‘சிவப்பு பலூன்’ குறும் படம் – ஓர் அற்புத அனுபவம்

சிவப்பு பலூன் (The Red Balloon ) 34 நிமிடங்கள் ஓடக் கூடிய பிரஞ்ச் குறும்படம். 1956 ல் வெளியான படம். அந்த வருடத்தில் சிறந்த குறும்படத்திற்கான கேன்ஸ் அவார்ட் மற்றும் ஆஸ்கர் அவார்டையும் வென்றுள்ளது இப்படம்.

இதன் இயக்குநர் ஆல்பர்ட் லமொரீஸ் (Albert Lamorisse). லமொரீஸ் ஒளிப்பதிவாளராக இருந்து 40 வயதுக்குப் பின் குறும்படங்கள், ஆவணப்படங்களை இயக்கத் துவங்கி இருக்கிறார். ஒரு ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். சிகப்பு பலூனில் லமொரீஸின் மகனே முக்கிய கதாபாத்திராமாய் நடித்துள்ளான்.

வெளியாகி 54 வருடங்கள் கடந்த பின்பும் இன்று பார்க்கும் போதும் ஒரு புதிய உலகை திறந்து விடக் கூடிய பரவசமான, மகிழ்வான அனுபவமாய் இருக்கிறது சிவப்பு பலூன்.

அற்புதங்களுக்கும் மாயங்களுக்கும் மனித மனம் பன்னெடும் காலமாய் ஏங்கிக் கிடக்கிறது. அதன் காரணமாகத் தான் உலகெங்கும் மாயக் கதைகள் குவிந்து கிடக்கின்றன. பறக்கும் குதிரைகள், பேசும் மிருகங்கள், நினைத்ததை உடனே தரும் கற்பக மரம், பாற்கடல், இப்படி கதைகளில் மனிதன் உண்டாக்கிய கற்பனை சிருஷ்டிகள் ஏராளம்.

குழந்தைகளின் கற்பனைகள் எல்லையற்றது. எந்த எழுத்தாளனும் , கவிஞனும், கதை சொல்லியும் குழந்தைகளின் கற்பனைக்கு முன்னே தோற்றுப் போகவே நேரும். அவர்களோடு தான் பொம்மைகள் கூட பேசுகின்றன. அவர்களின் கதைகளை கேட்கின்றன, நட்பு கொள்கின்றன, உறவாடுகின்றன. வானமும், மலைகளும், நதிகளும், கடல்களும் கூட அவர்களுக்கு விளையாட்டுத் தோழர்களாகின்றன.

’சிவப்பு பலூன்’ ஒரு சிறுவனுக்கும் ஒரு சிவப்பு பலூனுக்குமான உறவைப் பற்றிய கதை.

4 அல்லது 5 வயது சிறுவன் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பெரிய சிகப்பு பலூன் விளக்குக் கம்பத்தில் கட்டி இருப்பதைப் பார்கிறான். விளக்குக் கம்பத்தில் ஏறி பலூனை எடுக்கிறான். பலூனை கைகளில் பிடித்த படி மகிழ்வோடு தெருக்களில் நடக்கிறான்.

பலூனை கைகளில் பிடித்த படியே பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறான். அவன் வழக்கமாய் பள்ளிக்குப் போகும் பேருந்து வருகின்றது. பேருந்தில் கூட்டமாய் இருக்கிறது. பலூனிடன் ஏற முயற்சிக்கும் சிறுவனை நடத்துநர் நிறுத்துகிறார். பலூனை விட்டு விட்டு ஏறச் சொல்கிறார். அவன் பலூனை இழக்க மனமில்லாமல் நிற்கிறான். பேருந்து கிளம்புகிறது. அவன் மனம் தளராமல் பலூனை கைகளில் பிடித்த படி பள்ளியை நோக்கி ஓடத் துவங்குகிறான்.

பள்ளிக்குள் சென்றதும் பலூனை என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. அங்கிருக்கும் வாயில் காப்போனிடம் மாலை வரை பத்திரமாய் வைத்திருங்கள் என்று ஒப்படைக்கிறான்.
மாலை பள்ளி முடியும் போது மழை பெய்கிறது. சிறுவன் பலூனை நனையாமல் எப்படி கொண்டு போவது என்று யோசிக்கிறான். குடையோடு போகும் ஒவ்வொருவரிடம் ஒண்டிக் கொண்டு பலூனை மட்டும் குடைக்குள் நனையாமல் வைத்து விட்டு சிறுவன் நனைக்கிறான். பல்வேறு குடைகளில் தஞ்சமடைந்த பின் வீடு சேர்கிறான்.

நிறைய வீடுகளை கொண்ட, நிறைய மாடிகளைக் கொண்ட கட்டிடம் அது. உயரத்தில் இருக்கும் அவனது வீட்டு சன்னலின் வழி அவனது தாயார் பலூனை தூக்கி எறிந்து சன்னலை சாத்துகிறாள்.
சிறிது நேரம் கழித்து சிறுவன் அறையின் சன்னலைத் திறக்கிறான் அங்கேயே காத்துக் கொண்டிருக்கிறது அவனது சிவப்பு பலூன். உயரத்தில் இருக்கும் பலூனை அவனால் பிடிக்க முடியவில்லை. கைகளை நீட்டுகிறான் பலூன் தானாய் இறங்கி அவனது கைகளுக்குள் வருகின்றது.

மறுநாள் காலை பள்ளி கிளம்பும் போது பலூனிடம் ஏதோ சொல்லி சன்னலில் வெளியே விடுகிறான் சிறுவன். அவன் பல மாடிகள் இறங்கி வந்து சேரும் போது அவனிடம் வருகிறது பலூன். அவன் போகும் வழியெல்லாம் அவனுடனேயே போகின்றது. வழியெல்லாம் பலூனுடன் விளையாடி படியே போகிறான். பலூனும் அவனுடன் விளையாடுகிறது.

பேருந்து நிறுத்தில் பலூனுடன் நிற்கிறான். பேருந்து வருகின்றது. அவன் பலூனை பறக்க விட்டு பேருந்தில் ஏறுகிறான். பலூன் பேருந்தை பின் தொடர்கிறது செல்கிறது.

பள்ளிக்குள் செல்லும் முன் அவன் பலூனை வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டுப் போகிறான். சிறிது நேரத்திற்குப் பிறகு பலூன் பள்ளியின் சுவரைக் கடந்து உள்ளே வருகின்றது. அதைப் பார்த்து பல சிறுவர்கள் பிடிக்க ஓடுகின்றனர் ஆனால் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் பலூன் தப்பிக்கின்றது. சிறுவனைத் தேடி அவனின் வகுப்பறைக்குள்ளேயே நுழைந்து விடுகின்றது. மாணவர்களும், ஆசிரியர்களும் அதைப் பிடிக்க முயற்சி செய்ய யாருக்கும் மாட்டாமல் தப்பிக்கின்றது சிவப்பு பலூன்.

பலூனுக்கும் அவனுக்குமான சிநேகம் சில பெரிய மாணவர்களின் கண்களை உறுத்துகின்றது. அவனிடமிருந்து பலூனைக் கைப்பற்ற முயற்சி செய்து ஒரு முறை துரத்துகிறார்கள். பலூனும் சிறுவனும் தப்பிக்கின்றார்கள்.

ஒரு முறை கடையில் ஏதோ பொருள் வாங்க நுழையும் சிறுவன் பலூனை வெளியே விட்டுச் செல்கிறான். காத்திருக்கும் பலூனை, முன்பு பிடிக்க முயற்சித்து தோற்றுப் போன சிறுவர்கள் மறைந்திருந்து கைப் பற்றுகிறார்கள்.

கடைக்குள்ளிருந்து திரும்பும் சிறுவன் பலூனை காணாமல் தேடுகிறான். பலூனைத் திருடியவர்கள் பலூனை ஒரு இடத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து உடைக்க முயற்சிக்கிறார்கள். சிறுவன் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறான். பலூனைக் காப்பாற்ற போராடுகிறான். ஒருவனின் கல் பட்டு பலூனில் இருந்து காற்று வெளியேறத் துவங்குகின்றது. பலூனை கீழே பிடித்து இழுத்து மிதித்து உடைக்கிறான் ஒருவன். பலூன் வெறும் ரப்பர் துண்டாய் கீழே விழுகின்றது. சிறுவனும் பலூனும் மட்டும் தனித்திருக்க அவைவரும் ஓடி விடுகின்றனர். சிறுவன் பலூனைப் பார்த்து கண் கலங்கத் துவங்குகிறான்.

மீதியை வெண்திரையில் அல்லது டிவீடியில் காண்க என்று சொல்லலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு கிட்டாதவர்களுக்காக முழுவதும் சொல்வது தானே நியாயம்.

பிறகு தான் நிகழ்கிறது அற்புதம். ஊரில் சில சிறுவர்கள் கையில் வைத்திருந்த பலூன்கள் எல்லாம் அவர்களின் கைகளை விட்டுத் தானாய் பறக்கத் துவங்குகின்றன. ஒரு பலூன் விற்பனையாளனின் கைகளிலிருந்த பலூன்கள் பறக்கத் துவங்குகின்றன. இப்படி ஊரில் உள்ள பலூன்கள் எல்லாம் ஒன்று கூடி அணி வகுப்பு நடத்துகின்றன. பல்வேறு இடங்களைக் கடந்து அத்தனை பலூன்களும் சிவப்பு பலூனை இழந்து அழும் சிறுவனின் முன்னால் இறங்குகின்றன. அத்தனை பலூன்களையும் ஆச்சரியத்தோடு பார்க்கிறான். அந்த பலூன்களைப் பிணைத்திருக்கும் கயிறுகளையும் ஒன்றாக்கிப் பிடிக்கிறான். அத்தனை பலூன்களும் அவனைத் தூக்கிக் கொண்டு ஃபேரசூட் மாதிரி வானில் பறக்கின்றன. அவன் மகிழ்வோடு பறந்து உயரே உயரே போகிறான்.

இடையில் ஒரு காட்சியில் சிறுவன் பலூனோடு நடக்கும் போது ஒரு சிறுமி நீல பலூனோடு கடந்து போகிறாள். உடனே சிவப்பு பலூன் சிறுவனிடமிருந்து நீல பலூனைப் பின் தொடர்ந்து செல்கிறது. சிறுவன் போய் பிடித்து வந்து நடக்கத் துவங்கும் போது நீல பலூன் சிறுமியை விட்டு சிறுவனோடு வருகின்றது. சிறுமி ஓடி வந்து நீல பலூனை பிடித்துப் போகிறாள்.

ஒவ்வொரு மனிதனின் ஆசைகளும் கனவுகளும் வெவ்வேறு நிறமான பலூன்களாய் அவனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அழகான கதையும். இயல்பான நம்பகத் தன்மையுடன் கூடிய படமாக்கலும், ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பாராத நிகழ்வுகளின் வியப்பும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாத புதுமையாய் அழியாத அற்புதமாய் என்றென்றும் ’சிவப்பு பலூனை’ வாழ வைக்கும்.

8 பின்னூட்டங்கள்

  1. 1. சிகப்பு பலூன் படத்தை பற்றிய அற்புதமான அறிமுகத்தை கொடுத்துள்ளீர்கள். உண்மையாகவே தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருப்பதை போலவே மிக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள், சந்தோசம், நன்றி.

    2. தங்களின் கவிதை தொகுப்புகள் டிஸ்கவரி புக் பேலஸில் கிடக்கிறது என்பதையும் குறித்து வைக்கவும்

  2. Superb review. Already i watched and read a lot about this movie but the way you presented makes me watch once again…Good writing…keep it up

  3. அற்புதமான பகிர்வுக்கு நன்றி.

    ஒரு சிறிய கோரிக்கை. உங்கள் தளத்தின் தலைப்பகுதியில் இடம்பெற்றுள்ள புகைப்படம், மிகச் சிறப்பான தேர்வு என்பதில் ஐயமில்லை. ஏதேனும் ஓர் இடத்தில் அப்படத்தைப் பயன்படுத்தினால் ரசிக்கத்தக்கது. ஆனால், தலைப்பகுதியில் நிரந்தமாக இடம்பெற்றிருப்பது, ஏனோ எனக்கு ஒருவித இனம்புரியாத நெருடலைத் தருகிறது.

    இந்தக் கோரிக்கை உங்களால் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல.

    நன்றி.

    • நன்றிகள் சிரவணன். உங்களது ஆலோசனையை விரைவில் நிறைவேற்றுகிறேன்.

  4. நேற்று இந்தப் படம் பார்த்தேன்..

    மிக நேர்த்தியான விமர்சனம்

    நன்றி


Comments RSS TrackBack Identifier URI

பின்னூட்டமொன்றை இடுக

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்