அப்பா ரிட்டையர்ட் ஆவதற்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்.
ஓய்வு பெறும் போது அலுவலகத்தில் நடக்கும் பிரிவு உபச்சார விழாவில் நான், தம்பி, அக்கா அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பப் பட்டார். ஓய்வு பெற்றாலும் பெற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்கு என்று ஆறுதல் கொள்ளவாக இருக்கும்.
மனைவிக்கு விடுமுறை எடுப்பதில் தான் பிரச்சனை. அந்தக் கம்பெனியில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது. எனவே விடுமுறை கேட்பதில் தயக்கம்.
எனக்கு அந்தப் பிரச்சனை கிடையாது. நான் திரைபட உதவி இயக்குனன். எங்கள் துறையில் வேலை இருந்தால் ராப் பகலாக, தொடர்ந்து இருக்கும். இல்லையேல் வருடக் கணக்கில் ஓய்வாய் இருக்கவும் நேரும். நான் அப்போது வருடக் கணக்கில் ஓய்வில் இருந்தேன். அதனால் நான் கிளம்புவதில் சிக்கல் இல்லை.
அதனால் என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தோம் மனைவியும், நானும்.
என் மகள் அன்புமதி ( அப்போது வயது 3 ) ‘ அப்பா ஊருக்கு போறோமா? தாத்தாவுக்கு என்னப்பா ‘ என்றாள்.
‘தாத்தா ரிட்டையர்ட் ஆகப் போறாங்க’ என்றேன்.
‘ அப்படின்னா ‘ என்றாள்.
விளக்கம் தெரியாமல் ஒரு வார்த்தையும் இருக்கக் கூடாது அன்புமதிக்கு.
‘ ஆபீஸ்ல வேலை செய்யிறாங்கல்ல , வயசாச்சுன்னா நல்லா வேலை செய்ய முடியாதில்ல, அதனால நீங்க வேலை செஞ்சது போதும் ரெஸ்ட் எடுத்துக்கங்க, இனிமே வேலைக்கு வர வேண்டான்னு சொல்லீருவாங்க அது தான் ரிட்டையர்ட்’ என்று என்னாலான விளக்கத்தைச் சொன்னேன்.
சொல்லி ஒரு நொடியில் அன்புமதி கேட்டாள் ‘ அப்பா நீங்க சின்ன வயசிலயே ரிட்டையர்ட் ஆகீட்டீங்களா?’
சிரிப்பு தாங்க முடியவில்லை. அதே நேரத்தில் சின்னதான ஒரு வலியும் எழுந்தது மின்னலென.
என் தொழில் பற்றி சரியாக விளங்க வைக்கத் தவறி விட்டதை உணர்ந்தேன்.
தனது சந்தேகத்தை எவ்வளவு அழகாக வெளிப் படுத்திவிட்டாள் அன்புமதி.
ஒரு உதவி இயக்குனரின் ஓய்வு என்பது மற்ற ஓய்வுகள் போலில்லை .அவன் படிகிற புத்தகங்கள், பார்க்கிற திரைப்படங்கள், யோசிகின்ற கதைகள், காட்சிகள், மற்றும் நண்பர்களிடம் ஈடுபடுகின்ற விவாதங்கள் எல்லாமும் முக்கியமான வேலைகள் தான். இவையெல்லாம் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற காரணிகள்.
ஆனால் சம்பாத்தியம் கிடைக்காத , அலுவலகம் கிளம்பிப் போகாத இவைகளை வேலையென்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
நல்ல கதைக்கான கரு கிடைத்த திருப்தியில் மாலை டீ சாப்பிடக் கிளம்பும் உதவி இயக்குனரை பக்கத்து விட்டுக்காரர் ‘ என்ன சார் நல்ல தூக்கமா ‘ என்று எதிர் கொள்வது ஒன்றும் புதிதில்லை.
எல்லாம் சொன்னேன் அன்புமதிக்கு.
இப்போது யாராவது கேட்டால் ‘ அப்பா கதை எழுதீட்டு இருக்கிறார்’ என்று சொல்கிறாள் அன்புமதி.