நானும் எனது மகள் அன்புமதியும் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தோம். எதிரே பட்டாசு வெடிப்பு காது கிழிக்க, தாரை, தப்பட்டைகள் முழங்க, குத்தாட்டத்துடன் ஒரு சவ ஊர்வலம் நடு ரோட்டில் வந்தது. கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது.
நானென்ன புத்தனின் தந்தையா? கல்யாணமாகி குழந்தைப் பிறக்கும் வரை மரணத்தைக் கண்ணில் காட்டாமல் பிள்ளை வளர்ப்பதற்கு. அன்புமதிக்கு அப்போது 4 வயசு. புதிய விசயத்தை அறிந்து கொள்ளும் குழந்தையின் இயல்பான ஆர்வத்தோடு எல்லாவற்றையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வயதான மனிதரின் சவம். மாலை அலங்காரத்துடன் பாடையில் பயணித்துக் கொண்டிருந்தது.
கூட்டம் கடந்ததும் வண்டியைக் கிளம்பினேன். முன்னால் அமர்ந்திருந்த அன்புமதி திரும்பிப் பார்த்து
‘ஏம்பா அந்த தாத்தாவை அப்படி தூக்கீட்டு போறாங்க?’ என்றாள்.
‘அவரு இறந்து போயிட்டாரு’ என்றேன்.
‘இறந்து போறதுன்னா’ உடனே அடுத்த வினா. எப்படிச் சொல்லி விளங்க வைப்பது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன்.
‘ இறந்து போயிட்டாங்கன்னா அவங்களால மூச்சு விட முடியாது. பேச முடியாது, நடக்க முடியாது, ஒன்னுமே பண்ண முடியாது. தக்காளிப் பழம் கெட்டுப் போற மாதிரி அதற்கப்புறம் தூக்கிப் போட வேண்டியது தான். ரெம்ப வயசானாலோ இல்ல ரெம்ப உடம்பு சரியில்லன்னாலோ இறந்திருவாங்க.’
இதற்கு மேல் பெரிய விளக்கங்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் நிறுத்தினேன்.
புரிந்ததா இல்லையா தெரியவில்லை அடுத்த கேள்விக்குத் தாவினாள்.
‘ இப்ப அவங்கள எங்க எடுத்திட்டு போறாங்கப்பா? ‘
‘ சுடுகாட்டுக்கு ‘
‘ அங்க போயி என்னப்பா பண்ணுவாங்க?’
‘ மண்ணு தோண்டி புதைப்பாங்க, இல்லன்னா எரிப்பாங்க’
‘ அய்யோ.. அப்ப அவங்களுக்கு வலிக்காதாப்பா ?’
‘ அதுதான் இறந்துட்டா ஒன்னுமே தெரியாதே. கடைல சிக்கன் வாங்கீட்டு வந்து வீட்டுல சமையல் பண்ணுறோம்ல கோழி கத்துதா, அதுக்கு வலிக்குதா, ஏன்னா அது ஏற்கனவே செத்துப் போச்சி. அது மாதிரி தான் .’
புரிந்திருக்கும் போல அமைதியாய் கொஞ்ச நேரம் இருந்தாள் அன்புமதி.
என்ன சிந்திப்பாளென்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
‘ அப்பா நீங்களும் செத்திருவீங்களாப்பா?’ என்றாள் வேகமாக.
‘ ஆமா பாப்பா, எல்லாரும் ஒரு நாள் செத்துத் தான் ஆகணும்.’ நானும் சாவேன் என்றதும் அன்புமதியின் முகம் சிறிது வாடியது.
‘ நீங்க செத்துட்டா அப்பாவுக்கு நான் என்ன பண்ணுறது.’ என்றாள் வருத்தமாக. அடுத்த என்னுடைய பதிலுக்காக காத்திருந்தாள் முகத்தைப் பார்தத படி.
‘ அன்புமதி பெருசானதுகப்புறம் , அப்பாவுக்கு நல்லா வயசானதுகப்புறம் தான் சாவேன் குட்டி’ என்றேன்.
ஒரு நொடிக்கும் குறைவான இடைவெளியில் சட்டென்று ‘அப்பயும் வயசானாலும் நீங்க சாகக் கூடாது சரியாப்பா’ என்று சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருந்தாள்.
நான் ஒன்றும் சொல்லாமல் நெகிழ்ந்த ஒரு முத்தத்தை அன்புமதியின் பிஞ்சுக் கன்னத்தில் கொடுத்துவிட்டு அமைதியாய் வண்டியை ஓட்டத் துவங்கினேன்.
மனசு நிறைந்திருந்தது.