டாம் அன்ட் ஜெர்ரிகள்

tom_and_jery11

அன்புமதிக்கு டாம் அன்ட் ஜெர்ரி என்றால் அவ்வளவு பிடிக்கும்.

வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் டிவிடியில் இருக்கும் டாம் அன்ட் ஜெர்ரி படங்களைப் பார்ப்பது தான் வேலை..

6 வயது சிறுமிக்கு இயல்பான பொழுது போக்கு தான் என்றாலும் அவ்வப் போது எனக்கு உறுத்தலாக இருக்கும்.

ஓரே வீட்டில் யாரோ போல நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது இப்போதெல்லாம்.

நாங்கள் என்பது நான், மனைவி உமா , மகள் அன்புமதி.

நகர வாழ்வின் கைகளில் சோழி முத்துகள் போல உருட்டி எறியப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நொடிகள் தோறும் என்று உணர்கிற தருணங்கள் வாழ்வின் அபத்தங்களை வலிக்கச் சொல்கின்றன.

தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உலுக்கி எழுப்பி…

அவசர குளியல், அவசர உணவோடு அவசரமாய் உடை மாற்றி பள்ளிக்கு அனுப்புகிறோம்.

அடுத்து அவசரமாக நாம் குளித்து உண்டு உடை மாற்றி அலுவலகங்கள் எனும் தீரா பசியுடைய கட்டிட வாய்களின் உணவாக ஓடுகிறோம்.

மாலைப் பொழுதில் சக்கைகளாய் களைத்து திரும்பும் நாமும் குழந்தைகளும் ..

கடலில் அள்ளிய உள்ளங்கை நீரென வடிந்து கொண்டிருக்கும் தினசரி நாட்களின் எஞ்சிய உயிருள்ள பொழுதுகளை தொலைக் காட்சிகள், கணிணிகள், வீட்டு வேலைகள் என்று முகம் தெரியாத தாக உதடுகள் ஈரம் துளியுமின்றி உறிஞ்சிக் கொள்கின்றன…

மூவரும் ஒன்றாய் வீட்டில் இருக்கும் பொழுதுகள் மிகக் குறைந்ததாய் இருக்கின்றது.

என்றாவது ஆபூர்வமாய் ஒன்றாய் இருக்கும் நேரங்களையும் ஆளுக்கொரு வேலையில் கழித்து விடுகிறமென்ற உறுத்தல் விழித்திருக்கிறது எப்போதும்.

அப்படி மூவரும் இணைந்திருந்த ஒரு நாள் அது…

கணிணியில் முன் அமர்ந்திருந்தேன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் உமா.

அன்புமதி டாம் அன்ட் ஜெர்ரி பார்க்கத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

குழந்தையுடன் நேரம் செலவழிப்பதில்லை என்று முந்தைய நாளில் தான் பேசி வருந்திக் கொண்டிருந்தோம்.

டாம் அன்ட் ஜெர்ரி பார்ப்பதில் இருந்து கவனம் திருப்பி அருகில் அழைத்துக் கொள்ளத் தோன்றியது.

அன்பு என்று கூப்பிட்டேன்.

அடுத்த அறையில் இருந்தே என்னப்பா என்றாள்.

இங்க வாப்பா என்றதும் தனது முக்கிய வேலையின் போது அழைக்கப்படுவது குறித்த அலுப்போடு வந்தாள்.

என்ன பண்ணுற என்று தெரியாதது போல் கேட்டேன்.

டாம் அனட் ஜெர்ரி பார்க்கப் போறேன் என்றாள்.

விளையாட்டாய் பேசி எங்களுடன் இருக்க வைக்க வேண்டுமென்று தோன்றியது என்ன சொல்லமென்று யோசிக்கையில் மின்னலென ஒரு எண்ணம் தோன்றியது.

எல்லாக் குடும்பங்களும் போல எப்போதும் எதாவது வாக்குவாதம், சண்டை நடந்து கொண்டிருக்கும் எனக்கும், உமாவுக்கும்.

குழந்தைகள் முன்னால் சண்டையோ வாக்குவாதமோ வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அது ஒவ்வொரு முறையும் மறந்து போவதும் அதன் பிறகு அடுத்த சண்டைக்கு முந்தைய நிமிடம் வரை நினைவில் இருப்பது என்ன மாயமோ?

ஒரு சில நிகழ்வுகளில் அன்புமதி நாட்டாமையாக மாறி சாமாதானப் படுத்தி தீர்ப்பளித்ததும் உண்டு.

இதெல்லாம் கண நேரத்தில் துண்டுக் காட்சியாக ஓடித் தீர்ந்தது.

அன்புமதியை டாம் அன்ட் ஜெர்ரி பார்ப்பதிலிருந்து சமாதானப் படுத்தி அழைத்து வரும் வார்த்தை நாவின் நுனிக்கு வந்து சேர்ந்தது.

‘ நாங்க தான் நிஜ டாம் அன்ட் ஜெர்ரி இங்க இருக்கோம்ல எங்களைப் பார்த்தா போதாதா பாப்பா’

சாமர்த்தியமாய் பேசிய திருப்தியை அனுபவிக்கும் முன் ஒரு வினாடி கூட யோசிக்காமல் அன்புமதி சொன்ன பதில் குறி தவறாத ஒரு கத்தியைப் போல் சரியாய் பாய்ந்து இன்னும் வலித்துக் கொண்டு இருக்கிறது.

அப்படி மதி என்ன சொன்னாளென்றாள்…

‘ ஆனா இந்த டாம் அன்ட் ஜெர்ரில காமெடியே இல்லையேப்பா ‘

சின்ன வயதில் ரிட்டையர்ட் ஆனவன்

அப்பா ரிட்டையர்ட் ஆவதற்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்.

ஓய்வு பெறும் போது அலுவலகத்தில் நடக்கும் பிரிவு உபச்சார விழாவில் நான், தம்பி, அக்கா அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பப் பட்டார். ஓய்வு பெற்றாலும் பெற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்கு என்று ஆறுதல் கொள்ளவாக இருக்கும்.

மனைவிக்கு விடுமுறை எடுப்பதில் தான் பிரச்சனை. அந்தக் கம்பெனியில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது. எனவே விடுமுறை கேட்பதில் தயக்கம்.

எனக்கு அந்தப் பிரச்சனை கிடையாது. நான் திரைபட உதவி இயக்குனன். எங்கள் துறையில் வேலை இருந்தால் ராப் பகலாக, தொடர்ந்து இருக்கும். இல்லையேல் வருடக் கணக்கில் ஓய்வாய் இருக்கவும் நேரும். நான் அப்போது வருடக் கணக்கில் ஓய்வில் இருந்தேன். அதனால் நான் கிளம்புவதில் சிக்கல் இல்லை.

அதனால் என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தோம் மனைவியும், நானும்.

என் மகள் அன்புமதி ( அப்போது வயது 3 ) ‘ அப்பா ஊருக்கு போறோமா? தாத்தாவுக்கு என்னப்பா ‘ என்றாள்.

‘தாத்தா ரிட்டையர்ட் ஆகப் போறாங்க’ என்றேன்.

‘ அப்படின்னா ‘ என்றாள்.

விளக்கம் தெரியாமல் ஒரு வார்த்தையும் இருக்கக் கூடாது அன்புமதிக்கு.

‘ ஆபீஸ்ல வேலை செய்யிறாங்கல்ல , வயசாச்சுன்னா நல்லா வேலை செய்ய முடியாதில்ல, அதனால நீங்க வேலை செஞ்சது போதும் ரெஸ்ட் எடுத்துக்கங்க, இனிமே வேலைக்கு வர வேண்டான்னு சொல்லீருவாங்க அது தான் ரிட்டையர்ட்’ என்று என்னாலான விளக்கத்தைச் சொன்னேன்.

சொல்லி ஒரு நொடியில் அன்புமதி கேட்டாள் ‘ அப்பா நீங்க சின்ன வயசிலயே ரிட்டையர்ட் ஆகீட்டீங்களா?’

சிரிப்பு தாங்க முடியவில்லை. அதே நேரத்தில் சின்னதான ஒரு வலியும் எழுந்தது மின்னலென.

என் தொழில் பற்றி சரியாக விளங்க வைக்கத் தவறி விட்டதை உணர்ந்தேன்.

தனது சந்தேகத்தை எவ்வளவு அழகாக வெளிப் படுத்திவிட்டாள் அன்புமதி.

ஒரு உதவி இயக்குனரின் ஓய்வு என்பது மற்ற ஓய்வுகள் போலில்லை .அவன் படிகிற புத்தகங்கள், பார்க்கிற திரைப்படங்கள், யோசிகின்ற கதைகள், காட்சிகள், மற்றும் நண்பர்களிடம் ஈடுபடுகின்ற விவாதங்கள் எல்லாமும் முக்கியமான வேலைகள் தான். இவையெல்லாம் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற காரணிகள்.

ஆனால் சம்பாத்தியம் கிடைக்காத , அலுவலகம் கிளம்பிப் போகாத இவைகளை வேலையென்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

நல்ல கதைக்கான கரு கிடைத்த திருப்தியில் மாலை டீ சாப்பிடக் கிளம்பும் உதவி இயக்குனரை பக்கத்து விட்டுக்காரர் ‘ என்ன சார் நல்ல தூக்கமா ‘ என்று எதிர் கொள்வது ஒன்றும் புதிதில்லை.

எல்லாம் சொன்னேன் அன்புமதிக்கு.

இப்போது யாராவது கேட்டால் ‘ அப்பா கதை எழுதீட்டு இருக்கிறார்’ என்று சொல்கிறாள் அன்புமதி.

மரணத்தின் அறிமுகம்

நானும் எனது மகள் அன்புமதியும் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தோம். எதிரே பட்டாசு வெடிப்பு காது கிழிக்க, தாரை, தப்பட்டைகள் முழங்க, குத்தாட்டத்துடன் ஒரு சவ ஊர்வலம் நடு ரோட்டில் வந்தது. கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது.

நானென்ன புத்தனின் தந்தையா? கல்யாணமாகி குழந்தைப் பிறக்கும் வரை மரணத்தைக் கண்ணில் காட்டாமல் பிள்ளை வளர்ப்பதற்கு. அன்புமதிக்கு அப்போது 4 வயசு. புதிய விசயத்தை அறிந்து கொள்ளும் குழந்தையின் இயல்பான ஆர்வத்தோடு எல்லாவற்றையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வயதான மனிதரின் சவம். மாலை அலங்காரத்துடன் பாடையில் பயணித்துக் கொண்டிருந்தது.

கூட்டம் கடந்ததும் வண்டியைக் கிளம்பினேன். முன்னால் அமர்ந்திருந்த அன்புமதி திரும்பிப் பார்த்து
‘ஏம்பா அந்த தாத்தாவை அப்படி தூக்கீட்டு போறாங்க?’ என்றாள்.

‘அவரு இறந்து போயிட்டாரு’ என்றேன்.

‘இறந்து போறதுன்னா’ உடனே அடுத்த வினா. எப்படிச் சொல்லி விளங்க வைப்பது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன்.

‘ இறந்து போயிட்டாங்கன்னா அவங்களால மூச்சு விட முடியாது. பேச முடியாது, நடக்க முடியாது, ஒன்னுமே பண்ண முடியாது. தக்காளிப் பழம் கெட்டுப் போற மாதிரி அதற்கப்புறம் தூக்கிப் போட வேண்டியது தான். ரெம்ப வயசானாலோ இல்ல ரெம்ப உடம்பு சரியில்லன்னாலோ இறந்திருவாங்க.’

இதற்கு மேல் பெரிய விளக்கங்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் நிறுத்தினேன்.

புரிந்ததா இல்லையா தெரியவில்லை அடுத்த கேள்விக்குத் தாவினாள்.

‘ இப்ப அவங்கள எங்க எடுத்திட்டு போறாங்கப்பா? ‘

‘ சுடுகாட்டுக்கு ‘

‘ அங்க போயி என்னப்பா பண்ணுவாங்க?’

‘ மண்ணு தோண்டி புதைப்பாங்க, இல்லன்னா எரிப்பாங்க’

‘ அய்யோ.. அப்ப அவங்களுக்கு வலிக்காதாப்பா ?’

‘ அதுதான் இறந்துட்டா ஒன்னுமே தெரியாதே. கடைல சிக்கன் வாங்கீட்டு வந்து வீட்டுல சமையல் பண்ணுறோம்ல கோழி கத்துதா, அதுக்கு வலிக்குதா, ஏன்னா அது ஏற்கனவே செத்துப் போச்சி. அது மாதிரி தான் .’

புரிந்திருக்கும் போல அமைதியாய் கொஞ்ச நேரம் இருந்தாள் அன்புமதி.

என்ன சிந்திப்பாளென்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

‘ அப்பா நீங்களும் செத்திருவீங்களாப்பா?’ என்றாள் வேகமாக.

‘ ஆமா பாப்பா, எல்லாரும் ஒரு நாள் செத்துத் தான் ஆகணும்.’ நானும் சாவேன் என்றதும் அன்புமதியின் முகம் சிறிது வாடியது.

‘ நீங்க செத்துட்டா அப்பாவுக்கு நான் என்ன பண்ணுறது.’ என்றாள் வருத்தமாக. அடுத்த என்னுடைய பதிலுக்காக காத்திருந்தாள் முகத்தைப் பார்தத படி.

‘ அன்புமதி பெருசானதுகப்புறம் , அப்பாவுக்கு நல்லா வயசானதுகப்புறம் தான் சாவேன் குட்டி’ என்றேன்.

ஒரு நொடிக்கும் குறைவான இடைவெளியில் சட்டென்று ‘அப்பயும் வயசானாலும் நீங்க சாகக் கூடாது சரியாப்பா’ என்று சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருந்தாள்.

நான் ஒன்றும் சொல்லாமல் நெகிழ்ந்த ஒரு முத்தத்தை அன்புமதியின் பிஞ்சுக் கன்னத்தில் கொடுத்துவிட்டு அமைதியாய் வண்டியை ஓட்டத் துவங்கினேன்.

மனசு நிறைந்திருந்தது.

பிப்ரவரி14- 98, கோவை, காதலும் வெடிகுண்டும்…

எனது காதல் கவிதைத் தொகுப்பான ‘கவிதை அல்ல காதல் ‘ நூல் வெளியீட்டு விழா காதலர் தினமான பிப்ரவரி 14ல் 98ம் வருடம் கோவையில் நடந்தது.

அண்ணன் அறிவுமதியும், அண்ணன் பழநி பாரதியும் சிறப்பு விருந்தினர்கள்.மாலை 3 மணிக்கு விழா.

இடம் ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையில் இருக்கும் திவ்வோதயா அரங்கம்.
‘விழா நேரத்திற்கு முன்பே கூட்டம் வரத் துவங்கி விட்டது. விரைவாகவே அரங்கம் நிறைந்து விட்டது.

அண்ணன் பழநிபாரதி சாய்பாபா காலனியின் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

கூட்டம் அதிகமாகி விட்டதால் அவர்களைக் காக்க வைப்பது முறையல்ல எனவே விழாவைத் துவங்கி
விடலாம் அண்ணன் வந்து இணைந்து கொள்வார் என்று முடிவெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்கள்
மேடையில் அமர வைக்கப் பட்டார்கள்.

நண்பன் மாகலிங்கத்தோடு பாடலோடு விழா துவங்கியது.

பாதிப் பாடல் பாடிக் கொண்டிருகும் போது மாபெரும் வெடிச் சத்தம், அரங்கமே கொஞ்ச நேரம்
அதிர்ந்து அடங்கியது. கூட்டம் முழுவதும் வெளியில் ஓடி வந்தது.

என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. விரும்பத் தகாத ஏதோ நடந்து விட்டது என்பதை மட்டும் அனைவருக்கும் புரிந்தது.

எனக்கு விழா அவ்வளவு தான் என்று தோன்றியது.

உதவி இயக்குனரான நான் என் சக்திக்கு மீறி உறவினர்கள், நண்பர்களிடம் பிய்த்துப் பிடிங்கி பணம்
தயார் செய்து செலவழித்திருந்தேன்.விழா நின்று போய்விட்டால் இன்னொரு முறை நடத்துவதென்பது சத்தியமாய் சாத்தியமில்லை.

குழுக்கள் குழுக்களாக கூடி நின்று அனைவரும் பேசி சலசலத்த படி இருந்தார்கள்.

அண்ணன் ஓசைக் காளிதாசனும்,அண்ணன் கவிஞர் அவை நாயகனும் குழப்பத்தில் நின்று
கொண்டிருந்தவனை உலுக்கி உலகிற்கு கொண்டு வந்தார்கள்.

‘போய் மேடைல உட்காருங்க ஆனது ஆகட்டும் நிகழ்சியை நடத்துவோம்’ என்றார்கள்.

மீண்டும் அண்ணன் அறிவுமதி மேடையில் வந்து அமர்ந்தார் விழாத் துவங்கியது.

கொஞ்ச நேரத்திற்கொரு முறை பெரும் வேட்டுச் சப்தங்கள் கேட்ட படி தான் இருந்தது.

பழநி பாரதி அண்ணன் வரவில்லை. எங்கு இருக்கிறார் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை.

கொஞ்சம் பேர் பீதியில் கிளம்பி விட்டாலும் அரங்கம் நிறைந்திருக்க விழா நடந்தது.

பாதியில் பழநி பாரதி வந்து விட்டார்.

அவர் வந்த பிறகு தான் வெளியே வெடித்துக் கொண்டிருப்பவைகள் குண்டுகள் என்பதை அறிந்தோம்.

மேடையிலேயே வெளியில் குண்டு வெடிப்பதைப் பற்றி அறிவித்தும் அனைவரும் விழாவில் பங்கு
கொண்டது ஆச்சரியமாய் தான் இருக்கிறது இன்றும்.

பழநி பாரதி பேசும் போது ‘ காதலைப் பற்றிப் பேசுவது மதத்திற்கு எதிராகப் பேசுவது, சாதிகளுக்கு
எதிராகப் பேசுவது, அதற்கு உதாரணமாகத் தான் வெளியே யாரோ யாரையோ அழிக்க ஆயுதங்கள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பொன் சுதா நாம் பேசுவதற்காக பூக்களை வழங்கி கொண்டிருக்கிறார்’ என்று பேசினார்.’

விழா சிறப்பாய் பயத்தோடும் பதட்டத்தோடும் நிறைவடைந்தது.

விழா முடிந்ததும் தான் தெரிய வந்தது எங்கேயும் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை என்பது.

இரு சக்கர வாகனங்களில் ஒவ்வொருவராய் சென்று நண்பர்கள் விட்டு வந்தார்கள்.

பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த நண்பர் காந்தி, லதா அக்கா, நண்பன் மீன்ஸ், அம்சப்ரியா, மற்றும்

இன்னும் சிலர், சென்னயிலிருந்து, திருப்பூரிலிருந்து வந்திருந்த நண்பர்கள் அனைவரும் அரங்கிலேயே
தங்க வைக்கப் பட்டார்கள். விழா முடிந்தும் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்படியாக அந்த விழா அதில் பங்கு கொண்ட யாவருக்கும் மறக்க முடியாத திகிலான நாளாக அமைந்து விட்டது.

திகில் நிமிடங்கள்:

1. விழாவிற்கு முந்தைய நாள் இரவிலும், அதற்கு முந்திய நாள் இரவிலும் கோவை முழுக்க நானும்
நண்பன் மீனாட்சி சுந்தரமும், திலகேஸ்வரனும் போஸ்டர் ஓட்டினோம் அப்போது தானே அவர்கள்
குண்டுகள் வைத்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

2. சிறப்பு விருந்தினர்களுக்கு ரோஜாக்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆர் எஸ் புரத்திற்கு
நானும் என் தம்பி பிரசாத்தும் அத்வானி பங்கு கொள்ளும் விழாவின் மேடயைக் கடந்து போய் அதன்
வழியாகவே திரும்பினோம். அதன் பிறகு அரை மணி நேரத்தில் முதல் குண்டு அங்கு வெடித்தது.

எனக்கு எப்போ கல்யாணம்

“அப்பா எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பீங்க” கேட்டது என் மகள் அன்புமதி.

ஒரு நொடி அதிர்ச்சியும் உடனே சிரிப்பும் தான் வந்தது. இதில் என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்குது என்கிறீர்களா?

என் மகளுக்கு 5 வயது.

பள்ளிக் கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய் அந்தக் கேள்வியை கேட்டு விட்டு பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள் அன்புமதி.

இது இடைவிடாது கேள்விகள் கிளைவிடும் காலம் என்பதை அறிந்திருந்ததால் அன்புமதியை புரிந்து கொள்ள முடிந்தது.

பொதுவாக குழந்தைகள் தனக்குப் புதிராய்த் தோன்றும உலகத்தை, உலகத்தின் நடைமுறையை,பழக்க வழக்கங்களை கேள்விகள் மூலமே புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

தனக்கு வழிகாட்டியாய் இதைச் செய், இதைச் செய்யாதே என்று தீர்மானிக்கும் ஆட்களையோ, தனக்கான கேள்விகளுக்கு காது கொடுக்கும் நபர்களையோ விடை சொல்லிகளாகத் தேர்ந்தெடுகிறார்கள்.

அதற்கான பதிலில் இருக்கும் உண்மையும், கேலியும், பொய்யும் குழந்தையின் அறிவுவளர்ச்சியை, படைப்புத் திறனை தீர்மானிக்கின்றன என்பதனை நானறிவேன்.

ஆகவே ‘ நீ பெருசா ஆனதுகப்புறம் கல்யாணம் பண்ணுவோம்’ என்று பொறுப்பாய் பதில் சொன்னேன்.

‘எதுக்குப் பாப்பா’ என்று நான் கேட்டேன் எதற்காக அப்படிக் கேட்டாள் என்பதை புரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.

‘ இல்லப்பா எனக்கு கல்யாணம் பண்ணும் போது தண்ணியடிக்காத, தம்மடிக்காத, பையனாப் பாத்துக் கல்யாணம் பண்ணி வையுங்க ‘ என்றாள்.

சிரிப்பு வெடித்துக் கிளப்பியதை அடக்கிக் கொண்டேன்.

அவளுக்கு முக்கியமாய் தோன்றும் ஒரு விசயத்தை கேலியின் மூலம் அவமதிப்பது சரியில்லை என்பதால் சிரிக்கவில்லை.

‘சரிடா செல்லம்’ என்றேன்.

உடை மாற்றப் பக்கத்து அறைக்கு அன்புமதி போனதும் மனம் விட்டுச் சிரித்துக் கொண்டேன்.

பிற்காலத்தில் அன்புமதிக்கான துணையை நான் பார்க்கப் போகிறேனோ? அவளே கூட்டி வந்து அறிமுகப் படுத்தப் போகிறாளோ?

ஆனாலும் இதற்கான கருத்தை, கேள்வியை , எங்கிருந்து பெற்றிருப்பாள்.

பெரியவர்களின் பேச்சிலிருந்தா? தொலைக் காட்சியிலிருந்தா? திரைப் படத்திலிருந்தா? இல்லை குடிகாரனொருவனை தந்தையாய் அடைந்த பள்ளித் தோழியிடமிருந்தா?

கேள்விகள் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன…

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்