உடனடியாய் பதில் சொல்ல முடிந்தது.

‘ ஒரு மனுசனுக்கு அறிவு அதிகம் இருந்து அன்பு இல்லாமல் போனால் அவன் முழுமையானவன் இல்லை.

அதே போல ஒருத்தருக்கு அன்பு அதிகம் இருந்து அறிவே இல்லாமல் போனால் அதுவும் வீண் தான்.

அன்பும் அறிவும் ரெண்டும் இருந்தால் தான் அவங்க முழுமையான சிறந்த மனுசங்களா இருக்க முடியும். அதுனால தான் உனக்கு அன்பும், அறிவும் சேர்ந்த பெயராய் வைச்சிருக்கோம் ’ என்றேன்.

ரொம்ப கவனமாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஒரு விநாடி நேர இடைவெளிக்குள் 7 வயது அன்புமதி கேட்டாள் “ நான் அப்பிடி இருக்கேனாப்பா?”

சொன்னதை முழுமையாய் புரிந்து அதற்குள்ளிருந்து ஒரு அர்த்தமுள்ள மிகப் பெரிய கேள்வியை மிகச் சாதாரணமாய் கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திருந்தாள்.

எனக்குத் தான் வாயடைத்துப் போனது. மகிழ்விலும், அதிர்விலும்..

சாமாளித்துக் கொண்டு உடனே சொன்னேன் ‘ நீ அப்பிடித் தான் இருக்கே ’

அன்புமதியின் முகத்தில் பெயரைக் காப்பாற்றி விட்ட ஒரு நிறைவு.

என் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது எனக்குத் தெரியாது எனபதும். என்ன காரணத்தினால் என் அப்பா அம்மா வைத்தார்கள். என்பதை ஏன் இத்தனை வயது வரை அறிந்து கொள்ளத் தோன்றவில்லை என்ற கேள்வி எனக்குள் வளர்ந்து வீங்கிக் கொண்டிருந்தது.

கறுப்பு வெள்ளை உலகம்

84

அன்புமதி திடிரென அந்தக் கேள்வியைக் கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.

கொஞ்ச நேர சிரிப்புக்குப் பின் தான் பதில் சொல்ல முடிந்தது.

அன்புமதி எனது 6 வயது மகள்.

சிறிய வயதில் இருந்து சில கேள்விகளால் என்னை வியப்பில் ஆழ்த்துவாள்.

செத்துப் போறதுன்னா என்னாப்பா,என்பது போன்ற கேள்விகள்.

நான் விளக்கமாய் உண்மையான பதில்களைச் சொல்லுவேன்.

அவைகளை பதிவுகளாகவும் போட்டிருக்கிறேன்.

இப்போது வளர வளர கேள்விகள் குறைந்து வருகிறதோ? சிந்திக்க நேரமில்லாமல் தொலைக்காட்சியும் , விளையாட்டும் மூளையில் நிறைந்து போனதோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அப்படிக் கேட்டாள்.

கேள்வி இது தான்.

‘ அப்பா கறுப்பு வெள்ளை படங்கள் வந்த போது இந்த உலகம் கறுப்பு வெள்ளையாகவா இருந்தது ?’

இல்லை எல்லா செயல்களுடன் அவள் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்ற மகிழ்வுடன் அன்புமதியின் கேள்விகான பதிலை சொன்னேன்.

ஒரு நண்பன்

6.13 angry man

அலுவலுகத்திற்கு தாமதமாகி விட்டதால் வேக வேகமாக நடந்து கொண்டிருக்கும் போது என் பெயரை உரிமையுடன் அழைத்தது ஒரு குரல். குரலின் திசையில் திரும்பும் முன் ஓடி வந்து என் கைகளை பற்றி கொண்டன உறுதியான கரங்கள். பார்த்தால்,முகம் மலர நிற்கிறான் தர்மராஜ்.அவனை பார்த்து எட்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். மீண்டும் அவனை சந்திப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

கோவை அரசுகலைக்கல்லூரி மாணவர் விடுதியில் முதலாண்டில் நான், தர்மராஜ், சுந்தர மூர்த்தி மூவரும் ஒரே அறையில் தங்கிப் படித்தோம். தர்மராஜ் வாட்ட சாட்டமாக இருப்பான். உடற்பயிற்சியில் உருவேற்றிய உறுதியான உடல்.அதற்கு நேர்மாறான குழந்தை மனசு.அவன் நல்ல குரல் வளமுள்ள பாடகனாக இருந்தான். எப்போது பாடச் சொன்னாலும் சிரித்த முகத்துடன் ரசித்து பாடுவான். அவனது விருப்ப பாடல் சங்கராபரணத்தில் உள்ள ‘சங்கரா’ என்ற பாலசுப்ரமணியத்தின் பாடல். அவன் அந்த பாடலை பாடும் போது கண்மூடி கேட்டால் நிஜபாடலைக் கேட்கிறோமோ என்று சந்தேகம் வரும்.

எனக்கும் சுந்தரமூர்த்திக்கும் எப்போதாவது சண்டை வரும் போது தர்மராஜ் தான் சமாதான படுத்துவான். நானும், தர்மராஜும் திரைப் படம் பார்ப்பது ஒரு நாளும் தவறாது. ஒரு முறை நான் அழைத்து போக வேண்டும் மறுமுறை அவன் அழைத்து போக வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அமலில் இருந்தது. கல்லூரி நேரம் தவிர ஒன்றாகவே சுத்துவோம். முதல் ஆண்டு முடிந்து கிளம்பும் போது அடுத்த ஆண்டும் ஒரே அறையில் தங்கி கொள்வதாய் முடிவு செய்தோம். யார் முதலில் வருகிறார்களோ அவர்களே நல்லஅறையாக பிடித்து வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு கிளம்பினோம்.

இரண்டாம் ஆண்டு துவங்கும் போது நானே முதலில் வந்து நல்ல அறையை பிடித்தேன். கல்லூரி துவங்கி ஒரு மாதமாகியும் தர்மராஜ் வரவில்லை. குழப்பமாய் இருந்தது, அவனது முகவரியோ தொலைபேசி எண்ணோ இல்லை. சேலம் பக்கதில் ஏதோ கிராமம் என்பது மட்டும் நினைவில் இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இரண்டு மாதமும் ஆகி விட்டது அறையில் தனியே தங்கி இருந்தேன்.

சுந்தர மூர்த்திதான் ஒருநாள் பதட்டதுடன் வந்து நம்பமுடியாத அந்த செய்தியை சொன்னான். தர்மராஜ் அவனது அண்ணியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு சிறையில் இருக்கிறான் என்று, அவனது வகுப்பில் யாரோ செய்தித்தாளில் பார்த்து விட்டு சொன்னதாய் கூறினான். ‘வேற யாரையாவது பார்த்துட்டு சொல்ல போறாங்க’ என்றதற்கு, ‘அவந்தான் காலேஜ் பெயரெல்லாம் போட்டு இருந்ததாம், தலை முதல் கால் வரை வெட்டு இல்லாத இடமே இல்லையாம்’ என்றான்.

மிகப்பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. அப்படியா கோபம் வரும் மனிதனுக்கு, அப்படி என்ன தான் பிரச்சனையாக இருக்கும் என்று கண்டதை கற்பனை செய்து நிம்மதி இல்லாமல் காலம் ஓடிக் கொண்டிருந்தது.

இராண்டாம் ஆண்டு முடிவதற்கு சில வாரங்களே உள்ள போது, வழக்கம் போல் மதிய உணவு இடைவேளையில் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு வகுப்பிற்கு கிளம்ப உடை மாற்றிக் கொண்டிருந்தேன் அறையின் கதவை யாரோ தட்டினார்கள். கதவைத் திறந்து பார்த்தால் தர்மராஜ் நின்று கொண்டிருந்தான். ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டேன், கண் கலங்கினான். என்னடா இப்பிடி பண்ணிட்ட என்றேன் மவுனமாக இருந்தான். ஆள் கொஞ்சம் தளர்ந்து இருந்தான். பெயிலில் வந்திருப்பதாய் சொன்னான். சிறிது நேரத்திற்கு பின், என்னடா நடந்தது என்றேன். தயவு செஞ்சு அத ஞாபகப் பாடுத்தாத என்றான். எல்லாத்தையும் பாக்கணும் போல இருந்துச்சு என்றான் கொஞ்சநேரம் கழித்து.

சுந்தர மூர்த்தியையும் கூட்டி வந்தேன் அவன் குழந்தை போல அழுதான். வகுப்புக்கு போகாமல் மூவரும் அறையிலேயே இருந்தோம். உன் பாட்டை கேட்கணும் போல இருக்குடா என்று சொன்னதும் அதற்காகவே காத்திருந்தது போல பாடத் துவங்கினான். அடுத்து அடுத்து என்று அரை மணிநேரம் பாடினான். அவனது பாரங்களையெல்லாம் பாட்டின் வழியே வெளியேற்றி விடும் உத்வேகத்தில் பாடினான். கடைசியாய் அவனுக்கு பிடித்த ‘சங்கரா’ பாடலோடு முடித்தான். ஓரே உணர்ச்சி பிரவாகமாக இருந்தது, மூவரும் கண் கலங்கி இருந்தோம். மாலையில் மனமின்றி கிளம்பினான். இனி எப்போடா பாக்குறதுன்னு கேட்டேன், தெரியாது என்றான். வழி அனுப்ப வர வேண்டாம் என்றான், விழுங்கி விடுவது போல இருவரையும் பார்த்தான்,’வர்றேன்’ என்று சொன்ன வேகத்தில் விடுவிடுவென நடந்து போனான்.

கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இந்த சந்திப்பு. தர்மராஜுவுடன் அவனது நண்பன் ஒருவனும் இருந்தான். அவனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.பக்கத்து டீக்கடையில் டீ சாப்பிட்டோம். எனக்கு எல்லாமே கனவில் நிகழ்வது போலவே இருந்தது. என்னைப் பற்றி விசாரித்தான். ஏதோ பிஸ்னஸ் செய்வதாக சொன்னான். என் முகவரியை கேட்டான், அவனது முகவரியை சொன்னான். நேரம் கிடைக்கும் போது வருவதாய் சொல்லி,சமயம் கிடைக்கும் போது நீயும் வா என்றான். முக்கியமான வேலை காரணமாக உடனே கிளம்புவதாகச் சொல்லி அவசர அவசரமாக கை குலுக்கிப் பிரிந்தான். ஒரு ஆட்டோவை மறித்து அவனது நண்பனுடன் ஏறி அமர்ந்து கை காட்டிய படியே சென்றான். நான் ஆட்டோ போவதை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

இது நடந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஓடி விட்டது என்றாலும் நாலு தெரு தள்ளி இருந்த அவனை காண ஒரு போதும் நான் ஏன் முயற்சிக்கவில்லை, அதே போல்அவன் ஏன் என்னை ஒருமுறை கூட சந்திக்கவில்லை என்ற கேள்வி அவ்வப் போது மனதில் வந்து வந்து செல்லும். இப்போது யோசிக்கும் போது, எல்லாம் மறந்து புதிதாய் வாழ அவன் விரும்பி இருக்கலாம்,என்னை சந்தித்தது அவனது பழைய நினைவுகளை கிளறி துன்புறுத்தி இருக்கலாம். அவனது நண்பர்களுக்கு என் மூலம் அவனைப் பற்றிய உண்மை தெரிந்து விடும் என்று அச்சப்பட்டிருக்கலாம். ஏதோ கோபத்தில் அவன் கொலை செய்திருக்கிறான் அதே கோபம் என் மீதும் எப்போதாவது வந்து விட்டால் என்ற பயம் கூட நான் அவனை பார்ப்பதை தவிர்த்தற்கு மூலமாய் இருந்திருக்குமோ என்று தோன்றுகின்றது.

எப்படியோ என் மனதுக்குள் அவனை பற்றிய நினைவுகள் நான் வாழும் வரை வாழும்.

ஹைகூத் தோட்டம் – 56

2408335704_774f56cd53

மரக்கிளையில் காத்திருக்கின்றன

சின்னஞ்சிறு குஞ்சுகள்

கூண்டுக்குள் தாய் .

ஹைகூத் தோட்டம் – 55

3035259896_f9c3699064_b

இன்னும் தொடரும் வாழ்வு

ஆழப் பாய்ந்த கத்தி

அவள் பிரிவு….

நன்றி அறிவித்தல்

angel2

நடந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டாலும் இன்னும் நினைவில் இருக்கிறது பதட்டமான அந்த இரவுப் பொழுது. நான் ஏறிய பாடாவதிப் பேருந்து ஆமை வேகத்தில் இரவு 11.30 க்கு பொள்ளாச்சி வந்து சேர்வதற்கு கால் மணி நேரத்திற்கு முன்பே எனது ஊருக்கான கடைசி வண்டி கிளம்பி இருந்தது. இனி அதிகாலை 5 மணி வரை காத்திருப்பது தவிர வேறு வழி இல்லை. பேருந்து நிலையத்தில் கூட்டம் நிறைய இருந்தது. பெரும்பாலும் என்னைப் போல முழுஆண்டுத் தேர்வு முடிந்து கிளம்புகிற மாணவ மாணவியர்களும், அவர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்களின் கூட்டமுமே நிரம்பி இருந்தது .

என்னை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை.இத்தனைக்கும் எனக்கு வயது 11 தான். வத்தலக்குண்டில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்தின் பின் பொள்ளாச்சி வந்து சேர்ந்திருந்தேன். இன்னும் நான்கு மணி நேர மலைப் பயணம் பாக்கி இருந்ததது நான் என்னுடைய வீட்டை அடைவதற்கு. முதல் நாள் ஹாஸ்டலில் சேர்க்கும் போது அப்பா வந்ததோடு சரி. இடையில் ஒரு முறை பக்கத்து ஊருக்கு ஏதோ கல்யாணத்திற்கு வந்த போது முகம் காட்டி விட்டு போனார். மற்றபடி எங்களின் தொடர்பு என்பது எனது கண்ணீர்க் கடிதங்களும், பதிலுக்கு வரும் அறிவுரைக் கடிதங்களும், எல்லாம் உன் நன்மைக்குத் தான் என்று அம்மா எழுதும் ஆறுதல் கடிதங்களும் தான்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளின் போது பக்கத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு போய் விட்டேன். பாட்டியின் ஊருக்கு இரண்டு மணி நேரத்தில் போய் விடலாம். பாட்டி வீட்டிற்கு காலாண்டு விடுமுறைக்குப் போனது தான் யார் துணையும் இல்லாமல் நான் மட்டும் போன முதல் பயணம். அதனைப் பாராட்டி அப்பா அம்மா கடிதமெல்லாம் எழுதி இருந்தார்கள். அந்த தைரியத்தில் தான் தனியே வரச் சொல்லி உத்தரவு.

பஸ்சில் தூங்கிய படியே வந்திருந்ததால் தூக்கம் வரவில்லை. எனது பேக்கை சரி பார்த்துக் கொண்டேன். அங்கங்கு பெரிய பையன்கள் கூட்டம் கூட்டமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் கூட்டம் ஒன்று வட்டமாய் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. சிலபேர் தரையிலேயே நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். சிமென்ட் பெஞ்சில் மூன்றுபேர் உட்கார்ந்த படியே உறங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கு இருந்த சிறிய இடைவெளியில் உட்கார்ந்து கொண்டேன். அந்த இரவிலும் டீக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு எதேச்சையாக கால் சட்டைப்பையில் கைவிட்டவனுக்கு பகீர் என்றது. அதில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை. இருந்த பணத்தையெல்லாம் அதில் தான் வைத்திருந்தேன். ஹாஸ்டலில் சமையல்காரராய் இருந்த எனது தாத்தாவிடம் தான் பணத்தைக் கொடுத்து வைத்திருப்பேன். நான் மட்டுமல்ல, அங்கிருக்கும் எல்லா மாணவர்களும் அவரிடம் தான் கொடுத்து வைப்பார்கள். 25 பைசாவுக்கு மேல் அவரிடம் இருந்து காசு வாங்கி விட முடியாது. அதுவும் ஏன் எதற்கென்று நூறு கேள்விகளுக்குப் பிறகே கைக்கு வரும். ஊருக்கு கிளம்புவது மாதிரியான சந்தர்ப்பங்களில் தான் நோட்டாக வாங்க முடியும். கிளம்பும் போது இருபதும் பத்துமாய் முப்பது ரூபாயை கைகளில்கொடுத்து பத்திரமா வச்சுக்கோன்னு சொல்லிக் கொடுத்தார்.

பஸ்சில் பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியது போக மீதிச் சில்லறையையும், இருபது ரூபாயையும் கால்சட்டைப் பையில் தான் வைத்தேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது பார்த்தால் காணவில்லை. தூங்கிக் கொண்டு வந்ததில் சீட்டில் ஏதாவது விழுந்துவிட்டதா? பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனின் முழியே சரியில்லை,திருட்டு முகத்தோடு ஒரு ஆள். அவன் எடுத்திருப்பானோ? அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. எப்படி ஊருக்குப் போவது? பொள்ளாச்சியில் யாரையும் தெரியாது. ஒன்றும் தோன்றவில்லை அழுகையாய் வந்தது. கொஞ்ச நஞ்சமிருந்த தூக்கமும் ஓடிப் போய்விட்டது. எனது துன்பத்தை சொல்லி கொள்ள கூட யாரும் இல்லை. இனி என் கதி என்ன? நான் என்ன செய்ய முடியும், என்ன செய்ய வேண்டும் எதுவும் புரியாமல் பயமாய் இருந்தது. எட்டு ரூபாய் இருந்தால் கூட போதும் ஊர் போய் சேர்ந்து விட முடியும்.

மனதில் தாறுமாறாக கற்பனைகள் தோன்றி பயமுறுத்திக் கொண்டிருந்தது. அந்த குளிர் இரவிலும் வியர்த்துக் கொட்டியது. அப்பா அம்மா மீது கோபம் கோபமாய் வந்தது. அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார்கள் , ஆனால் நானோ நடு இரவில் மாபெரும் ஆபத்தின் நடுவில் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறேன்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல குழம்பிய நீரின் தெளிதலைப் போல ஒரு யோசனை தோன்றியது. அதன் விளைவுகளைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தாலும் உடனே செயல்படுத்திப் பார்க்கும் முடிவோடு உடனே எழுந்து கொண்டேன். அங்கு இருப்பவர்களை சுற்றிப் பார்த்தேன். என்னை விடவும் சிறியவனாய்த் தோன்றிய ஒருவன் அவனது தந்தையுடன் நின்று கொண்டிருந்தான். அவரிடம் போய் நின்றேன், என்ன என்பது போல் பார்த்தார். ‘ஆறாம் வகுப்பு பழைய புத்தகம் இருக்கு, வேணுங்களா?’ கேட்ட வேகத்தில் ‘ வேணாம்பா’ என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லி விட்டு திரும்பிக் கொண்டார். எனக்கு கண் நிறைந்தது.

ஒன்றும் செய்யத் தோன்றாமல் கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன். சிறிதும் பெரிதுமாக மாணவிகள் சில பேர் கூட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. யோசிக்காமல் உடனே அங்கே போனேன் அனைவரும் பேச்சை நிறுத்தி விட்டு என்னையே பார்த்தார்கள். சிறியவளாய் தெரிந்தவளிடம் ‘ஆறாவது பழைய புத்தகம் ஏங்கிட்ட இருக்கு வேணும்னா வாங்கிக்குங்க’ என்றதும் அனைவரும் சேர்ந்து சிரித்தார்கள். ‘குள்ளமா இருக்குறதுனால அவள ஆறாவதுன்னு நினச்சுட்டியா? அவதான் இங்க இருக்குறதில்லயே பெரியவ’ சிரித்து சிரித்துச் சொன்னாள் ஒருத்தி. அனைவரும் சேர்ந்து பெரிதாகச் சிரிதார்கள். என்ன பிரச்சனை என்று கூட யாரும் கேட்கவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது. அந்த கூட்டத்தை விட்டு விலகி கொஞ்சம் தள்ளிச் சென்று நின்று கொண்டேன்.

தெரிந்தவர்கள் யாரவது வந்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு அங்கிருக்கும் எல்லாரையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். யாரும் இருப்பது போல தெரியவில்லை. வீட்டுக்கு எப்படித் தகவலை தெரிவிப்பது? நாளைக்கும் இங்கேயே இருக்க நேர்ந்து விட்டால் எங்கே குளிப்பது? எங்கு சாப்பிடுவது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் வந்து வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. விட்டால் சத்தமிட்டு அழுதுவிடுவேன் போலிருந்ததது. அப்போது தான் ‘தம்பி’ என்று கூப்பிட்ட படி ஒரு அண்ணன் என் கைகளைப் பிடித்தார். கலங்கிய கண்களுடன் பார்த்தேன். பனிரெண்டாம் வகுப்பு அல்லது கல்லூரி முதலாண்டு படிக்கக் கூடிய வயது இருக்கும். நல்ல சிகப்பான முகம், வளரத் துடிக்கும் மீசை.’ என்னப்பா எதாவது பிரச்சனையா? அப்ப இருந்து ஒனனப் பாத்துட்டு தான் இருக்கேன். என்ன சொல்லு’ என்ற படி என் முகத்தை அவரது விரல்கள் நிமிர்தியது. அதுவரை கட்டி வைத்திருந்த அழுகை கண்களைத் தாண்டி சூடாய் இறங்கத் துவங்கியது. விம்மலோடு எல்லாவற்றையும் சொல்லச் சொல்ல பொறுமையாக கேட்டு ‘மொதல்ல கண்ணத் தொட, இதுக்குப் போய் எதுக்கு அழுகுற? இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு கடைசி பஸ் வரும், என்னோட வா, காலைல உன்னை அனுப்பி வெக்கிறேன். எங்க ஊர்ல இருந்து ஒரு மணி நேரம் தான் உங்க வீட்டுக்கு.’ எனச் சொல்லிய படி என் கண்களைத் துடைத்து விட்டு ‘எங்க சிரி’ என்றதும் மெல்லச் சிரித்தேன்.

அவரோடு அந்த பஸ்சில் அவரது வீட்டுக்குப் போனேன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு அது. அந்த அண்ணின் அப்பா அம்மா என்னோடு அன்பாய் பேசினார்கள். குளிருக்கு இதமாய் ஹீட்டர் போட்டு விட்டு போர்த்திக் கொள்ள ஒரு அருமையான கம்பளி கொடுத்தார்கள்.

காலையில் நானாய் எழுந்திருக்கும் வரை எழுப்பவில்லை. எழுந்தததும் ஆவி பரக்க காபி, சூடுநீர்க் குளியல், சுவையான காலை உணவிற்குப் பின் கிளம்பினேன். ‘ எப்போது வந்தாலும் இங்க வரணும்’ என்று சொல்லி அண்ணனின் அப்பா, அம்மா வழி அனுப்பினார்கள்.

அந்த அண்ணன் கண்டக்டரிடம் டிக்கெட் எடுத்து என்கையில் கொடுத்து கூடவே 5 ரூபாயை நான் மறுத்தும் சட்டைப்பையில் வைத்தார்கள். கண்டக்டரிடம் ‘பார்த்து இறக்கி விடுங்கள்’னு சொல்லி விட்டு பஸ் கிளம்பும் வரை இருந்து கை அசைத்தார்கள். நானும் கண் கலங்க கை அசைத்தேன்.

வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் சொன்னேன். கதை போல திரும்பத் திரும்ப கேட்டார்கள். ‘யாரோ மகராசன், நல்லா இருக்கணும்’ என்று அம்மா சொன்னார்கள். விடுமுறை முடிந்து திரும்பும் போது மீண்டும் தனியாகவே 8 மணி நேரம் பயணித்து விடுதிக்கு வந்து சேர்ந்தேன்.

அதற்குப் பிறகு மீண்டும் ஒரு முறை அந்த மனிதர்களைச் சந்திக்கவே இல்லை. உடன் பயணிக்கும் போது அந்த அண்ணனின் பெயரைக் கேட்டேன். இப்போது அது ஞாபகம் இல்லை. அந்த அண்ணனின் முகம், அவரின் அப்பா அம்மாவின் முகங்கள் எதுவும் ஞாபகமில்லை. நன்றி அல்லது தேங்ஸ் என்று ஏதாவது ஒன்றை அந்த சந்தர்ப்பத்தில் அவர்களிடம் சொன்னேனா என்பது கூட நினைவில் இல்லை. அவர்கள் இப்போது எங்கு வசிக்கிறார்களோ? அவர்களுக்கு அந்த சம்பவம் இன்னும் நினைவில் இருக்குமா? ஒரே ஒரு முறை பார்த்த இந்த முகம் ஞாபகத்தில் இருக்குமா? யாராவது எங்காவது அந்த அண்ணன் நான் தான் என்று சொல்லமாட்டார்களா? மீண்டும் ஒரு முறை மறக்க முடியாத படி அந்த முகத்தை கண்களுக்குள் பத்திரப் படுத்திக் கொள்ள மாட்டேனா? என்று ஏக்கமாய் இருக்கும் அடிக்கடி.

இப்படி ஏதோ ஒரு கட்டத்தில் யாரோ ஒருவர் வந்து நம்மை துயரங்களில் இருந்து, துன்பங்களில் இருந்து, ஆபத்தில் இருந்து கரையேற்றி விட்டு நாம் நமது நன்றியைத் தெரிவிக்கும் முன்பே ஒரு ஆசிர்வாதமான புன்னகைகளோடு விலகிப் போய் கொண்டே இருக்கிறார்கள். நன்றிகளையோ செய்த உதவிகான பிரதி பலன்களையோ எதிர்பார்க்காமல் மிக இயல்பாக தனது செயல்களின் மகத்துவத்தை அறியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சிலரால் தான் உலகம் தனது புன்னகைகளை, சந்தோசத்தை, நிம்மதியை இன்னும் தொலைக்காமல் இருக்கிறது.

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்