முள்ளி மந்தின் பாரம்பரிய தோடர் குடில்கள்

முள்ளி மந்தின் பாரம்பரிய தோடர் குடில்களைப் பார்க்க வாய்த்தது. பிரம்பு, கம்புகள், பலகைகள் மற்றும் மண்ணால் எழுப்பப் பட்ட குடிசைகள். அவர்களுக்கே ஆன தொழிற் நுட்பமும் தனித்துவ அழகியலையும் கொண்டிருந்தது அது. நமது கிராமத்து குடிசைகள் போலில்லாது வானவில்லின் அரை வட்டதிலான கூரை அமைப்பு.

இதைக் கட்டி 80 வருடங்கள் கடந்து விட்டது என்று சொன்னார்கள். ஒன்றரை அடிலிருந்து இரண்டு அடிக்குள் தான் இருக்கும் நுழைவாயில். பெரும் பணிவு வாய்த்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். இயல்பாக அவர்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள். முடியுமா என்று கேள்வி இருந்தாலும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலில் கிட்டத் தட்ட படுக்கை நிலையில் உள்ளே நுழைந்தேன்.

இடது வசத்தில் கல்லிலும் மண்ணிலும் எழுப்பப் பட்ட ஒரு மேடு அது தான் அவர்களது கட்டில் மற்றும் படுக்கும் இடம். மிச்சமிருந்த மிகச் சிறிய இடத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி பாத்திரங்கள் மற்றும் பொருட்களை அடுக்கி வைத்திருந்தார்கள். கீழே இருவர் படுக்கலாம். நான்கு பேர் அமரலாம். பழங்குடி வாழ்வின் எளிய வாழ்வின் காட்சியாக இருந்தது அந்தக் குடில்.

அந்த வீட்டில் இருந்த பெண் கைகுழந்தையுடன் இருந்தார். எழாவது படிக்கிற மகள் அவருடன் இருந்தாள். இன்னொரு மகளை கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள். கல்யாணமான பெண்ணின் புகைப்படம் மட்டுமே அங்கிருந்த நாகரீகப் பொருள்.

மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள் ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

இந்த இரண்டு குடில்கள் தவிர மற்றவை சிமெண்ட் கட்டிடங்கள். அவைகளும் ஒரு அறை இரண்டு அறைகள் கொண்டவை தான். ஒரேஒரு வீடு மட்டும் கட்டில் டைனிங் டேபிளுடன் இருந்தது.

இதே பாரம்பரிய குடிலில் அமைப்பில் எருமை உருவம் வரையப் பெற்ற மற்றோரு புகைப்படம் இருக்கிறதே, அது தான் அவர்களின் கோவில். என்ன கடவுளை வணங்குகிறார்கள் என்று கேட்டால் பஞ்ச பாண்டவர்கள் என்கிறார்கள்.

அங்கிருக்கும் குழந்தைகள் அனைவரும் படிக்கிறார்கள் வேறு ஊர்களில் இருக்கும் பள்ளிகளில்.

மூத்தவர்கள் இறக்கும் போது கேட்டுக் கொண்டால் அவர் இறப்பை எருமை பலிகொடுத்து கொண்டாடுவார்கள் என்று சொன்னார்கள்.

அவர்களின் கலாச்சார உடையில் உள்ள போர்வையின் வடிவங்களை அவர்களே செய்கிறார்கள் ( எம்பிராய்டரி )

அந்தப் புகைப்படத்தில் நான் கையில் வைத்திருப்பது அவர்களது மோர் கடையும் சாதனம். மூங்கிலில் செய்யப் பட்டது அது.

தாயின் கர்ப்ப வயிற்றுக்குள் மீண்டும் போய் திரும்பிய அனுபவமாக இதை சொல்லலாம். இங்கிருந்து தானே அனைவரும் துவங்கினோம்.

எல்லா வசதிகளையும் தூய்த்து களித்து உலகை குப்பை மேடாக்கி விட்டு உலகம் மக்கள் மொத்தமும் பழங்குடியினரின் எளிமை நோக்கி திரும்கிற காலம் ஒன்று வரும் என்று தோன்றுகிறது.

கண்ணாடிக் கத்திகள்

சும்மா போகும்

திருடர்களின் கால்களை

சவால் விட்டு

அழைக்கின்றன

 

அறைகளில்

பாதுக்காக்கப் படுகின்ற

பொக்கிஷங்களைப் பற்றி

தண்டோரா அறிவிக்கின்றன  

 

கட்டிடப் பொருட்களோடு

சரிவிகிதமாய் 

அச்சமும் கலந்து

வீடு எழும்பியதையும்

 

பறந்தொய்ந்து சிறுபறவையும்

இளைப்பாற 

இடம் தர விரும்பாத

குரூரர்களின்

இருப்பிடமென்பதையும்

உறுதி செய்கின்றன ..

 

.படம்

 

கூரிய கத்திகளாய்

உடைந்த சீசாக்களைப்

பதித்து வைத்திருக்கும்

சுற்றுச் சுவர்கள்.

 

 

ஹைக்கூத் தோட்டம் 60

சிதறி விழுந்த மலர்கள்
நசுக்கி விரையும் வாகனங்கள்
விபத்தில் இறந்தவனின் இறுதிஊர்வலம்.

ஹைக்கூத் தோட்டம் – 59


அகால அலைபேசி அழைப்பு
அதிர்ந்து மீளும் மனசு
இறந்த நண்பனின் எண்.

இறந்தவன்

அது அவனாக இருக்கவே முடியாது என்பதையும் மீறி, வேகமாய் என்னைக் கடந்து போன நகரப் பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு போனவன் அவனோ என்று தோன்றியது எனக்கு. அந்தச் சுருட்டை முடி, ஒல்லியான உடல் வாகு, ஆடை அணிந்திருந்த விதம் எல்லாம் அவனைப் போலவே இருந்தது. முகம் சரியாய்த் தெரியவில்லை. பேருந்து தூரமாய்ச் செல்லும் வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அது அவன் இல்லை என்று எனக்கு உறுதியாய் தெரியும். ஏனென்றால் அவன் இறந்து போய் ஐந்து வருடங்களாகி விட்டது. அச்சு அசலாய் அவனையே போன்ற சாயல் கொண்ட ஒருவன் நினைவில் ஆழத்தில் புதைந்திருந்த ரெங்கநாதனை மேலெழுப்பி விட்டான்.

குடித்துக் கொண்டிருந்த தேநீருக்கான காசைக் கொடுத்து விட்டுக் கிளம்பினேன். ரெங்கநாதனின் நினைவாகவே இருந்தது.

சென்னைக்கு வந்த புதிதில் அறிமுகமான நண்பர்களில் ஒருவன் ரெங்கநாதன். அவனும் என்னைப் போன்றே திரைப் படத்துறையில் இயக்குநராக வேண்டும் என்ற லட்சிய வெறியோடு வந்து, உதவி இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருந்தான்.

உதவி இயக்குநர்களுக்கு வீடு கிடைக்காது, சம்பளம் கிடைக்காது, உணவு கிடைக்காது, வாய்ப்பு கிடைக்காது. ஆனால் தனது மனதை வெளிப்படுத்தி நிகழ் காலத் துன்பங்களை, வருங்காலக் கனவுகளை, தான் படித்த புத்தகங்களை, பார்த்த படங்களை, பாதித்த சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ள நண்பர்கள் கிடைக்கா விட்டால் அவனால் ஒரு கணமும் ஜீவித்திருக்க முடியாது.

அப்படி, பறவைகளுக்கு வேடந்தாங்கல் போல எங்களைப் போன்றவர்களுக்கு அமைந்த புகலிடம் தான் மகாத்மாவின் அறை. மகாத்மா ஓரிரு திரைப்படங்களில் உதவிஇயக்குநராக வேலை பார்த்து முடித்து விட்டு இயக்குநராவதற்காகக் கதை தயாரித்துக் கொண்டிருந்தார். அவரோடு எங்கள் உதவி இயக்குநர் இனமான குமாரும் அறையை பகிர்ந்து கொண்டிருந்தார். மொத்தம் ஐந்து வீடுகள் கொண்ட ஒரு லைன் வீட்டில் நாலாவது வீடு அது. மற்ற நான்கு வீடுகளிலும் குடும்பஸ்தர்கள் இருந்தார்கள். முதலில் அறை எடுத்த போது பக்கத்து வீடுகளில் பிரம்மச்சாரிகள் குடும்பங்களுக்கு மத்தியில் ஊடுருவியது குறித்து அதிருப்தியோடு முகம் சுழித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சிரிக்கச் சிரிக்கப் பேசும் நகைச்சுவை உணர்வு, பெரும் பக்தி, இன்ன பிற நல்ல குணங்களால் மகாத்மா எல்லோரின் மனங்களையும் மாற்றிக் காட்டினார். குமாரும் மகாத்மாவுக்கு நல்ல குணத்தில் சளைத்தவரல்ல.

இப்போது பக்கத்து வீடுகளில் ரேசன் கார்டில் பெயர் போடா விட்டாலும் அவர்களும் ஓர் அங்கம் தான். அவர்கள் அறையில் பிரம்மச்சாரிகளின் சமையலான சோறும், தக்காளித் தொக்கும் வைத்து சாப்பிட உட்காரும் போது சரியாய் பக்கத்து வீடுகளிலிருந்து சாம்பார், ரசம் , பொறியல் என்று வரிசை கட்டி வந்து சேரும். அப்படி ஒரு புரிந்துணர்வு அபூர்வம்.

அந்த அறை எப்போதும் நண்பர்களால் நிறைந்திருக்கும். ஒருவர் போக ஒருவர் வந்து எப்போதும் ஹவுஸ் புல்லாகவே இருக்கும். பக்கத்து சேட்டன் கடையில் மகாத்மா கணக்கு வைத்திருக்கும் தைரியத்தில் எல்லோரும் டீ குடிப்போம்.

அங்கு அறிமுகமானவன் தான் ரெங்கநாதன். அப்போது அறையில் கூட்டம் இல்லை. நானும் மாகாத்மாவும், குமாரும் மட்டும் தான் இருந்தோம். எதையோ தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் போது கதவு டமாலெனத் திறந்தது. ஏனோ தானோ என்று சட்டையும் அதற்குப் பொருந்தாத நிறத்தில் அழுக்கு ஜீன்சுமாக, அடர்ந்த தாடியும், மெலிந்த உருவமுமாக ரெங்கநாதன் உள் நுழைந்தான்.

‘ தட்டாமல் டமால்னு கதவு தெறக்கும் போதே நீங்க தான்னு நினைச்சேன்’ என்றார் குமார்.

அதைப் பாராட்டு போல சிரித்த படி கேட்டுக் கொண்டே அமர்ந்த ரெங்க்நாதன் அருகில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து முழுக்கக் காலியான பிறகே கீழே வைத்தான்.

நண்பர்கள் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவன் கையில் இவான் துர்கனேவின் மூன்று காதல் கதைகள் நாவல் இருந்தது.

சில முறை சந்திப்பிலும் நண்பர்களின் அனுபவங்களைக் கேட்டதிலும் ரெங்கநாதனைப் பற்றிய முழு பிம்பம் கிடைத்தது.

ரெங்கநாதன் நல்லவன். ஆனால் சற்று உன்மத்தமானவன். விதண்டா வாதங்கள் புரிபவன். கொஞ்சம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவனுடன் பேசுவது சண்டையில் முடிந்து விடும். அவன் எதையும், எவரையும் துச்சமாக மதிப்பவன்.

புத்தகம் இல்லாத கையோடு அவனைப் பார்க்கவே முடியாது. அவைகளையெல்லாம் அவன் படிப்பதே இல்லை என்று சொல்வார்கள். அவன் கைகளில் வைத்திருக்கும் புத்தகத்தைப் ஏற்கனவே படித்தவர்கள் அவனிடம் அதைப் பற்றி எப்போது பேசினாலும் இன்னும் படித்து முடிக்கல என்றே பதில் வரும்.

திரைப்படங்களைப் பற்றியோ, கதைகள் பற்றியோ ஒன்றும் பேச மாட்டான். அவனை யாராவது கேலி செய்தாலோ, அறிவுரை கூறத் தொடங்கினாலோ அவர்களை ஒருமையில் அழைத்துச் சண்டையில் தான் முடிப்பான். சண்டை என்றால் கை கலப்பல்ல. தெளிவற்ற வார்த்தைகளைக் குவியலாய்க் கொட்டுவான். உலகம் பெரியது, நீ சிறியவன் என்று முடிப்பான்.

ரெங்கநாதன் அடிக்கடி ‘ ஜெயிச்சிருவோம்ல’ என்று கூறுவான். அதற்கான எந்த முன்னேற்பாடும் முயற்சியும் அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் ‘ ஜெயிச்சிருவோம்ல’ என்று சொல்லும் போதே அவன் நம்பிக்கையோடு தான் சொல்கிறானா என்று சந்தேகம் கட்டாயம் தோன்றும்.

அதே போல அவனுக்குத் தேவையென்றால் யாரிடம் வேண்டுமானாலும் கடன் கேட்பான். அதைக் கடன் என்றும் சொல்ல முடியாது காசு கேட்பான். திருப்பிக் கொடுப்பதை பற்றிச் சிந்தித்தால் அல்லவா கடன். ரெங்கநாதன் வரையறைக்கு உட்படாதவன். ஆனால் ரெண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்று சிறிய தொகையைத் தான் கேட்பான்.

நானும் அவனும் ஒருமுறை தனியே சந்திக்கும் போது உங்களுக்கு ஏதாவது காசு வேணுமா? என்று கேட்டான் ரெங்கநாதன். ஏன் கேக்கறீங்க என்று கேட்ட போது சொன்னான் ‘ இல்ல இப்போ ஏங்கிட்ட பத்து ரூபா இருக்கு உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா குடுக்கலாம்னு கேட்டேன் ‘ என்று. அன்றைக்கு அவனின் இன்னொரு முகம் தரிசனமாகியது.

அவன் மீது யாருக்கும் மரியாதை இல்லை. அவன் இயல்பானவன் இல்லை. சிலபேர் அவனைச் சகித்துக் கொண்டிருந்தார்கள். மகாத்மா அறைக்கு வரும் போது ரெங்ககநாதனின் சப்தம் கேட்கிறதா, அவனது செருப்பு கிடக்கிறதா என்று பார்த்து உள்ளே வருவதா இல்லை திரும்பிப் போவதா என்பதை தீர்மானிப்பார்கள் நண்பர்கள் சிலர்.

அவன் யாரிடமும் உதவி இயக்குநர் வாய்ப்புக் கேட்டுப் போனதில்லை. நேராகத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இயக்குநர் வாய்ப்புக் கேட்டுப் போவான். அவனிடம் கதை இருக்கிறதா என்பது யாருக்கும் தெரியாது.

ஒருமுறை ஒரு சம்பவம் நடந்தது. குமாரிடம் நான் கதை சொல்கிறேன் என்று ரெங்கநாதன் அடம்பிடித்து வாய்க்கு வந்தததையெல்லாம் சொல்லி இருக்கிறான். குமார் கதை எழுதுபவர். கதை விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்பவர். அவர் மனம் பொறுக்காமல் ரெங்கநாதா, கதை என்றால் இப்படி இருக்கணும் என்று அவருடைய கதை ஒன்றை அவனுக்கு உதாரணமாய்ச் சொல்லி இருக்கிறார். கிளம்பும் போது ரெங்கநாதன் முகத்தில் கூடுதல் ஒளி. ரெங்கநாதன் புரிந்து கொண்டான். இனி விதவிதமாய்ச் சிந்திப்பான் என்று நிம்மதியாய் அன்று தூங்கினார் குமார்.

அதன் பிறகு குமார் சொன்ன கதையைத் தன்னுடைய கதை என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்ல ஆரம்பித்தான் ரெங்கநாதன். அதை ஒருநாள் மகாத்மாவிடமே சொல்லி இருக்கிறான். மகாத்மா குமாரிடம் அவனை அழைத்து வந்து நடந்ததைச் சொன்னார். குமார் ரெங்கநாதனிடம் இது நியாயமா, அது என் கதை. இதை இனி மேல் மறந்து விடு என்று கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானமாய்ச் சொன்னார். என்ன இருந்தாலும் ரெங்கநாதன் நியாயவான். எனவே உடனே குமாரின் கதையை மறந்து போனான். அதன் பிறகு யாரிடமும் அந்தக் கதையை அவன் சொல்லவே இல்லை.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மகாத்மா அறையில் நண்பர்களெல்லாம் கூடி சமீபத்தில் வெளியான ஒரு படத்தை ஆளுக்காள் வெளுத்துக் கிழித்துக் கொண்டிருந்த போது வந்தான் ரெங்கநாதன். கடைசி வரை அமைதியாய் இருந்து விட்டு எல்லோரும் சேட்டன் கடையில் டீ குடிக்கும் போது சொன்னான் – தனக்குத் திருமணமாகப் போகிறது என்று. உடனே அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கை கொடுத்து வாழ்த்துச் சொல்லி அவனை அனுப்பி விட்டு, அடப்பாவி ஒழுங்கா பேசக் கூட தெரியாதே இவனைக் கட்டிக் கிட்டு அந்தப் பொண்ணு என்ன பாடுபடப் போகுதோ அப்பிடின்னு எல்லோரும் பேசினோம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமம் அவனுக்கு. அவன் யாருக்கும் பத்திரிக்கை கொடுக்கவும் இல்லை. யாரையும் அழைக்கவும் இல்லை. அவன் இயல்பாகவே இயல்பானவன் இல்லை. அப்படித் திடீரெனக் காணாமல் போனான் ரெங்கநாதன்.

அதன் பிறகு அவனைப் பற்றிய தகவல்களே இல்லை.

கிட்டத் தட்ட அவன் திருமணத்தின் ஓர் ஆண்டிற்குப் பிறகு நானும், குமாரும், மகாத்மாவும் ரவி என்ற நண்பணின் கதை விவாத்தில் இருக்கும் போது எப்படியோ ரெங்கநாதனைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது தான் ரவி உங்களுக்குத் தகவல் தெரியாதா நம்ம ரெங்கநாதன் செத்துப் போயிட்டான். ஆறு மாசம் ஆகிருச்சாம், தற்கொலை பண்ணிக்கிட்டானாம் என்று சொன்னான். அதன் பிறகு அன்று கதை விவாதம் நடைபெறவில்லை. ரெங்க நாதனைப் பற்றிய விவாதமாகவே மாறிப் போனது.

என்ன இருந்தாலும் ரெங்கநாதனுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது. அவன் யாருக்கும் நெருக்கமானவன் கிடையாது. யாரும் அவனை நெருங்கவும் முடியாது. அதனால் தான் அவனைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கொஞ்ச காலம் பார்க்கின்ற நண்பர்கள் எல்லாம் இதைப் பற்றியே பேசினோம். விசயம் தெரியாத பொது நண்பர்களுக்கு நாங்கள் சொன்னோம். அவன் மரணம் எல்லோருக்கும் வலித்தது.

அவன் இறந்து ஐந்து வருடங்கள் முடிந்து போனது. எப்போதாவது எங்கள் பேச்சில் அவன் வருவான்.
அவனைப் போலவே ஒருத்தனைப் பார்த்ததும். அவன் நினைப்பாகவே இருந்தது நாள் முழுவதும்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு மகாத்மாவின் அறைக்குப் போயிருந்தேன். குமார் மட்டும் தான் இருந்தார். வழக்கமான விசாரிப்புகள், உரையாடல்களுக்குப் பின் அன்று பேருந்தில் ரெங்கநாதனைப் போலவே ஒருத்தனைப் பார்த்தேன் என்று சொன்னேன். அவரும் ஆர்வமாய் விலாவாரியாக எங்கே எப்போ என்று விசாரித்தார்.

சின்ன மெளனத்திற்குப் பிறகு நிதானமாய்க் குமார் சொன்னார் ‘ நீங்க பார்த்தது ரெங்கநாதனைத் தான். நேத்து இங்க வந்திருந்தான். திரும்பவும் சென்னைக்கு வந்துட்டான். எந்த நாயோ செத்துட்டான்னு புரளியை கிளப்பி விட்டுருக்கான் பாவி’.

ஒன்றும் புரியவில்லை எனக்கு. குமார் நம்பிக்கையானவர் தான் இருந்தாலும் ரெங்கநாதனை நேரில் பார்த்த பிறகு நம்பிக் கொள்ளலாம் என்று தோன்றியது.

மைதானத்தின் வெளியே (offside)

ஈரானியத் திரைப்படங்கள் தொடர்ந்து உலக அளவில் பெரும் கவனிப்பையும், பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருகின்றன.

எளிமையான கதைக் கருக்களை வலிமையாய் பயன்படுத்தி பார்ப்பவர்கள் மனங்களில் அழியாத சுவடுகளாய் உறைந்து விடக் கூடிய சக்தியை பெற்றவைகளாய் இருக்கின்றன ஈரானியப் படைப்புகள்.

ஈரானிய அரசியல் நிலை, மதக் கட்டுப்பாடுகள், கடுமையான தணிக்கைமுறை, இவைகளின் நடுவே, இந்த சாவல்களைத் தாண்டி தனித்துவம் கொண்ட நட்சத்திரங்களாய் ஒளிவிடுகின்றன ஈரானிய திரைப்படங்கள்.

சமீபத்தில் பார்த்து, வியந்து, ரசித்த படம் ஆப் சைட்.

தனது உயரிய படைப்புகள் உலகம் முழுதும் அறியப்படுவரும், தங்கச் சிங்கம் உள்ளிட்ட பெரும் விருதுகளைப் பெற்றவருமான ஜாபர் பஹானியின் ஆக்கம் இது.

வொயிட் பலூன், மிரர், சர்கிள், கிரிமிசன் கோல்ட் போன்ற படைப்புகளைத் தொடர்ந்து 2006 ல் வெளியான படம் தான் ஆப் சைட்.

கிரிகெட், கால் பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளை அரங்கத்தில் இருந்தோ அல்லது தொலைக்காட்சிகளின் நேரலைகளிலோ பார்த்திருக்கிறோம்.

ஆண்களும் பெண்களுமாய் ரசிகர்கள் போடும் கூச்சல்களை, ஆட்டம் பாட்டங்களை, விநோதமான சேஷ்டைகளை, விளையாட்டு வீரர்களின் போஸ்டர்களை ஏந்திப்பிடிப்பவர்களை, வீரர்களைப் போலவே சீருடை அணிந்தவர்களை, தேசிய கொடியை முகத்தில், கன்னத்தில், நெற்றியில் வரைந்தவர்களை, இப்படி இன்னும் எத்தனையோ காட்சிகளை நாம் கண்டிருக்கிறோம்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதிப் போட்டி ஈரானுக்கும், பஹைரைனுக்கும் இடையில் நடைபெறப் போகின்ற தினத்தில் துவங்குகிறது கதை.

ஊரே கோலாகலமாய் இருக்கிறது. விளையாட்டு அரங்கத்தை நோக்கி பல் வேறு வண்டிகளில், ரசிகர்கள், மாணவர்கள் உற்சாகத்துடன் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் அந்தக் கூட்ட்த்திற்குள் தனது மகளைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஒரு தந்தை.

தனது மகளுக் கூட்டத்தோடு கூட்டமாய் விளையாட்டுப் பார்க்கப் போவதாய் வந்த தகவலை அடுத்து அவர் மகளைத் தேடிக் கொண்டு அலைகிறார்.

ஏனென்றால் ஈரானில் பெண்கள் ஸ்டேடியத்தில் விளையாட்டுப் போட்டியைக் காண்பது சட்டப்படி குற்றம்.

மாணவர்கள் செல்லும் இன்னொரு வண்டியில் ஆணைப் போல உடையணிந்து, தலையில் தொப்பி போட்டுக் கொண்டு , முகத்தில்தேசியக் கொடியை வரைந்து கல்லூரி மாணவியைப் போல் உள்ள ஒரு பெண் பயணம் செய்கிறாள். அதை ஒருவன் கண்டுபிடித்து அவளிடம் எங்களோடு உள்ளே வந்து விடு. பிரச்சனை வந்தால் நாங்கள் உதவுகிறோம் என்கிறான். அந்த பெண் அதை மறுத்துவிடுகிறாள்.

வண்டி ஸ்டேடியத்தை அடைகிறது. ஆயிரக் கணக்கானோர் போய் விளையாட்டைக் காணப் போய் கொண்டு இருக்கிறார்கள். அவள் கையிலோ டிக்கெட் இல்லை. என்ன செய்வது என்பதறியாமல் நடந்து கொண்டிருக்கும் போது பார்க்கிறாள். விளையாட்டு வீர்ர்களின் படங்களை விற்கும் ஒருவன் நுழைவு சீட்டை ப்ளாக்கில் ரகசியமாக விற்றுக் கொண்டிருக்கிறான்.

அவள் அவனிடம் நுழைவுச் சீட்டு எவ்வளவு என்று விசாரிக்கிறாள். அவன் எளிதாய் அவள் பெண் என்பதை கண்டு பிடித்து விற்க மறுக்கிறான். கடைசியில் ஏற்கனவே விற்றதை விடவும் பல மடங்கு விலையை உயர்த்தி அநியாய விலை சொல்கிறான். வேறு வழியின்றி வாங்குகிறாள் அந்த இளம் பெண். கூடவே போஸ்டர் வாங்கினால் தான் நுழைவுச் சீட்டு என்கிறான் அவன். அதையும் அநியாய விலைக்கு வாங்கிக் கொள்கிறாள்.

நுழைவாயில்களில் இராணுவ வீரர்கள் நின்று முன்புறம், பின்புறம், என்று உடலைத் தடவிப் பார்த்து சோதனை போடுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பின் மனதை திடப்படுத்திக் கொண்டு வரிசையில் போகிறாள். இவள் முறை வந்ததும், சோதனைக்கு முன்பு கூட்டத்தில் கலந்து ஓட ஆரம்பிக்கிறாள். ஆனாலும் பயனின்றி பிடிபடுகிறாள்.

அந்தப் பெண்ணை இராணுவ வீரனொருவன் இன்னொரு வீரனிடம் கொண்டு போய் ஒப்படைக்கின்றான். விளையாட்டு அரங்கின் உள் நுழை வாயில்களின் ஒன்றின் அருகாமையில் இருக்கிறது அந்த இடம். அவள் போகும் போது ஏற்கனவே 3 பெண்கள் இவளைப் போலவே பிடித்து வைக்கப் பட்டிருப்பதைப் பார்க்க்கிறாள். அவர்களும் இவளைப் போல ஆண் உடையில் இருக்கிறார்கள். அதிலொரு இளம் பெண் அழுது கொண்டிருக்கிறாள்.

உள்ளே விளையாட்டு ஆரம்பிக்கும் ஆரவாரம் கேட்கிறது. பெண்கள் கெஞ்சிப் பார்க்கிறார்கள். இராணுவ வீரன் மறுக்கிறான். உயர் அதிகாரி வந்ததும் உங்களை ஒப்படைக்க வேண்டும் அமைதியாய் இருங்கள் என்கிறான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு இராணுவ வீரன் ஒரு இளைஞனோடு வருகிறான். அருகில் வந்து அவன் சொன்ன பிறகு தான் தெரிகிறது அது இளைஞன் அல்ல ஆண் வேடத்தில் வந்த இன்னொரு பெண்.
புதிதாய் வந்தவள் துணிவு மிக்கவளாக இருக்கிறாள். சிகரெட்டை பற்ற வைக்கிறாள். இராணுவ வீரன் தடுத்தும் கேட்க மறுக்கிறாள். அங்கிருக்கும் இராணுவ வீரன் ஒருவன் நுழை வாயிலில் வழியே விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

எல்லோரும் சேர்ந்து அவனை விளையாட்டை வருணனை செய்யச் சொல்லிக் கேட்கிறார்கள். வேறு வழியின்றி வருணனை செய்கிறான்.

இதற்கிடையில் ஒரு பெண் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கேட்கிறாள். இங்கு பெண்கள் கழிவறை கிடையாது என்று இராணுவ வீரன் மறுக்கிறான். என்னால் முடியாது இப்படியே இங்கேயே சிறுநீர் கழித்து விடுவேன் என்கிறாள். வேறு வழியின்றி ஆண்கள் கழிப்பிடத்திற்கு ஒரு இராணுவ வீரனோடு அனுப்பி வைக்கப்படுகிறாள். அவள் பெண் என்பது தெரியாமல் இருக்க முதலில் பார்த்த இளம்பெண் கையில் வைத்திருக்கும் விளையாட்டு வீரனின் போஸ்டரை அவள் முகத்தில் கட்டி அழைத்துப் போகிறான்.

ஆண்கள் எல்லோரையும் வெளியேற்றி, உள்ளே நுழைபவர்களை தடுத்து அந்தப் பெண்ணை கழிவறைக்குள் அனுப்புகிறான். ஏன் உள்ளே விட மறுக்கிறாய் என்று கேட்பவரிடம் பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் இருக்கிறான்.

கூட்டத்தை அவன் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண் தப்பித்து ஸ்டேடியத்தின் கூட்டத்திற்குள் ஓடிவிடுகிறாள். உடன் வந்த இராணுவ வீரன் தேடிக் கொண்டிருக்கிறான்.

இதற்கிடையில் பெண்களுக்கு பாதுகாப்பாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் இராணுவ வீரனைப் பார்க்க இரண்டு இராணுவ வீரர்கள் வருகிறார்கள். அதில் ஒருவன் அவனுக்குத் தெரிந்தவன். இன்னொருவனைப் பார்த்து இவன் யார் என்று கேட்கும் போது தான் தெரிகிறது இராணுவ உடையில் இருப்பது பெண் என்று.

காத்திருக்கும் பெண்கள் அவளைப் பாராட்டுகிறார்கள். சாதரண வீரனின் உடையைப் போட்டுக் கொண்டு அதிகாரிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்ததால் தான் பிடிபட்டேன் என்கிறாள் அவள். ஆட்டத்தின் முதல் பகுதியைப் பார்த்து முடித்தது பெருமையாய் இருக்கிறது அவளுக்கு. அவளின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டு இருக்கிறது.

கூட்டத்தில் ஓடிப் போன பெண்ணைப் பிடிக்க முடியாமல் தேடி நேரம் கழித்து இராணுவ வீரன் திரும்புகிறான்.

உயர் அதிகாரி வருவதற்குள் எப்படி அவளைப் பிடிப்பது, இல்லை என்றால் தண்டனை நிச்சயம் என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிது நேரத்திற்குப் பின் அந்தப் ஓடிப் போன பெண்ணே திரும்பி வருகிறாள். என்னால் உங்களுக்கு தண்டணை கிடைக்கக் கூடாது என்று தான் வந்தேன் என்கிறாள்.

மகளைத் தேடிக் கொண்டிருந்த தந்தை இராணுவ வீரர்களின் பிடியில் இருக்கும் மகளைப் பார்க்கிறார். கோபப் பட்டு அடிக்கப் போகிறார். இராணுவ வீரன் தடுக்கிறான்.

சிறிது நேரத்திற்கு பிறகு அப்பா இராணுவ வீரனிடம் மகளை கூட்டிச் செல்லலாமா? என்று கேட்கிறார். இராணுவ தலைமை அதிகாரி வந்த பின் தலைமை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டு பிறகு தான் அனுப்ப முடியும் என்கிறான். வேறு வழியின்றி அப்பா கிளம்புகிறார்.

ஆட்டம் முடியும் முன் தலைமை அதிகாரி வருகிறான். அனைவரையும் வேனில் ஏறச் சொல்கிறான்.

நடந்து போகும் நுழைவாயிலின் இடைவெளியில் மைதானம் தெரிகிறது. அப்போதும் தலைமை அதிகாரி தலையை குனிந்த படி வாங்க என்று சொல்கிறான். அதை கண்டு கொள்ளாமல் நடக்கும் போதே சில விநாடிகள் உள்ளே பார்க்கிறார்கள்.

வேனில் 6 பெண்களோடு பட்டாசு வைத்திருந்ததால் சந்தேகத்தால் பிடிக்கப் பட்ட சிறுவன் ஒருவனும் வருகிறான்.

விளையாட்டு முடிய இன்னுக் கொஞ்ச நேரமே இருக்கிறது. வானொலியின் நேரலை கேட்க வேண்டும் என்கிறார்கள் பெண்கள். அதன் ஆண்டெனா சரியில்லாததால் கேட்க முடியவில்லை. இராணுவீரன் வெளியே கை நீட்டி அதை ஆடாமல் பிடித்துக் கொள்ள விளையாட்டின் வருணனையைக் கேட்கிறார்கள். ஈரான் வெல்கிறது.

வழியெங்கும் சந்தோச கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.. வேனில் உள்ள சிறுவன் உள்ளேயே பட்டாசு வெடிக்கிறான். பெண்களும் உடன் வெடிக்கிறார்கள். முதன் முதலில் பார்த்த இளம்பெண் மட்டும் அழுகிறாள். மற்ற பெண்கள் விசாரிக்கிறார்கள்.

சென்றமுறை ஜப்பானுக்கும், ஈரானுக்கும் நடைபெற்ற போட்டியின் போது 6 பேர் இறந்து போனார்கள். அதில் ஒருவன் எனது நண்பன். அவன் இருந்திருந்தால் கட்டாயம் இன்று போட்டியைப் பார்த்திருப்பான். அவனுக்காகத் தான் போட்டியை பார்க்க ஆசைப்பட்டேன் என்று அழுகிறாள். இப்போது ஈரான் வெற்றி அடைந்து விட்டது. உன் நண்பன் இருந்தால் மகிழ்ச்சி அடைவான். நீயும் சந்தோசமாய் இரு என்று அவளை ஆறுதல் படுத்தி அவளையும் சிரிக்க வைக்கிறார்கள்.

வழியில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வேன் நிறுத்தப்படுகிறது. உணவுப் பண்டங்களோடு ஒருவன் உள்ளே ஏறி அனைவருக்கும் கொடுக்கிறான். கொண்டாடிக் கொண்டிருக்கும் மக்களில் ஒருவன் இராணுவீரனை அழைக்கிறான். கூடவே பெண்கள் அனைவரும் இறங்கி அவர்களது உற்சாகத்தில் பங்கேற்கிறார்கள்.

அத்தோடு முடிகிறது திரைப்படம்.

எந்த கோஷமும், கோபப்படுத்தலும் இல்லாமல் ஒரு விமர்சனப்படம்.

இடையில் நாங்கள் ஏன் ஸ்டேடியத்திற்குள் போகக் கூடாது என்று கேட்கும் பெண்களிடம். உள்ளே ஆண்கள் இருக்கிறார்கள். அதனால் பெண்கள் போகக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு பெண், திரையரங்கில் மட்டும் ஏன் ஆண்களோடு பெண்களையும் அனுமதிக்கிறீர்கள். அதுவும் இருட்டுக்குள் என்று கேட்கிறாள். போகிற போக்கில் இப்படி சொல்லப்படுகிற அத்தனை வார்த்தைகளும், செயல்களும் அர்த்தம் பொதிந்ததாய் இருக்கின்றது இத்திரைப்படத்தில்.

லட்சம் பேர் கூடி இருக்கின்ற ஸ்டேடியத்தில் அந்தப் பெண்களோடு நாமும் வெறு சப்தமாகவே விளையாட்டைக் காண்கிறோம் படம் முழுவதும்.

பெர்லின் உலகப் படவிழாவில் பெற்ற வெள்ளிக்கரடி விருது பெற்றது இப்படம். மேலும் பல படவிழாக்களிலும் விருதுகள் பெற்றுள்ளது.

படைப்பு என்பது வெறு பொழுது போக்கு மட்டுமல்ல என்பதை அறிந்த ஜாபர் பனாஹி என்ற முதுகெலும்புள்ள இயக்குநரின் திரைப்படம் இது.

இதன் பிறகு 2010 ல் ஈரானிய அரசால் அரசியல் காரணங்களுக்காக பனாஹி கைது செய்யப்பட்டார். 6 வருடம் சிறை தண்டனை. 20 வருடங்களுக்கு திரைப்படம் எடுக்க, கதைகள் எழுத தடை. அதோடு நாட்டை விட்டு வெளியே செல்லத் தடை, பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கத் தடை என்று தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது உலகம் முழுவது உள்ள திரைப் படைப்பாளிகள், பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், என்று அனைத்து தரப்பும் பொங்கி எழுந்து கண்டனம் தெரிவித்தார்கள். அதன் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 2011 ல் நடக்க இருக்கும் பெர்லின் திரைபட விழாவின் நடுவர்களில் ஒருவராக பனாஹிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் வராவிட்டாலும் அவருக்கான இடம் அப்படியே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 5 படங்களும் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன.

இத்தனை கட்டுப்பாடுகள் மற்றும் போராட்டங்களோடு தான் உலகின் சிறந்த இயக்குநர்கள் தங்களின் அழிவற்ற படைப்புகளை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

’அங்காடித் தெரு’ தமிழ் திரையில் ஒரு அரிய சாதனை

அங்காடித் தெரு தமிழ் திரையில் ஒரு அரிய சாதனை.

சவாலான ஒரு கதைக் களனை மிகுந்த அக்கறையோடும், கலை உணர்வோடும், அனைவரும் உணரும் வண்ணமும் சாதனையாக்கி இருக்கிறது அங்காடித் தெரு.

நாம் பலமுறை பார்த்த வாழ்வின் நம் பார்வை படாத இருள் பகுதிகளில் ஒளி பாய்ச்சி உண்மை உணர்த்துகிற படம்.

ரெங்கநாதன் தெருவில் பலமுறை நாம் பல்வேறு முகங்களை மட்டும் பார்த்துத் திரும்பி இருக்கிறோம். அவர்களுக்குள் இருக்கும் இதயத்தையும் பார்க்க வைத்திருக்கிறது இப்படம்.

கணக்கற்ற தடவைகள் அங்காடி தெரு என்று அழைக்கப்படும் ரெங்கநாதன் தெருவுக்குள்ளும், அதன் பிரமாண்ட கட்டிடங்களுக்குள் ஏறி, இறங்கி இருந்தாலும் எத்தனை பேர் உணர்ந்திருக்க முடியும் அந்த நுட்பமான உலகத்தை. அந்த தெருவின் வாழ்வை, வலியை, நம்பிக்கையை, காதலை, நட்பை, துரோகத்தை, அவை அனைத்தையும் நமக்கு காட்சிகளாக உணரத் தருகிறது ‘ அங்காடித் தெரு’.

இப்படத்தை பார்த்த பிறகு ரெங்க நாதன் தெருவுக்குள் நுழையும் மனிதன் முழுக்க முழுக்க தனது முந்தைய மனநிலையில் இருந்து முற்றிலும் மாறான மாறுதலோடே நடந்து கொள்ள முடியும்.

ரெங்க நாதன் தெருவில் லிங்குவையும், கனியையும் மட்டுமே இனி பார்க்க முடியும் நம்மால். சம்பளத்தின் நிமித்தம் நம்மிடம் பூக்கும் புன்னகைகளின் பின்னால் உள்ள வலிகளைகளையும், எத்தனை மணிநேரம் இப்படி நிற்கிறார்களோ என்ற உணர்தலையும் நம்மிடம் இன்னும் ஆழமாய் விதைத்திருக்கிறது படம்.

அந்த வியாபார உலகின் சிறு சிறு அங்கங்களைக் கூட போகிற போக்கில் ஹைகூவைப் போல, ஒரு சிறுகதை போல சொல்லிச் செல்கிறது அங்காடித் தெரு.

படம் பார்த்து திரும்பும் போது ஒரு நல்ல நாவலை படித்த திருப்தியுடன் திரும்ப முடிகின்றது.

இயல்பான நடிப்பு, உணர்ச்சிகரமான கதைக் களன், தொழிழ் நுட்ப நேர்த்தி, நல்ல படம் பண்ண வேண்டும் என்கிற அக்கறை, ரசிகர்கள் மேல் உள்ள நம்பிக்கை என்று தமிழ் திரையுலகம் தழுவி முத்தமிட்டு வரவேற்க வேண்டிய படம்.

இதன் வெற்றி தமிழ் திரையுலகம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானிப்பது.

வசந்த பாலனின் அர்ப்பணிப்பிற்கும் , அவரோடு இணைந்து இயங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்களை ரசிகர்கள் இப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அங்காடித் தெருவுக்கு வாழ்த்துக்கள்.

சிறந்த இந்திய குறும்படமாக ‘ நடந்த கதை’ தேர்வு

தீபிகா மற்றும் தமிழக செய்தி ஊடகத்துறையும் நடத்திய சர்வதேச குறும்படவிழா (ISFFI 2010 ) மார்ச் 20, 21ம் தேதிகளில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடந்து முடிந்தது.

இந்தப் போட்டியில் 29 நாடுகளைச் சேர்ந்த 420 குறும்படங்கள் கலந்து கொண்டன.

இறுதி போட்டிக்கு 70 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அனிமேசன் படங்கள், ஆவணப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

70 படங்களும் 20-21 தேதிகளில் காலை முதல் மாலை வரை திரையிடப்பட்டன.

பெரும்பாலும் காட்சி ஊடகத்துறை மாணவ, மாணவிகளால் நிறைந்திருந்தது ஆல்பர்ட் தியேட்டர்.

போட்டிகள் 2 பிரிவாக நடைபெற்றது. சர்வதேச அளவிலான படங்களுக்கான போட்டி மற்றும் இந்திய

அளவிலான குறும்படங்களுக்கான போட்டி என்று நடைபெற்றது.

ஸ்பெயின், ஆஸ்திரிலேயா, அமெரிக்கா, ஹங்கேரி, இங்கிலாந்து பிரஞ்ச், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா,
சுவிஸ்சர்லேண்ட், கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டன.

இந்திய அளவிலான போட்டிகளில் கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா,

குஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து குறும்படங்கள் கலந்து கொண்டன.

இந்திய அளவில் சிறந்த குறும்படமாக தமிழ் குறும்படமான ‘ நடந்த கதை’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருது
அளிக்கப் பெற்றது.

இது நடந்த கதை வெளியான 6 மாதங்களுக்குள் அது பெறும் 5 வது விருது ஆகும்.

’ நடந்த கதை ’ பொன்.சுதாவாகிய என்னால் திரைக்கதை,வசனம் எழுதி இயக்கப்பட்ட 21 நிமிட
குறும்படம்.

இதன் கதை அழகிய பெரியவன். அவர் எழுதிய ’குறடு’ சிறுகதையே ‘ நடந்த கதை’ யாக உரு மாற்றம்
ஆனது.

இப்படத்தை அருள் சங்கர் தயாரித்துள்ளார். நிறுவனம் நண்பர்கள் திரைகுழுமம்.

ஒளிப்பதிவாளர் இராசாமதி ( சக்கரைக்கட்டி, சித்து +12, பேசு, குறுநில மன்னர்கள்).

படத்தொகுப்பு ஏ.எல். ரமேஷ் ( நாடோடிகள்)

இசை மரியா மனோகர் ( நாயகன் மற்றும் ஈழம், நேதாஜி தொடர்)

கதை சொல்லியின் குரல்- கவிஞர். அறிவுமதி.

கதை நாயகன் கருணாகர்.

நடந்த கதையில் இடம் பெற்ற அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும், மற்றும் இதன் வெற்றிக்குத் துணை நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் இதயம் நெகிழ்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக் குறும்படத்தை காண விரும்புவர்கள் இதன் குறுந் தகடை வாங்கிப் பயன் பெறலாம்.

நடந்த கதையின் குறுந்தகடு சென்னையில் நியூ புக் லேண்ட்ஸ், டிஸ்கவரி பிக் பேலஸ் போன்றவற்றில் பெறலாம்.

கோவையில் விஜயா பதிப்பகத்தில் கிடைக்கும்.

தபாலில் பெற விரும்புபவர்கள் – 9444324316 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள ponsudhaa@gmail.com என்ற முகவரியைப் பயன்படுத்தவும்.

‘சிவப்பு பலூன்’ குறும் படம் – ஓர் அற்புத அனுபவம்

சிவப்பு பலூன் (The Red Balloon ) 34 நிமிடங்கள் ஓடக் கூடிய பிரஞ்ச் குறும்படம். 1956 ல் வெளியான படம். அந்த வருடத்தில் சிறந்த குறும்படத்திற்கான கேன்ஸ் அவார்ட் மற்றும் ஆஸ்கர் அவார்டையும் வென்றுள்ளது இப்படம்.

இதன் இயக்குநர் ஆல்பர்ட் லமொரீஸ் (Albert Lamorisse). லமொரீஸ் ஒளிப்பதிவாளராக இருந்து 40 வயதுக்குப் பின் குறும்படங்கள், ஆவணப்படங்களை இயக்கத் துவங்கி இருக்கிறார். ஒரு ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். சிகப்பு பலூனில் லமொரீஸின் மகனே முக்கிய கதாபாத்திராமாய் நடித்துள்ளான்.

வெளியாகி 54 வருடங்கள் கடந்த பின்பும் இன்று பார்க்கும் போதும் ஒரு புதிய உலகை திறந்து விடக் கூடிய பரவசமான, மகிழ்வான அனுபவமாய் இருக்கிறது சிவப்பு பலூன்.

அற்புதங்களுக்கும் மாயங்களுக்கும் மனித மனம் பன்னெடும் காலமாய் ஏங்கிக் கிடக்கிறது. அதன் காரணமாகத் தான் உலகெங்கும் மாயக் கதைகள் குவிந்து கிடக்கின்றன. பறக்கும் குதிரைகள், பேசும் மிருகங்கள், நினைத்ததை உடனே தரும் கற்பக மரம், பாற்கடல், இப்படி கதைகளில் மனிதன் உண்டாக்கிய கற்பனை சிருஷ்டிகள் ஏராளம்.

குழந்தைகளின் கற்பனைகள் எல்லையற்றது. எந்த எழுத்தாளனும் , கவிஞனும், கதை சொல்லியும் குழந்தைகளின் கற்பனைக்கு முன்னே தோற்றுப் போகவே நேரும். அவர்களோடு தான் பொம்மைகள் கூட பேசுகின்றன. அவர்களின் கதைகளை கேட்கின்றன, நட்பு கொள்கின்றன, உறவாடுகின்றன. வானமும், மலைகளும், நதிகளும், கடல்களும் கூட அவர்களுக்கு விளையாட்டுத் தோழர்களாகின்றன.

’சிவப்பு பலூன்’ ஒரு சிறுவனுக்கும் ஒரு சிவப்பு பலூனுக்குமான உறவைப் பற்றிய கதை.

4 அல்லது 5 வயது சிறுவன் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பெரிய சிகப்பு பலூன் விளக்குக் கம்பத்தில் கட்டி இருப்பதைப் பார்கிறான். விளக்குக் கம்பத்தில் ஏறி பலூனை எடுக்கிறான். பலூனை கைகளில் பிடித்த படி மகிழ்வோடு தெருக்களில் நடக்கிறான்.

பலூனை கைகளில் பிடித்த படியே பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறான். அவன் வழக்கமாய் பள்ளிக்குப் போகும் பேருந்து வருகின்றது. பேருந்தில் கூட்டமாய் இருக்கிறது. பலூனிடன் ஏற முயற்சிக்கும் சிறுவனை நடத்துநர் நிறுத்துகிறார். பலூனை விட்டு விட்டு ஏறச் சொல்கிறார். அவன் பலூனை இழக்க மனமில்லாமல் நிற்கிறான். பேருந்து கிளம்புகிறது. அவன் மனம் தளராமல் பலூனை கைகளில் பிடித்த படி பள்ளியை நோக்கி ஓடத் துவங்குகிறான்.

பள்ளிக்குள் சென்றதும் பலூனை என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. அங்கிருக்கும் வாயில் காப்போனிடம் மாலை வரை பத்திரமாய் வைத்திருங்கள் என்று ஒப்படைக்கிறான்.
மாலை பள்ளி முடியும் போது மழை பெய்கிறது. சிறுவன் பலூனை நனையாமல் எப்படி கொண்டு போவது என்று யோசிக்கிறான். குடையோடு போகும் ஒவ்வொருவரிடம் ஒண்டிக் கொண்டு பலூனை மட்டும் குடைக்குள் நனையாமல் வைத்து விட்டு சிறுவன் நனைக்கிறான். பல்வேறு குடைகளில் தஞ்சமடைந்த பின் வீடு சேர்கிறான்.

நிறைய வீடுகளை கொண்ட, நிறைய மாடிகளைக் கொண்ட கட்டிடம் அது. உயரத்தில் இருக்கும் அவனது வீட்டு சன்னலின் வழி அவனது தாயார் பலூனை தூக்கி எறிந்து சன்னலை சாத்துகிறாள்.
சிறிது நேரம் கழித்து சிறுவன் அறையின் சன்னலைத் திறக்கிறான் அங்கேயே காத்துக் கொண்டிருக்கிறது அவனது சிவப்பு பலூன். உயரத்தில் இருக்கும் பலூனை அவனால் பிடிக்க முடியவில்லை. கைகளை நீட்டுகிறான் பலூன் தானாய் இறங்கி அவனது கைகளுக்குள் வருகின்றது.

மறுநாள் காலை பள்ளி கிளம்பும் போது பலூனிடம் ஏதோ சொல்லி சன்னலில் வெளியே விடுகிறான் சிறுவன். அவன் பல மாடிகள் இறங்கி வந்து சேரும் போது அவனிடம் வருகிறது பலூன். அவன் போகும் வழியெல்லாம் அவனுடனேயே போகின்றது. வழியெல்லாம் பலூனுடன் விளையாடி படியே போகிறான். பலூனும் அவனுடன் விளையாடுகிறது.

பேருந்து நிறுத்தில் பலூனுடன் நிற்கிறான். பேருந்து வருகின்றது. அவன் பலூனை பறக்க விட்டு பேருந்தில் ஏறுகிறான். பலூன் பேருந்தை பின் தொடர்கிறது செல்கிறது.

பள்ளிக்குள் செல்லும் முன் அவன் பலூனை வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டுப் போகிறான். சிறிது நேரத்திற்குப் பிறகு பலூன் பள்ளியின் சுவரைக் கடந்து உள்ளே வருகின்றது. அதைப் பார்த்து பல சிறுவர்கள் பிடிக்க ஓடுகின்றனர் ஆனால் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் பலூன் தப்பிக்கின்றது. சிறுவனைத் தேடி அவனின் வகுப்பறைக்குள்ளேயே நுழைந்து விடுகின்றது. மாணவர்களும், ஆசிரியர்களும் அதைப் பிடிக்க முயற்சி செய்ய யாருக்கும் மாட்டாமல் தப்பிக்கின்றது சிவப்பு பலூன்.

பலூனுக்கும் அவனுக்குமான சிநேகம் சில பெரிய மாணவர்களின் கண்களை உறுத்துகின்றது. அவனிடமிருந்து பலூனைக் கைப்பற்ற முயற்சி செய்து ஒரு முறை துரத்துகிறார்கள். பலூனும் சிறுவனும் தப்பிக்கின்றார்கள்.

ஒரு முறை கடையில் ஏதோ பொருள் வாங்க நுழையும் சிறுவன் பலூனை வெளியே விட்டுச் செல்கிறான். காத்திருக்கும் பலூனை, முன்பு பிடிக்க முயற்சித்து தோற்றுப் போன சிறுவர்கள் மறைந்திருந்து கைப் பற்றுகிறார்கள்.

கடைக்குள்ளிருந்து திரும்பும் சிறுவன் பலூனை காணாமல் தேடுகிறான். பலூனைத் திருடியவர்கள் பலூனை ஒரு இடத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து உடைக்க முயற்சிக்கிறார்கள். சிறுவன் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறான். பலூனைக் காப்பாற்ற போராடுகிறான். ஒருவனின் கல் பட்டு பலூனில் இருந்து காற்று வெளியேறத் துவங்குகின்றது. பலூனை கீழே பிடித்து இழுத்து மிதித்து உடைக்கிறான் ஒருவன். பலூன் வெறும் ரப்பர் துண்டாய் கீழே விழுகின்றது. சிறுவனும் பலூனும் மட்டும் தனித்திருக்க அவைவரும் ஓடி விடுகின்றனர். சிறுவன் பலூனைப் பார்த்து கண் கலங்கத் துவங்குகிறான்.

மீதியை வெண்திரையில் அல்லது டிவீடியில் காண்க என்று சொல்லலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு கிட்டாதவர்களுக்காக முழுவதும் சொல்வது தானே நியாயம்.

பிறகு தான் நிகழ்கிறது அற்புதம். ஊரில் சில சிறுவர்கள் கையில் வைத்திருந்த பலூன்கள் எல்லாம் அவர்களின் கைகளை விட்டுத் தானாய் பறக்கத் துவங்குகின்றன. ஒரு பலூன் விற்பனையாளனின் கைகளிலிருந்த பலூன்கள் பறக்கத் துவங்குகின்றன. இப்படி ஊரில் உள்ள பலூன்கள் எல்லாம் ஒன்று கூடி அணி வகுப்பு நடத்துகின்றன. பல்வேறு இடங்களைக் கடந்து அத்தனை பலூன்களும் சிவப்பு பலூனை இழந்து அழும் சிறுவனின் முன்னால் இறங்குகின்றன. அத்தனை பலூன்களையும் ஆச்சரியத்தோடு பார்க்கிறான். அந்த பலூன்களைப் பிணைத்திருக்கும் கயிறுகளையும் ஒன்றாக்கிப் பிடிக்கிறான். அத்தனை பலூன்களும் அவனைத் தூக்கிக் கொண்டு ஃபேரசூட் மாதிரி வானில் பறக்கின்றன. அவன் மகிழ்வோடு பறந்து உயரே உயரே போகிறான்.

இடையில் ஒரு காட்சியில் சிறுவன் பலூனோடு நடக்கும் போது ஒரு சிறுமி நீல பலூனோடு கடந்து போகிறாள். உடனே சிவப்பு பலூன் சிறுவனிடமிருந்து நீல பலூனைப் பின் தொடர்ந்து செல்கிறது. சிறுவன் போய் பிடித்து வந்து நடக்கத் துவங்கும் போது நீல பலூன் சிறுமியை விட்டு சிறுவனோடு வருகின்றது. சிறுமி ஓடி வந்து நீல பலூனை பிடித்துப் போகிறாள்.

ஒவ்வொரு மனிதனின் ஆசைகளும் கனவுகளும் வெவ்வேறு நிறமான பலூன்களாய் அவனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அழகான கதையும். இயல்பான நம்பகத் தன்மையுடன் கூடிய படமாக்கலும், ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பாராத நிகழ்வுகளின் வியப்பும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாத புதுமையாய் அழியாத அற்புதமாய் என்றென்றும் ’சிவப்பு பலூனை’ வாழ வைக்கும்.

ஹைக்கூத் தோட்டம்- 58

பெரும் மழைநாள்
தனிமையில் குளிக்கிறது
மலை அருவி.

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்