கரைக்குத் தள்ளுகிறது அலைகள்
நகர மறுக்கிறது
நடுக்குளத்தில் நிலா.
கரைக்குத் தள்ளுகிறது அலைகள்
நகர மறுக்கிறது
நடுக்குளத்தில் நிலா.
திசை தெரியா பயணம்
இறகின்றி பறக்கின்றன
இலையுதிர்கால சருகுகள்…
சீக்கிரம் தேர்ந்தெடு
இருப்பதில் சிறந்ததை
எல்லாம் போலிகள்
சிறைப் பிடித்த மின்மினி
தப்பிப் பறக்கிறது
மீண்டும் இருள்..
பொரி அள்ளிப் போட்டேன்
பசியில் குளத்துமீன்கள்
தயாராய் தூண்டில்.
துப்பாக்கி சுமந்து
வேட்டைக்கு கிளம்புகின்றன
விலங்குகள்…
வரைந்தவன் பெயரில்லை
அழகழகான ஓவியங்கள்
வானிலும் மண்ணிலும் …
பசியில் கதறும் குஞ்சுகள்
உணவோடு தவிக்கும் தாய்பறவை
விரட்டும் தீபாவளி வெடிச்சப்தம்.
மொட்டைமாடிச் சிறுமி
லயித்த விளையாட்டு
உருமாறும் மேகம்…
ஆற்றுநீரை உரசிப்
பறக்கும் கொக்கு
ரசிக்கிறதா தன்னழகை.